Published:Updated:

லார்ட்ஸில் கபில்தேவின் படை இங்கிலாந்தை வீழ்த்திய முதல் டெஸ்ட்... 35 ஆண்டுகால கொண்டாட்டத்தின் கதை!

லார்ட்ஸ் வெற்றி
லார்ட்ஸ் வெற்றி ( ICC/Twitter )

1986 இங்கிலாந்து சம்மரின் முதல் போட்டியே இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. அதன்படி, ஜுன் 5-ம் தேதி இந்த போட்டி தொடங்கியது.

'ஹோம் ஆஃப் கிரிக்கெட்' என்றழைக்கப்படும் இங்கிலாந்தின் பழம்பெருமைமிக்க லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு கோயில் போன்றது. லார்ட்ஸ் பால்கனியில் வெற்றிக்களிப்போடு நின்று பெருமிதமாக ரசிகர்களை நோக்கி கையசைக்க வேண்டும் என்பது அனைத்து அணிகளுக்கும் ஒரு கனவாகவே இருக்கும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், லார்ட்ஸில் ஒரு போட்டியை வெல்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

லார்ட்ஸ் மைதானத்தை ஒரு தனிப்பெரும் கௌரவமாக போற்றும் இங்கிலாந்து அணியை அதற்கு வீழ்த்தியாக வேண்டும். 1932-ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய இந்திய அணியால் 54 ஆண்டுகளாக லார்ட்ஸில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்லமுடியவில்லை. இந்நிலையில் 1986-ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்போனது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய அணி கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்டவுடன் முதன்முதலாக இங்கிலாந்துக்கே பயணப்பட்டது. அங்கே இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் வைத்தே இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது. போர்பந்தர் மகாராஜா தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றிருந்தாலும் இந்த போட்டியில் சில காரணங்களால் அவரால் ஆட முடியவில்லை. அவருக்கு பதிலாக சி.கே.நாயுடுவே இந்திய அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். வரலாற்றில் முதல் முறையாக அதுவும் லார்ட்ஸில் இந்திய அணி ஆடிய முதல் போட்டியில் தோல்வியே அடைந்திருந்தது. 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வென்றிருந்தது இங்கிலாந்து.

கபில்தேவ்
கபில்தேவ்

1932-க்குப் பிறகு இந்திய அணி ஒவ்வொரு முறை இங்கிலாந்து செல்லும்போதும் லார்ட்ஸில் வைத்து போட்டிகள் நடைபெறவே செய்தன. ஆனால், இந்தியாவின் தோல்வி மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. 1971-ல் இந்திய அணி இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் சீரிஸை வென்றது. அப்போதும் லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியை இந்திய அணி வென்றிருக்கவில்லை. 1932-க்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இதில் 8 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 2 போட்டிகளை மட்டும் டிரா செய்திருந்தது. லார்ட்ஸில் தொடர்ந்த அணியின் சோகம் முடிவுக்கு வர கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் தேவைப்பட்டது. 1986-ல் கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்து சென்றிருந்த இந்திய அணியே லார்ட்ஸில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

80-களின் இடைப்பகுதி இந்திய அணிக்கு பொற்காலமாக அமைந்திருந்தது. 1983-ல் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 1985-ல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்றது. இந்த வரிசையில்தான் 1986-ல் லார்ட்ஸ் வெற்றியையும் சாத்தியப்படுத்தியது. அரைநூற்றாண்டு காத்திருப்புக்கு பிறகு லார்ட்ஸ் பால்கனியில் இந்திய அணி வெற்றிக் கொண்டாட்டத்தை நிகழ்த்திய நாள் ஜூன் 10. நேற்றோடு 35 ஆண்டுகள் நிறைவடைகிறது.

1986 இங்கிலாந்து சம்மரின் முதல் போட்டியே இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. அதன்படி, ஜுன் 5-ம் தேதி இந்த போட்டி தொடங்கியது.

டேவிட் கவர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் க்ரஹாம் கூச், மைக் கேட்டிங், ப்ரிங்கிள் போன்ற பிரபலமான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியிலும் கவாஸ்கர், திலீப் வெங்சார்க்கர், அசாருதின், ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

லார்ட்ஸில் தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தது. க்ரஹாம் கூச்சும் டிம் ராபின்சனும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். கபில் தேவ், ரோஜர் பின்னி, சேத்தன் ஷர்மா இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களும் அட்டாக்கை தொடங்கினர். முதல் செஷனில் இந்திய அணியின் வேகப்பந்து அட்டாக்கை கூச்சும் ராபின்சனும் விக்கெட் விடாமல் சிறப்பாகவே எதிர்கொண்டனர். ஸ்பின்னரான மணீந்தர் சிங் வந்த பிறகே இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது.

கூச்சுடன் நன்றாக பார்ட்னர்ஷிப் போட்டிருந்த டிம் ராபின்சன் 35 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு க்ரீஸுக்கு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் டேவிட் கவர் 18 ரன்களில் வெளியேறியிருந்தார். ஆனால், ஓப்பனரான க்ரஹாம் கூச் ஒரு எண்ட்டில் நிலைத்து நின்று இந்திய அணியின் அட்டாக்கை நன்றாக எதிர்கொண்டிருந்தார். நம்பர் 6-ல் வந்த ப்ரிங்கிளும் கூச்சுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்தார். லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 6 முறை சதமடித்திருக்கிறார் க்ரஹாம் கூச். லார்ட்ஸில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இன்று வரை க்ரஹாம் கூச்தான் முதல் இடத்தில் இருக்கிறார். கூச் அடித்த 6 சதங்களில் ஒன்று இந்த போட்டியில் அடிக்கப்பட்டது.

ஆட்டத்தை முழுக்க இந்தியா பக்கம் திருப்பியது என்னவோ சேத்தன் ஷர்மாதான். ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். மிடில் & லெக் லைனிலிருந்து ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு ஸ்விங்க் செய்வது, லைனுக்கு வெளியே பிட்ச் ஆகி டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்ப்பது போன்ற யுக்திகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை அள்ளினார்.

சதம் அடித்திருந்த க்ரஹாம் கூச் கூட சேத்தன் ஷர்மாவிடம் ஆஃப் ஸ்டம்பை பறிகொடுத்தே வெளியேறினார். இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் எடுத்த சேத்தன் ஷர்மா மூன்று விக்கெட்டுகளை போல்டாக்கியே வீழ்த்தியிருந்தார். சேத்தன் ஷர்மாவின் டைட்டான அட்டாக்குக்கு ரோஜர் பின்னி கொடுத்த ஒத்துழைப்பால் இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி.

கபில்தேவ் - கவாஸ்கர்
கபில்தேவ் - கவாஸ்கர்

இந்திய அணியின் சார்பில் கவாஸ்கரும், ஸ்ரீகாந்த்தும் ஓப்பனர்களாக இறங்கினர். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அவ்வளவு பிரமாதமாக அமையவில்லை. வழக்கம் போல நான்கைந்து பவுண்டரிக்களை அடித்து ஸ்ரீகாந்த் அவுட் ஆக, கவாஸ்கர் 33 ரன்களில் அவுட் ஆனார். இதன்பிறகு, மொஹிந்தர் அமர்நாத்தும் திலீப் வெங்சார்க்கரும் கூட்டணி போட்டனர். இந்த கூட்டணிதான் போட்டியையே மாற்றியது. அமர்நாத் நின்று நிதானமாக விக்கெட் விழாமல் ஆட, திலீப் வெங்சார்க்கர் ரன்சேகரிப்பில் ஆர்வம் காட்டினார். திலீப் வெங்சார்க்கருக்கு லார்ட்ஸ் மைதானம் ரொம்பவே ராசியான மைதானம்.

லார்ட்ஸ் மைதானத்தில் நான்கு போட்டிகளை ஆடியுள்ள வெங்சார்க்கர் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்திருக்கிறார். 1979 சீரிஸில் லார்ட்ஸ் போட்டியில் குண்டப்பா விஸ்வநாத்துடன் சேர்ந்து ஒரு சதம் போட்டு இந்திய அணியை தோல்வியிருந்து மீட்டிருப்பார். அடுத்து 1982-ல் லார்ட்ஸில் 157 ரன்கள் அடித்து பெரிய இன்னிங்ஸ் ஆடியிருப்பார். மூன்றாவதாக இந்த போட்டியிலும் சதமடித்தார். மூன்று முறை லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் தனது பெயரை பதித்திருக்கிறார் வெங்சார்க்கர். லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் அதிக முறை இடம்பிடித்த வெளிநாட்டு வீரர் திலீப் வெங்சர்க்கார் மட்டுமே.

241 பந்துகளை சந்தித்த மொஹீந்தர் அமர்நாத் 69 ரன்களில் வெளியேற, தொடர்ந்து விக்கெட் விழுந்து கொண்டே இருக்கும். நம்பர் 10, 11-ல் இறங்கிய கிரண் மோரே மற்றும் மணீந்தர் சிங்கின் உதவியால் திலீப் வெங்சார்க்கர் லார்ட்ஸ் மைதானத்தில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். லார்ட்ஸ் போன்ற ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் மைதானங்களில் எட்ஜ் வாங்காமல் கவர் டிரைவ் ஆடுவது ரொம்பவே கடினம். ஆனால், இந்த போட்டியில் வெங்சார்க்கர் அதிகமாக கவர் டிரைவ்களைத்தான் அதுவும் கச்சிதமாக ஆடியிருந்தார். பெரும்பாலான பந்துகளை ஆஃப் சைடிலேயே தட்டிவிட்டு இங்கிலாந்தின் ஸ்விங் வியூகங்களுக்கும் பதிலடி கொடுத்தார். 126 ரன்களை எடுத்த வெங்சர்க்கார் கடைசி வரை நாட் அவுட்டாகவே இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 47 ரன்கள் முன்னிலை.

எந்த அணிக்கும் சாதகமில்லாமல் சமநிலையிலேயே போட்டி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்ற நிலையிருந்தது. ஆனால், கபில்தேவ் வீசிய ஒரு ஸ்பெல் எல்லாவற்றையும் மாற்றியது. 47 ரன்கள் முன்னிலையை இங்கிலாந்து அணி தாண்டுவதற்கு முன்பே அந்த அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக காலி செய்தார் கபில்தேவ்.

கிரஹாம் கூச், டிம் ராபின்சன், கேப்டன் டேவிட் கவர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரையும் மூன்றே ஓவரில் வீழ்த்தினார் கபில்தேவ். கபில்தேவின் ஹீரோயிக் சம்பவங்களில் இதுவும் ஒன்றும். ஏனெனில், முதல் இன்னிங்ஸில் அவர் அவ்வளவு சிறப்பாக பந்து வீசியிருக்கவில்லை. ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதுவும் டெய்ல் எண்டருடையது. இரண்டாவது இன்னிங்ஸில் கபில்தேவ் இப்படி வீசுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படி எதிர்பாராத நேரத்தில் அதிசயங்களை நிகழ்த்துவதுதானே கபில்தேவின் தனிச்சிறப்பு. இந்த போட்டியிலும் அதையே செய்தார். பந்தை பிடிக்கும் விதத்தில் நுணுக்கமான வித்தைகளை செய்து இன்ஸ்விங்கர்களையும் கட்டர்களையும் வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

கவாஸ்கர்
கவாஸ்கர்

கபில்தேவ் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத இங்கிலாந்து அணியால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியவில்லை. மிடில் ஆர்டரில் கேட்டிங், ஆலன் லாம்ப் போன்றவர்கள் கொஞ்சம் ரன் சேர்க்க இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 180 ரன்களை தொட்டது. இந்திய அணிக்கு டார்கெட் 134.

கவாஸ்கர், வெங்ச்சார்க்கர் ஆகியோர் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து அவுட் ஆக இந்திய அணி கொஞ்சம் வேகமாக 5 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கபில்தேவ் க்ரீஸுக்குள் வந்தார். லார்ட்ஸில் ஒரு போட்டியை வெல்ல இதைவிட ஏற்ற தருணம் அமையாது. இதில் சொதப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கபில்தேவ். தட்டித்தட்டி உருட்டி உருட்டி அடிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த கபில்தேவ் டி20 ஃபினிஷர் போல ஆடத் தொடங்கினார். 10 பந்துகளில் 23 ரன்கள். 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர். பில் எட்மண்ட்ஸ் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 18 ரன்கள். சாதாரணமாக அல்ல பயங்கர அலப்பறையான முறையில் லார்ட்ஸில் இந்திய அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தார் கபில்தேவ்.

லார்ட்ஸ் வெற்றி இந்தியாவுக்கு ஒரு ஏக்கமாகவும் கனவாகவும் இருந்தது. அது அரைநூற்றாண்டு காலம் கடந்து கபில்தேவின் படையால் சாத்தியப்பட்டது. இதன்பிறகு, 2014-ல் தோனி தலைமையில் இந்திய அணி லார்ட்ஸ் போட்டியை வென்றது. வரலாற்றில் இரண்டே இரண்டு முறை மட்டும்தான் லார்ட்ஸ் வெற்றி இந்திய அணிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.

வருகிற இங்கிலாந்து சீரிஸில் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்துமா?!

அடுத்த கட்டுரைக்கு