Published:Updated:

ஆத்திரங்கள் வருகிறது மக்களே... கோலி அண்ட் கோ-வின் பரிதாபக்கதைகள்! #AUSvIND

62 ரன்களுடன் முன்னிலை வகித்த இந்தியா இன்றைய போட்டியை மயாங்க் மற்றும் பும்ராவுடன் தொடங்கியது. போட்டி ஆரம்பித்த, இரண்டாவது ஓவரில், கம்மின்ஸ் பந்தில் பும்ரா சிக்கினார். நைட் வாட்ச்மேன்தானே அவரது விக்கெட் களப்பலி போல இருக்கட்டும் எனத் தேற்றிக் கொண்டனர் இந்திய ரசிகர்கள். ஆனால்...

2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் 45 நிமிடங்களில் மொத்தக் காட்சிகளும் மாறிப் போனதைப் போல், இன்றைய போட்டியிலும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களில், புயல் புரட்டிப் போட்டதைப் போல் எல்லாமே மாறிவிட்டது. கடந்த வருடம், தொடரை இழந்ததனால் ஏற்பட்ட வன்மத்தை, ஒரு வருடமாய் உள் வைத்திருந்து வெறியேற்றி, ஆஸ்திரேலியா திருப்பித் தர, இந்தியாவிற்கு என்றுமே ஆறாத ரணமாய், அவமானங்களுடன் முடிந்திருக்கிறது அடிலெய்டு டெஸ்ட். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோரான, 36 ரன்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. அதுவும் ரன்மெஷின் கிங் கோலியின் தலைமையில்!

62 ரன்களுடன் முன்னிலை வகித்த இந்தியா இன்றைய போட்டியை மயாங்க் மற்றும் பும்ராவுடன் தொடங்கியது. போட்டி ஆரம்பித்த, இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில், கம்மின்ஸின் பந்தில் பும்ரா சிக்க, சரி, என்ன இருந்தாலும் பும்ரா நைட்வாட்ச்மேனாகத்தானே களம் இறங்கினார், அவரது விக்கெட் களப்பலி போல இருக்கட்டும் எனத் தேற்றிக் கொண்டனர் இந்திய ரசிகர்கள்! ஆனால் இந்தியாவின் வீழ்ச்சிக்கான தொடக்கம் அங்கேதான் ஆரம்பமானது!

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழக்க சீட்டுக்கட்டு சரியத்தொடங்கியது. மயாங்க் அகர்வாலை அடுத்த ஒவரிலேயே ஹேசில்வுட் தூக்க, ஆஸ்திரேலியாவின் ஆட்டம் ஆரம்பமானது! அதே ஓவரிலேயே ஹேசில்வுட், ரஹானேவையும் வெளியே அனுப்ப, கிட்டத்தட்ட அங்கேயே முடிந்து போனது எல்லாமுமே! 15-ல் இருந்த ஸ்கோருக்கு மேல், ஒரு ரன் கூட எடுக்கப்படாமல் பரிதாபமாய் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இந்தியா!

சரி, இது ஒரு சின்ன சரிவு தான், கேப்டன் கோலி இருக்கிறார், அவர் அணியை மீண்டும் மீட்டு விடுவார், தற்போதைய தேவை கோலியுடன் நின்று ஆடுவதற்கு இன்னொரு கை மட்டுமே என நினைத்த ரசிகர்களுக்கு தைரியமூட்டுவதைப் போல் கோலி கம்மின்ஸ் பந்தில் பவுண்டரி அடிக்க, நிமிர்ந்து உட்கார்ந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால் அதற்கடுத்த பந்தைப் பார்த்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான்! அந்தப் பந்தை கம்மின்ஸ் வீச, கோலி அடிக்க, அதை கிரீன் கேட்ச் பிடித்தார்! பந்தைச் சரியாகப் பிடித்தாரா, இல்லை கீழே வைத்தாரா என மூன்றாவது நடுவரிடம் கள நடுவர்கள் உதவி கேட்க, முடிவு வரும் வரை எகிறியது இந்தியர்களின் இதயத் துடிப்பு! ஆனால் அது அவுட் தான் என கிரீனின் கேட்சுக்கு அம்பயர் கிரீன் சிக்னல் போட, ஒட்டுமொத்தமாய்ச் சரிந்து விழுந்தது, இந்தியாவின் சாம்ராஜ்யம். கோலி போனபோதே, போட்டியை ஒட்டுமொத்தமாய் வென்று விட்டது ஆஸ்திரேலியா.

#AUSvIND
#AUSvIND
David Mairuz

எனினும் ஹனுமாவும், சஹாவும் ஏதேனும் மாயம் நிகழ்த்துவார்களா என ஏக்கத்துடன் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது! முதல் செஷனை 26/6 என்ற படு மோசமான ஸ்கோரோடு முடித்திருந்தது இந்தியா. இரண்டாவது செஷனின் தொடக்கத்திலேயே, சாஹா, அஷ்வின் மற்றும் ஹனுமா ஆகிய மூவரையும், ஒருவர் பின் ஒருவராக அனுப்பி, தன்னுடைய ஐந்தாவது விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார் ஹேசில்வுட்!

பொதுவாய் பேட்ஸ்மேன்களுக்கு இடையே நான் அதிக ரன் எடுப்பேனா, நீ எடுப்பாயா என்ற போட்டியைப் பார்த்திருப்போம்! ஆனால் ஹேசில்வுட்டும், கம்மின்ஸும் இன்று யார் அதிக விக்கெட் எடுப்பது என தங்களுக்குள் பந்தயம் கட்டி இறங்கியதைப் போல, போட்டி போட்டுக் கொண்டு விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர்! இவர்களது பீரங்கி பிங்க் பால் தாக்குதலில் இந்தியக் கப்பல் முழுவதும் ஓட்டைகள் விழ, நீர் புகுந்து முழுதாய் மூழ்கிப் போனது! கேப்டன் கோலியால் கூட அதனைக் காப்பாற்ற முடியவில்லை என்பது பெரும் சோகம்.

கடைசியாய் களத்தில் உமேஷும் ஷமியும் நிற்க, ஷமி ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேறியதால், முடிவுக்கு வந்தது இந்திய இன்னிங்ஸ்‌. முடிவாய், டெஸ்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரான 36 ரன்கள் என்பதைப் பதிவேற்றியது இந்தியா! இதற்கு முன் 42 ரன்கள் என்பதே இந்தியாவின் சார்பில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த வேதனையைப் பதிவு செய்திருந்தது இந்தியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அப்போதே வெற்றி வசமாகி விட்டது. எனினும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இந்தியா ஜெயித்து விடாதா எனக் கனவு கண்ட ரசிகர்களுக்கு அது பகல் கனவாகவே முடிந்து போனது!

#AUSvIND
#AUSvIND
David Mairuz

மேத்யூ வேட் மற்றும் லாபுசேன் விக்கெட்டுகளை ஆறுதல் பரிசாக இந்தியா பெற்றுக் கொள்ள, சிக்ஸருடன், தன் கணக்கில் ஒரு அரைச்சதத்தையும் சேர்த்துக் கொண்டு அணியை வெற்றிக் கோட்டைத் தொட வைத்தார் ஜோ பர்ன்ஸ்!

கோலியின் ரன் அவுட்டும் நேற்று விடப்பட்ட கேட்சுகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் புரிய வைத்திருக்கிறது இந்தப் போட்டியின் முடிவு. அதுமட்டுமல்லாமல் பிரித்வி ஷாவின் ஓப்பனிங் இடம் எவ்வளவு முக்கியம் என்பதும் கோலிக்கு இந்நேரம் புரிந்திருக்கும். அடுத்த சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தங்களது தவறுகளை இந்தியா திருத்திக் கொண்டு மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாய் இருக்கிறது. ஆனால், கோலி இந்திய அணியில் இருக்கமாட்டார் என்பதால் வெற்றி என்பது பெரும்சவால்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு