Published:Updated:

100 ஓவர்களுமே இங்கிலாந்து ஆதிக்கம்தான்... இந்தியா தோற்றது எப்படி?!

Kohli

பேர்ஸ்டோவின் சதம் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையானது, வோக்ஸ் வீசிய அந்த 5 ஓவர்கள்!

Published:Updated:

100 ஓவர்களுமே இங்கிலாந்து ஆதிக்கம்தான்... இந்தியா தோற்றது எப்படி?!

பேர்ஸ்டோவின் சதம் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையானது, வோக்ஸ் வீசிய அந்த 5 ஓவர்கள்!

Kohli

இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. காவி ஜெர்சியில் ஆடிய முதல் போட்டியிலேயே பலமாக அடிவாங்கியிருக்கிறது இந்தியா. அரையிறுதிக்குத் தகுதிபெற அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஜெயிக்கவேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்த இங்கிலாந்து, மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸைக் காட்டியிருக்கிறது. இந்த வெற்றிக்கான அடித்தளத்தை டிரஸ்ஸிங் ரூமிலேயே போட்டுவிட்டது மோர்கன் அண்ட் கோ. ஒவ்வொரு கட்டத்திலும் தங்களின் திட்டத்தை மிகத் துல்லியமாக நிறைவேற்றினர் இங்கிலாந்து வீரர்கள். இந்தியாவைவிட இங்கிலாந்தின் கை ஓங்கியது எங்கே? இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது எங்கே?

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்தியாவின்மீது உளவியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது இங்கிலாந்து அணி. இந்திய அணியின் துரதிஷ்டம், 100 ஓவர்களும் இங்கிலாந்தை ஆதிக்கம் செலுத்த விட்டதுதான்! ஆட்டம் தொடங்கியது முதலே தங்களின் திட்டங்களை சரியாகச் செயல்படுத்தத் தொடங்கியது இங்கிலாந்து. 'பும்ரா, ஷமி ஓவர்களில் விக்கெட் விடக்கூடாது. மற்ற 3 பௌலர்களையும் டார்கெட் செய்யவேண்டும்'. இந்திய அணியின் கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதே குல்தீப்பையெல்லாம் ஒரு கை பார்த்துத்தான் அனுப்பினார்கள். அதனால், இந்திய ஸ்பின்னர்களின் மாயச் சுழலுக்கு அவர்கள் அஞ்சவில்லை. அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது நம் வேகப்பந்துவீச்சாளர்களிடம் மட்டும்தான்.

Roy & Bairstow
Roy & Bairstow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து, மற்ற 4 போட்டிகளிலும் முதல் பவர்பிளேவிலேயே இந்தியா விக்கெட் வீழ்த்தியது. முதல் பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தவேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார் கோலி. ஆனால், இங்கிலாந்து ஓப்பனர்கள் ராய் - பேர்ஸ்டோ இருவரும் மிகவும் கூலாக ஆட்டத்தை அணுகினார்கள். சிலபல எட்ஜ்கள் ஆகியிருந்தாலும், ஆட்டத்தை முழு நம்பிக்கையுடன் எதிர்கொண்டனர். அது கோலியை மாற்றி யோசிக்க வைத்தது. ஆறாவது ஓவரில் சஹாலைக் கொண்டுவந்தார். இந்த உலகக் கோப்பையில் அவ்வளவு சீக்கிரம் சுழலைப் பயன்படுத்தியது இந்தப் போட்டியில்தான். அடுத்த ஓவர், பும்ரா. அதுவரை பிர்மிங்ஹம் எண்டில் இருந்து பந்துவீசியவரை, இப்போது பெவிலியன் எண்டுக்கு அழைத்துவந்தார் விராட். விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் அதிலேயே தெரிந்தது. ஆனால், ராய் - பேர்ஸ்டோ ஜோடி தங்கள் திட்டத்தில் தெளிவாக இருந்தது.

6-வது ஓவர் : சஹால் - 7 ரன்கள்
7-வது ஓவர் : பும்ரா - 2 ரன்கள்
8-வது ஓவர் : சஹால் - 9 ரன்கள்
9-வது ஓவர் : பும்ரா - மெய்டன்
10-வது ஓவர் : ஷமி - 1 ரன்
11-வது ஓவர் : ஹர்திக் - 13 ரன்கள்
Bairstow
Bairstow

இந்த 6 ஓவர்களே தெளிவாகச் சொல்லிவிடும் அவர்களின் திட்டத்தை. பும்ரா, ஷமி ஓவர்களில் அடக்கி வாசித்துவிட்டு, மற்றவர்களைக் காலி செய்தனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து இன்னிங்ஸின் சரிபாதியைத் தங்களின் திட்டப்படி எடுத்துச் சென்றது ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ கூட்டணி.

ஒரு விக்கெட் வீழ்ந்து, புதிய பேட்ஸ்மேன் வரும்போது அவர்களை அட்டாக் செய்தால்தான் ஒரு உளவியல் நெருக்கடி ஏற்படும். ரூட் களமிறங்கியதும் கோலி அதைச் சரியாகச் செய்தார். ராய் (57 பந்துகளில் 66 ரன்கள்) அவுட்டான அடுத்த ஓவர், பும்ராவை அழைத்துவந்தார். இந்தியா பரிசளிக்க நினைத்த நெருக்கடியை இந்தியாவுக்குத் திருப்பித் தந்தது இங்கிலாந்து. அந்த ஒரு ஓவர் மிகவும் நிதானமாக ஆடியது பேர்ஸ்டோ - ரூட் கூட்டணி. ஆனால், ரன் எடுத்து பும்ராவுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதை மட்டுமே அவர்களின் திட்டமாகக் கொண்டிருந்தனர்.

Bumrah
Bumrah

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை, பும்ரா ஃபுல் டாஸாக வீசியும், அதில் சிங்கிள்தான் எடுக்கிறார் பேர்ஸ்டோ. கடைசிப் பந்தை யார்க்கராக வீசியும், அதை தேர்ட் மேன் திசைக்குத் திருப்பும்படி ஆடுகிறார் ரூட் (அந்தப் பந்து எட்ஜாகி பவுண்டரிக்குப் போனது தனிக்கதை!). ஆக, அவர்கள் நினைத்தபடி அந்த ஓவரில் ஒரு டாட் பால்கூட இல்லை. போதாததுக்கு 10 ரன்கள். உடனடியாக தன் வேகப்பந்துவீச்சாளர்களை டெத் ஓவர்களுக்கு சேமிக்கிறார் விராட். மீண்டும் ஹர்திக், சஹால், குல்தீப் கூட்டணியையே அழைக்கிறார். அந்த ஒரு ஓவரில், மீண்டும் இந்தியாவை டிஃபன்ஸிவ் கேம் ஆடவைத்தது இங்கிலாந்து.

இந்தக் கட்டத்தில் கோலி செய்த இரண்டு தவறுகள் இந்தியாவை இன்னும் பின்னுக்குத் தள்ளின. மிடில் ஓவர்களில் அனைவர் பந்துவீச்சும் சிதைபடும்போது, குறைந்தபட்சம் ஒரு ஓவராவது ஜாதவுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்திருக்கலாம். இல்லை, அதுவரை 4 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த ஷமியை கொஞ்சம் முன்னமே அடுத்த ஸ்பெல் வீச அழைத்திருக்கலாம். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்த விஷயத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுகொண்டிருக்கிறார். எப்போது விக்கெட் தேவை என்றாலும், டெத் ஓவர்களைப் பற்றி யோசிக்காமல் ஸ்டார்கை அழைக்கிறார். 19-வது ஓவராக இருந்தாலும் சரி, 24-வது ஓவராக இருந்தாலும் சரி, 32-வது ஓவராக இருந்தாலும் சரி. ஸ்டார்க்கை அழைத்துவிடுவார் ஃபின்ச். நேற்று, கோலி அதைச் செய்திருக்கவேண்டும்.

Shami
Shami

விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் ஷமியை, அடுத்த ஸ்பெல் வீச முன்பே அழைத்திருக்கவேண்டும். ஆனால், 32-வது ஓவர்வரை காத்திருந்தார். அப்போதுதான் இரண்டாவது விக்கெட்டை இழக்கிறது இங்கிலாந்து (பேர்ஸ்டோ - 109 பந்துகளில் 111). அந்த 3 ஓவர் ஸ்பெல்லில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திச்சென்றார் ஷமி. இது குறைந்தபட்சம் 5 ஓவர்கள் முன்னால் நடந்திருந்தாலும், ஆட்டத்தில் இந்தியாவின் தாக்கம் அதிகரித்திருக்கும்!

இங்கிலாந்து இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதன் முக்கியக் காரணம், இந்திய ஸ்பின்னர்களின் சுமாரான பர்ஃபாமன்ஸ். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் மோதியது இந்தியா. நாட்டிங்ஹமில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் (சஹால் 1, குல்தீப் 6) விக்கெட்டுகள் வீழ்த்தியது இந்திய சுழல் கூட்டணி. அடுத்த போட்டியில் அது நான்காகக் குறைந்தது (சஹால் 1, குல்தீப் 3). மூன்றாவது போட்டியில் இருவருக்கும் விக்கெட்டே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் இந்திய சுழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டே இருந்தது இங்கிலாந்து. இறுதியில் இவர்களைச் சமாளிக்க இங்கிலாந்து எடுத்தது... 1987-ல் பயன்படுத்திய அதே பழைய ஆயுதம் - ஸ்வீப்! நேற்றும் அந்த ஆயுதத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

Chahal
Chahal

ராய், பேர்ஸ்டோ இருவரும் அதைத்தான் செய்தார்கள். ஸ்வீப் செய்வதற்குத் தோதாக இருக்கும்படி, ஒவ்வொரு பந்திலும் தங்களின் இடது கால்களை மிகவும் 'flexible' ஆக நகர்த்திக்கொண்டே இருந்தனர். சரியான பந்து சிக்கும்போது ஸ்லாக் ஸ்வீப் ஆடினர். தன் ஒருநாள் போட்டி வரலாற்றில், 70 போட்டிகளில் ஐந்தே ரிவர்ஸ் ஸ்வீப் மட்டும் ஆடியிருந்த பேர்ஸ்டோ, நேற்று மட்டும் 3 ரிவர்ஸ் ஸ்வீப்கள் ஆடினார். அதில் பவுண்டரிகளும் அடித்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அதையேதான் செய்தார். ஸ்பின்னர்களை ஸ்வீப் செய்து அப்புறப்படுத்தினார். அதிலும், சஹால் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்ததெல்லாம் உச்சம்..!

முதல் 50 ஓவர்களில், இந்திய ரசிகர்கள் சந்தோஷப்பட நடந்த இரண்டு விஷயங்கள் - ஜடேஜாவின் கேட்ச், பும்ராவின் கடைசி ஸ்பெல். கடைசி 5 ஓவர்களில் 26 ரன்கள்! 10 டாட் பால்கள். ஒரேயொரு பவுண்டரி. கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸ், பும்ராவின் 16 பந்துகளில் அடித்தது 13 ரன்கள்தான். அதிலும், அந்த 43-வது ஓவரில் தொடர்ந்து 3 டாட் பால்கள் வீசியதெல்லாம், வேற லெவல்! ஆனால், இது இங்கிலாந்தின் திட்டத்தில் உட்பட்டதுதான். பும்ராவைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். அதனால், அவரது டெத் ஓவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஷமியை டார்கெட் செய்துவிட்டனர். ஆனால், டெத் ஓவர்களில் ஷமி ரன் கொடுத்ததை பெரிதாகத் தவறு எனச் சொல்லிட முடியாது. அவரது பந்துவீச்சில் அது நடக்கக்கூடும் என்பது நாம் அறிந்ததே. தொடர்ந்து விக்கெட் எடுக்கும் ஒரு பௌலர் ரன் கொடுக்கத்தான் செய்வார்.

சரி, 337 ரன்களை சேஸ் செய்யவேண்டும். எப்படி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கவேண்டும்? ராகுல் நேற்று ஆடிய 9 பந்துகள்... ஒரு உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன் ஆடிய மிகமோசமான இன்னிங்ஸ் என்று சொல்லலாம். ரன் அடிக்கவில்லை, சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஆடிய விதம்..! உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு ஓப்பனிங் ஆடவேண்டிய வீரர் அல்ல அவர். வோக்ஸ் - பர்மிங்ஹம் எண்டில் இருந்து பந்துவீசுகிறார். காற்று எதிர்புறம் வீசுகிறது. பெவிலியன் எண்டில் ஆடுவதுபோல் பந்து ஸ்விங் ஆகாது. எளிதாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், அனைத்தையுமே கடினமாக்கினார் ராகுல். மூன்றாவது ஓவரில் வெளியேறி, மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்திச் சென்றார்.

அவர் ஏற்படுத்திய நெருக்கடியை பல மடங்கு அதிகரித்தனர் இங்கிலாந்து பௌலர்கள். வோக்ஸ் வீசிய முதல் ஸ்பெல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருநாள் போட்டியின் டாப் 2 பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக மெய்டன் ஓவர்களாக வீசித்தள்ளினார். முதல் 5 ஓவர்களில் 3 மெய்டன்கள், 1 விக்கெட். கொடுத்தது வெறும் எட்டே ரன்கள்! ஆர்ச்சர் கொஞ்சம் ரன் கொடுத்திருந்தாலும் அதையெல்லாம் மொத்தமாக ஈடுகட்டினார் வோக்ஸ். சொல்லப்போனால், பேர்ஸ்டோவின் சதம் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையானது, வோக்ஸ் வீசிய அந்த 5 ஓவர்கள்!

Chris Woakes
Chris Woakes

அந்த 10 ஓவர்களில் செய்த சொதப்பல்தான் இந்திய சேஸிங்கில், கடைசிவரை கூடவே வந்தது. 10 ஓவர்களில் வெறும் 28 ரன்கள். அதில் 5 பவுண்டரிகள்... ஆனால் 49 டாட் பால்கள்! முதல் பவர் பிளேவின் 82 சதவிகித பந்துகளை டாட் பாலாக்கினால், எப்படி 300+ ரன்களை சேஸ் செய்ய முடியும்? இந்தியா அங்கேயே பின்தங்கிவிட்டது. மிடில் ஓவர்களில் கோலி (76 பந்துகளில் 66 ரன்கள்), ரோஹித் (109 பந்துகளில் 102 ரன்கள்) விக்கெட்டுகள் மொத்தமாக ஆட்டத்தை இங்கிலாந்தின் கையில் எடுத்துச்சென்றுவிட்டன.

ஆனால், ஹர்திக் ஓரளவு அதிரடி காட்ட, கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் போதும். களத்தில் தோனி, ஹர்திக். நிச்சயமாக இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. நம்பிக்கை கொஞ்சம் துளிர்விட்ட நேரத்தில், அற்புதமான ஒரு பிளானால், ஹர்திக்கை திக்குமுக்காடவைத்தார் மோர்கன்.

Rohit Sharma
Rohit Sharma

ரிஷப் பன்ட் போல், அன்ஆர்தடாக்ஸ் ஷாட்கள் ஆட பாண்டியாவுக்குத் தெரியாது. அதனால் ஃபைன் லெக், தேர்டு மேன் ஃபீல்டர்கள் எல்லையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. அதனால், கடைசி பவர்பிளேவில், பவுண்டரி எல்லைக்குள்ளே இருக்கவேண்டிய 4 ஃபீல்டர்களையும் ஸ்கொயராக நிற்கவைத்தார். மற்ற 5 ஃபீல்டர்களும், டீப் பாயின்ட், டீப் எக்ஸ்டிரா கவர், லாங் ஆஃப், லாங் ஆன், மிட் விக்கெட் என ஹர்திக்கின் ஹாட் ஸ்பாட்டில் நின்றனர். அதுவரை தூக்கி அடிக்காமல், கேப்பில் பவுண்டரி மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பாண்டியாவுக்கு இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. தூக்கி அடித்து விக்கெட் இழக்கவும் மனமில்லை, ஃபீல்டர்களுக்கு நடுவே பவுண்டரி அடிக்கவும் முடியவில்லை. பவுண்டரிகள் குறையத் தொடங்கின. எந்த இடத்திலும் அசராமல் ஆடக்கூடிய பாண்டியாவைத் திக்குமுக்காடவைத்து, அங்கும் ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது இங்கிலாந்து!

பாண்டியா அவுட்டான இடத்திலேயே இந்திய அணி தோற்றுவிட்டது. அதன்பிறகு அதை 50 - 50 போட்டி என்றுகூடச் சொல்ல முடியாது. கடைசி 5 ஓவர்களில் ரன்களே இல்லை. ரன் அடிக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. இந்திய பேட்ஸ்மேன்களிடம் அது எதிர்பாராத ஒன்றுதான். அதைப் பற்றி என்ன சொல்வது. கங்குலியைப்போல், "I have no explanation for that" என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அதைத் தோல்வியின் காரணமாகச் சொல்லிவிடமுடியாது. அதற்கு முன்பே இந்தியா பல இடங்களில் பின்தங்கிவிட்டது. 95 ஓவர்கள் பின்தங்கிய ஒரு அணியால், 5 ஓவர்களில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது.

Morgan
Morgan

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என ஒவ்வொரு ஏரியாவிலும் பிளான் செய்து தாக்கிய மோர்கன் அண்ட் கோவைத் தவிர்த்து, இந்தியா தோற்றதற்குக் காரணம் அவர்கள் செய்த இரண்டு தவறுகள்

100 ஓவர்களும் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்தது.
இங்கிலாந்து பேட்டிங்கின், முதல் பவர்பிளேவுக்குப் பிறகு, எதிரணி வீரர்கள்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அடுத்த 90 ஓவர்கள் விளையாடியது.