Published:Updated:

கோலிதான் இந்தியாவின் மிக மோசமான கேப்டனா... தொடர் தோல்விகள் சொல்வது என்ன?!

Virat Kohli
Virat Kohli ( AP )

இங்கிலாந்து தொடர் முடியும்போது கோலியின் கேப்டன்ஸி தொடருமா, இந்தியாவுக்கு அதிகப்போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்கிற பெயர் கோலிக்குக் கிடைக்குமா என்பதெல்லாம் வரும் மூன்று போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுகிறது, கோலி என்ன செய்கிறார் என்பதைப் பொருத்ததுதான்.

"கோலியிடம் வெற்றிக்கான தந்திரங்கள் எதுவும் இருப்பதுபோல் எனக்குத்தெரியவில்லை. அவர் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிப்பவராக இல்லாமல் பின்தொடர்பராகவே இருக்கிறார்!"
நாசர் உசேன், முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

மீண்டும் ஒருமுறை கோலியின் கேப்டன்ஸி மீதான சந்தேகங்கள், விவாதங்கள், விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்தமுறை எப்போதும்போல விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் கோலியே கடந்துவிடமுடியாது. காரணம், அஜிங்கியா ரஹானே என்பவர் ஆஸ்திரேலியாவில் ஒரு கேப்டனாகத் தன்னை நிரூபித்துவிட்டார். மாறாக கோலியோ கடைசியாகத் தான் தலைமையேற்று விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். நான்கு தோல்விகளுமே அவமானகரமானத் தோல்விகள். அதனால், இந்த முறை கோலியின் மீதான அழுத்தம் இன்னும் கூடியிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்?!

விராட் கோலி
விராட் கோலி

இப்போதைய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்து, வெற்றி சதவிகிதம் அதிகம் கொண்டிருக்கும் கேப்டன் விராட் கோலிதான். இந்தியாவுக்காக 57 டெஸ்ட்களில் தலைமையேற்று அதில் 33 போட்டிகளில் வெற்றியைத்தேடித்தந்திருக்கிறார் கோலி. 10 போட்டிகள் டிராவில் முடிந்திருக்கின்றன. 14 போட்டிகளில் மட்டுமே தோல்வி. 58 சதவிகிதம் வின்னிங் ரெகார்ட் வைத்திருக்கிறார். இந்தியாவுக்கு அதிக டெஸ்ட்களில் தலைமையேற்று வழிநடத்தியிருக்கும் கேப்டன் தோனி. 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார் தோனி. இவரது தலைமையில் இந்தியா 27 போட்டிகளில் வெற்றிபெற்று, 18 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது. 15 போட்டிகள் டிராவில் முடிந்திருக்கின்றன. இங்கிலாந்து தொடர் முடியும்போது தோனிக்கு இணையாக 60 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்கிற சாதனையைப்படைத்துவிடுவார் கோலி. ஆனால், இங்கிலாந்து தொடர் முடியும்போது கோலியின் கேப்டன்ஸி தொடருமா, இந்தியாவுக்கு அதிகப்போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்கிற பெயர் கோலிக்குக் கிடைக்குமா என்பதெல்லாம் வரும் மூன்று போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுகிறது, கோலி என்ன செய்கிறார் என்பதைப் பொருத்ததுதான்.

கேப்டன் கோலி சொதப்புகிறாரா?!

வெற்றி கிடைக்கும் வரை வியூகங்களை மாற்றி அமைத்துக்கொண்டே இருப்பதும், தன் அணிக்குள் இருக்கும் திறமைகளை சரியாக பயன்படுத்தி ஓர் அணியாக வழிநடத்துவதும்தான் கேப்டனின் மிக முக்கியமானப் பொறுப்பு. ஆனால், இந்த இரண்டிலுமே கோலி தொடர்ந்து சொதப்புவதே அவர் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கக் காரணம். கோலி அளவுக்கு ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் வேறு எந்த கேப்டனும் இவ்வளவு தவறுகள் செய்ததில்லை.

ப்ளேயிங் லெவன் பஞ்சாயத்தைப் பார்க்கும்முன் ரன் மெஷின் கோலி ஒரு பேட்ஸ்மேனாக சமீபத்தில் எவ்வளவு தடுமாறுகிறார் எனப்பார்ப்பது அவசியம். கடந்த ஆண்டு கொரோனாவுக்கு முன்பாக நியூஸிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கோலி அண்ட் கோ. இரண்டு டெஸ்ட்களிலுமே தோல்வியை சந்தித்தது.

தொடர் தொடங்குவதற்கு முன்பே, "கோலியின் விக்கெட்டை நான் எடுப்பேன்" என்ற சொல்லிவைத்து தூக்கினார் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட். முன்னர் இப்படி யாராவது வாய் சவடால்விட்டால் இன்னும் உக்கிரமாகி அந்தப் போட்டியிலேயே சென்சுரி அடித்து அந்த பெளலரை நாலு திட்டுத்திட்டி, ஆர்ம்ஸை முறுக்கி, இன்னும் என்னவெல்லாமோ செய்து கர்ஜிப்பார் கோலி. ஆனால், கோலியால் நியூஸிலாந்து மைதானத்தில் ரன்வேட்டை எதையும் நிகழ்த்தமுடியவில்லை.

ரவி சாஸ்திரி, தோனி, கோலி
ரவி சாஸ்திரி, தோனி, கோலி

2020 ஜனவரியில் நியூஸிலாந்து டி20யில் தொடங்கி தற்போது சென்னை டெஸ்ட் வரை 21 இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார் கோலி. 45, 11, 38, 11, 51, 15, 9, 2, 19, 3, 14, 21, 89, 63, 9, 40, 85, 74, 4, 11, 72... இதுதான் இந்த 21 இன்னிங்ஸ்களில் கோலி அடித்த ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 89. 20 இன்னிங்ஸ்களுக்கும் மேல் ஒரு சென்சுரிகூட இல்லை. இது ஒரு பிரச்னையா எனலாம். ஆனால், கோலி செட் செய்து வைத்திருக்கும் ஸ்டாண்டர்ட் அப்படி. 5 - 10 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் அடித்துவிடுவார். ஆனால், இப்போது கோலி ஒரு பேட்ஸ்மேனாகவே பெரிய இன்னிங்ஸ்கள் ஆட முடியாமல் திணறுகிறார்.

கேப்டனாகவும் ப்ளேயிங் லெவன் தேர்ந்தெடுப்பதில் அவரின் முடிவுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. நியூஸிலாந்தில் ஒரு நாள் போட்டிகளில் ஷமியை பென்ச்சில் உட்கார வைத்துவிட்டு ஷர்துல் தாக்கூரை களம் இறக்கியதில் தொடங்கி நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவ்வளவு குழப்பங்கள். ஃபீல்டிங் செட் அப்பிலும் சொதப்பினார். பெளலிங் ரொட்டேஷனும் சொதப்பியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூஸிலாந்து பிட்ச்சில், டெய்ல் எண்டர்களை வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் ஸ்பின்னரான அஷ்வினைப் பயன்படுத்தினார் கோலி. டெயில் எண்டர்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க கோலியே ஒரு காரணமாய் அமைய முதல் டெஸ்ட்டில் பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா.

இரண்டாவது டெஸ்ட்டிலும் சொதப்பல்கள் தொடர்ந்தன. இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் மீண்டும் ஒரு பேட்டிங் சொதப்பல். இந்தியா வெறும் 124 ரன்களில் ஆல் அவுட் ஆக மீண்டும் ஒரு தோல்வி. இந்த டெஸ்ட்டில் ஜடேஜாவைக் கொண்டுவந்திருந்தார். நியூஸிலாந்து பிட்ச்சில் ஜடேஜாவால் இரண்டு விக்கெட்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

விராட் கோலி, இஷாந்த் ஷர்மா
விராட் கோலி, இஷாந்த் ஷர்மா

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட்டில் விளையாடியது இந்தியா. இந்த டெஸ்ட்டில் எவ்வளவு பெரிய அவமானகரமானத் தோல்வியை இந்தியா சந்தித்தது என்பது நம் அனைவருக்குமே தெரியும். வரலாற்றில் முதல்முறையாக 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அவமானப்பட்டது இந்தியா.

சென்னை டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்கான பல காரணங்களில் முதன்மையானது பிட்ச். இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியிருந்தால் ரிசல்ட்டே வேறு மாதிரிகூட மாறியிருக்கலாம். ஆனால், தோல்விக்குப்பின் கோலி சொன்ன காரணங்களிலேயே அவருக்கான கேள்வியும் இருக்கிறது. "பெளலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ப்ரஷரை ஏற்படுத்தத் தவறிவிட்டார்கள்" என்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 27 நோ பால்களை இந்திய பெளலர்கள் வீசினார்கள். அதுவும் ஸ்பின்னர்கள் எல்லாம் ஓவர் ஸ்டெப்பிங்கில், அதுவும் டெஸ்ட் மேட்ச்சில் பந்து வீசியது பார்ப்பதற்கே அபூர்வமாக இருந்தது. களத்தில் இருந்த கோலி பெளலர்களுக்கு இன்னும் உத்வேகம் கொடுத்து, அவர்களை சரியான முறையில் ரொட்டேட் செய்து, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், மாறாக அவர் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார். நாசர் உசேன் சொல்வதைப்போல அவரால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சிகள் எடுக்க முடியவில்லை. மாறாக ஆட்டத்தின்போக்கோடு பயணிக்கிறார்.

ஆஸ்திரேலியா தொடரை வென்றுவிட்டோம்... இந்தியாவில்தானே சீரிஸ்... எளிதாக வென்றுவிடலாம் என இங்கிலாந்தை கோலியும் அவர் கூட்டாளிகளும் ஜஸ்ட் லைக் தட் நினைத்ததும் தோல்விக்கான மிக முக்கியக் காரணம்.

இலங்கையில் இரண்டு டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றிபெற்றுவிட்டு பாசிட்டிவ் எனர்ஜியோடு இந்தியா வருகிறது. ஜோ ரூட் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இலங்கையில் இரண்டு டெஸ்ட்களிலுமே 150 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார் எனத்தெரிந்தும் அவருக்கான ஸ்பெஷல் பிளான் எதையும் இந்த பெளலர்கள் உருவாக்கவில்லை. கேப்டன் கோலியும் அதுகுறித்து சிந்தித்ததுபோல தெரியவில்லை.

virat kohli
virat kohli

நான்காவது இன்னிங்ஸ் இந்த பிட்ச்சில் பேட் செய்வது சிரமம் என நன்றாகத்தெரிந்துமே இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் முதல் இன்னிங்ஸில் மெத்தனமாக ஆடினார்கள். கோலி, ரோஹித், ரஹானே என சீனியர் பேட்ஸ்மேன்களே தங்கள் பொறுப்பை உணராமல் ஆடியது சென்னை டெஸ்ட்டின் தோல்விக்கான மிக முக்கியமானக் காரணம்.

கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால், வியூகங்கள் அமைப்பதிலும், நெருக்கடியான சூழலை கையாள்வதில் அவர் தொடர்ந்து தடுமாறுகிறார். கேப்டனாக அவர் சந்திக்கும் தோல்விகள், அழுத்தம், பேட்ஸ்மேன் கோலியையும் பாதிக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடமுடியாமல் கோலி தடுமாறுவது.

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடக்கப்போகும் மூன்று டெஸ்ட்டுகளுமே கோலிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை தரப்போகும் போட்டிகள்தான். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறார் கோலி.

கிங் கோலி மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு