உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை சேஸ் செய்யப்படாத இலக்கை நோக்கிப் பயணிக்கவேண்டும். ஓவருக்கு 6.60 ரன்கள் வேண்டும். ஒரு வீரருக்குக் காயம் என்பதால் 9 விக்கெட்டுகள்தான். போதாக்குறைக்கு முதல் போட்டியில் தோற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் ஆடும் ஒரு அணி, அதிகபட்சமாக எத்தனை தவறுகள் செய்யலாம்? நியாயப்படி ஒன்றுகூட செய்யக்கூடாது. ஆனால், தென்னாப்பிரிக்கா நிறைய செய்தது. ஒவ்வொரு விக்கெட்டையும் தங்களின் தவறான கணிப்பாலேயே பறிகொடுத்தது. விளைவு, இரண்டு புள்ளிகளை இழந்ததோடு, அரையிறுதி வாய்ப்பை இப்போதே காற்றில் பறக்க விட்டிருக்கிறது.

டி காக் - மார்க்ரம். ஏன் அவ்வளவு குழப்பம் தெரியவில்லை. பார்ட்னர்ஷிப் 50 ரன்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முதல் பவர்பிளேவுக்கு மோசமான ரன்ரேட்டும் இல்லை. ஆனால், ஒரு சிறு குழப்பம், தோல்வியைத் தொடங்கிவைத்துவிட்டது. அந்த இடத்தில் முஷ்ஃபிகுர் விட்ட கேட்ச், வங்கதேச அணிக்குள்ளே சிறு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், பிட்சுக்குள் இவர்கள் ஆடிய டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம், தென்னாப்பிரிக்க அணியை சங்கடத்துக்குள்ளாக்கிவிட்டது. சரி, அதன்பிறகாவது தெளிவாக ஆடினார்களா என்றால் அதுவும் இல்லை.
ஷகிப் அல் ஹசன், பெரும்பாலும் மார்க்ரமின் ஆப் ஸ்டம்புக்கு வெளியேதான் பந்தை பிட்ச் செய்துகொண்டிருந்தார். அதுவும் நல்ல 'flight' கொடுத்து வீசப்பட்ட பந்துகள். அரௌண்ட் ஸ்டம்பில் இருந்து வீசியதால், பந்தின் ஸ்பின் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படவில்லை மார்க்ரம். ஏனெனில், ஷகிப்பின் இடது கை சுழலால் பந்து ஸ்டம்புக்கு வெளியேதான் செல்லும். ஆனால், அவரது இந்த நினைப்பே விக்கெட்டைப் பதம் பார்த்தது. அதுவரை நன்றாக தூக்கி வீசிக்கொண்டிருந்தவர், அந்தப் பந்தைத் தாழ்வாக வீசினார். போதாதற்கு ஆஃப் ஸ்டம்புக்கும் மிடில் ஸ்டம்புக்கும் இடையே பிட்சானது. அதுவரை ஆடியதுபோலவே கூலாக லெக் சைடில் மார்க்ரம் ஆடினார். அவரது கணிப்பை ஏமாற்றிய அந்தப் பந்து, பேட்டையும் ஏமாற்றி ஸ்டம்புகளைத் தகர்த்தது!
அடுத்து வேன் டர் டூசன் வருவார் என்று நினைத்தால், மில்லர் களமிறங்கினார். ஆச்சர்யமாக இருந்தாலும் சரியான முடிவாகத் தோன்றியது. ஷகிப் அல் ஹசன் சிக்கனமாகவும் மிரட்டலாகவும் பந்துவீசிக்கொண்டிருக்கையில், இடது கை ஸ்பின்னருக்கு எதிராக, ஒரு இடது கை பேட்ஸ்மேனைக் களமிறக்குவது நல்ல முடிவுதான். ஆனால், மில்லர் அந்த முடிவை நியாயப்படுத்தினாரா என்பதுதான் கேள்வி. முதல் 14 பந்துகளில் 7 ரன்கள். ஷகிப் வீசிய ஒரே தொடர்ந்து 4 டாட் பால்கள்! சுமார் ஏழரையாக இருந்த தேவைப்பட்ட ரன்ரேட் எட்டை நெருங்கியது. மிடில் ஓவர்களில், எதிரணி பந்துவீச்சின் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டிய எவ்வளவு முக்கியம். அதுவும் இப்படியொரு போட்டியின்போது. மில்லர் அதை சரியாகச் செய்யவில்லை.
அதன்பிறகு கொஞ்சம் அடித்து ஆடத் தொடங்கினார்தான். ஆனால், மார்க்ரம் போல் இவரும் மோசமான கணிப்பாலேயேதான் வெளியேறினார். அதுவரை முஸ்தாஃபிசுர் இவருக்கு ஷார்ட் லென்திலும், குட் லென்திலும்தான் பிட்ச் செய்தார். முந்தைய பந்து அநியாய பௌன்சரால் வைட் ஆனது. அதனால், அதே லென்த்தை எதிர்பார்த்து ஆடிய மில்லர், ஃபுல் லென்த்தில் வீசப்பட்ட அந்தப் பந்தில் எட்ஜாகி வெளியேறினார். பந்தின் வேகம், லென்த் இரண்டையுமே தவறவிட்டார்.
இதற்கு நடுவே கேப்டன் டுப்ளெஸ்ஸியும் தேவையற்ற ஒரு ஷாட்டால் வெளியேறினார். நல்ல டச்சில் இருந்தவர், லான் ஆஃப் திசையில் ஃபீல்டர் இல்லாததைப் பயன்படுத்த நினைத்து வெளியேறினார். மிட் ஆஃப் கிளியர் செய்ய, கிரீஸிலிருந்து வெளியேறியவர், பந்தின் குறைந்த வேகத்தையும் சுழலையும் எதிர்பார்க்கவில்லை. போல்ட்.
இவர் மட்டுமல்ல, வேன் டெர் டூசனும் அப்படித்தான். சைஃபுதீன் வீசிய பந்தைத் தவறாகக் கணித்து அவுட் ஆனார். பந்து ஷார்ட் லென்த்தில் பிட்சாகவில்லை. ஃபுல் லென்த்தில். போதாக்குறைக்கு யாரும் எதிர்பாராத ஸ்விங் வேறு. இறங்கி வந்து ஆட நினைத்தவர், ஏமாந்தார். மீண்டும் போல்ட். தென்னாப்பிரிக்காவின் சிறு நம்பிக்கையும் மொத்தமாகச் சிதறியது. முக்கியமான வீரர்கள் எல்லோருமே இப்படி ஒரு மோசமான கணிப்பால்தான் வெளியேறினார்கள். கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயம் தாக்குப்பிடித்து சவால் கொடுத்திருக்கலாம்.
தென்னாப்பிரிக்காவின் தோல்வு ஒருபுறமிருக்கட்டும். வங்கதேசத்தின் வெற்றியைப் பற்றிப் பேசவேண்டியது முக்கியம். வெறுமனே ஷகிப் - ரஹீம் பார்ட்னர்ஷிப்பை மட்டும் இதற்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. வெற்றியின் மிகமுக்கியக் காரணங்கள் அவர்கள்தான் என்றாலும், ஒரு முழுமையான டீம் பெர்ஃபாமன்ஸைக் கொடுத்திருக்கிறது வங்கதேசம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 7 ஒருநாள் போட்டிகளில், எந்த அணியின் தொடக்க ஜோடியும் 15 ரன்களைத் தாண்டவில்லை. எங்கிடி, ரபாடா ஸ்பெல்லில் அந்த அளவுக்குத் தடுமாறியுள்ளனர். ஆனால், நேற்று... 50 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது தமீம் இக்பால், சௌம்யா சர்கார் இணை. அதிலும் சௌம்யா சர்கார் ஆடிய ஆட்டம் வேற லெவல். ஷார்ட் பிட்ச் பந்துகளை அநாயசமாக எதிர்கொண்டு பௌண்டரிகள் விளாசினார். அவரது துல்லியமான ஃபூட் மூவ்மென்ட், ஷார்ட் பால்களில் ரன் சேர்ப்பதை எளிதாக்கியது. அதுமட்டுமல்லாமல், தொடக்கத்திலிருந்தே தென்னாப்பிரிக்கா மீதான நெருக்கடியை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது.
அதேபோல், கடைசி கட்டத்தில் ரன்ரேட்டை அதிகப்படுத்திய மஹமதுல்ல - மொசாடக் ஹொசைன் கூட்டணி. 40-வது ஓவரை விக்கெட் மெய்டனாக வீசிய சைஃபுதின். 3 விக்கெட் வீழ்த்திய முஸ்தாஃபிசுர் என எல்லோருமே வங்கதேசத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர். வங்கதேசத்தின் இந்த வெற்றியை, அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். "ஒரு கத்துக்குட்டி அணியுடைய வெற்றியை எல்லோருமே கொண்டாடவேண்டும்" என்கிறார்கள். வங்கதேசத்தின் வெற்றியைக் கொண்டாடட்டும். ஆனால், அவர்கள் சொல்லும் காரணம், இந்த வெற்றியின் மதிப்பைக் குறைத்துவிடும். அதை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உணரவேண்டியது அவசியம்.

மார்ச் 19, 2011, டாகா...
உலகக் கோப்பை தொடரில், வங்கதேசத்தின் கடைசி லீக் போட்டி. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தார்கள். அடுத்த போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக கத்துக்குட்டி அணிகள் அதிர்ச்சி வெற்றிகளைப் பதிவு செய்ததால், அப்படியொரு முடிவு மீண்டும் கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அந்த கடைசி லீக் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், காலிறுதிக்குள் நுழைந்துவிடலாம். மொத்த டாகாவும் கனவில் மிதந்தது. ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், டி வில்லியர்ஸ் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வு, அந்தக் கனவுக்குள் உயிர் பாய்ச்சியது. தென்னாப்பிரிக்கா 284 ரன்கள். கொஞ்சம் கடினமான இலக்குதான். ஆனால், 78 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி, வெளியேறியது வங்கதேசம். 206 ரன்களில் தோல்வி. 'கத்துக்குட்டி எப்பவுமே கத்துக்குட்டிதான்' என்றார்கள் ரசிகர்கள்.
அந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, வங்கதேச அணி பயணித்த தூரம் அதிகம். அந்தத் தொடருக்கும், இந்த உலகக் கோப்பைக்கும் இடையே அவர்கள் பங்கேற்ற 117 ஒருநாள் போட்டிகளில் 54 வெற்றிகளை (7 போட்டிகளில் முடிவு இல்லை) பதிவு செய்துள்ளனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் (வைட் வாஷ்), வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறார்கள். சில முத்தரப்புத் தொடர்களில் சாம்பியனாகியிருக்கிறார்கள். ஆசிய கோப்பை ஃபைனலுக்கு இருமுறை முன்னேறியிருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள்.

அதற்கு முன்புவரை அவ்வப்போது மட்டுமே பெரிய அணிகளை வீழ்த்திக்கொண்டிருந்தவர்கள், இந்தக் காலகட்டத்தில் ஏறக்குறைய அத்தனை அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 8 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் போட்டிகளில் வென்ற ஒரு அணியை நாம் கத்துக்குட்டி என்று சொல்லிவிட முடியாது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியிடமே இல்லாத சில பிளஸ் பாயின்ட் இந்த அணியிடம் இருக்கிறது. இந்த அணியின் நம்பர் 9 பேட்ஸ்மேன் மெஹதி ஹசன் மிராஜ், ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி 18.80. ஸ்டிரைக் ரேட் 106.84! ஒன்பதாவது பேட்ஸ்மேன்வரை ரன் அடிக்கக்கூடியவர்கள். நம் அணியில் ஹர்திக்தான் ஐந்தாவது பௌலர். ஆனால், வங்கதேசத்தின் ஆறாவது பௌலரே, 250 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் ஷகிப்!
இப்படியொரு முழுமையான அணி, முன்னேற்றம் கண்டுள்ளதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது? இவர்களிடம் தென்னாப்பிரிக்கா தோற்றதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? மீண்டும் மீண்டும் வங்கதேசம் சொல்வது இதுதான் - "நாங்கள் கத்துக்குட்டிகள் அல்ல!"