ஐ.பி.எல் அணிகளுக்கிடையே மைதானத்தில் பரபரவென போட்டிகள் நடைபெறுவதை போலவே சமூகவலைதளங்களிலும் சுவாரஸ்யமான மோதல்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களுக்கென அத்தனை சமூகவலைதளங்களிலும் தனித்தனியாக அதிகாரபூர்வ கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவற்றில் தங்களைத் தாங்களே பகடி செய்து கொள்கின்றனர். வீரர்களின் பிரத்யேக பேட்டிகளை வெளியிடுகின்றனர். ரீல்ஸ் செய்து அப்லோட் செய்கின்றனர்.
சில சமயங்களில் இரண்டு அணிகள் களத்தில் மோதுவதைப் போல இங்கே நேருக்கு நேராக மோதிக்கொள்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மோதல் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்திருந்தது.

நடப்பு சீசனின் முதல் பாதியில் வான்கடே மைதானத்தில் பஞ்சாபும் மும்பையும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணியே வென்றிருந்தது. அந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் வெறித்தனமாக பந்துவீசி ஸ்டம்புகளையெல்லாம் உடைத்திருந்தார். அந்தச் சமயத்தில் அந்த உடைபட்ட ஸ்டம்புகளின் படத்தை பதிவிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணி,

`ஹே... மும்பை போலீஸ், நாங்கள் ஒரு குற்றச்செயலுக்காக புகார் கொடுக்க வேண்டும்' என மும்பை போலீஸை டேக் செய்தே ட்வீட்டியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த மும்பை போலீஸ், 'ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கும் அணிகளுக்கு மட்டுமே FIR பதிவு செய்யப்படும்.' என நக்கலாக ட்வீட் செய்திருந்தார்கள்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மொஹாலியில் மீண்டும் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் 200+ சேஸிங்கை மும்பை அணி அட்டகாசமாக செய்து வென்றிருந்தது. மும்பை அணி சேஸிங்கைத் தொடங்கிய போது அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகியிருந்தார். அந்த சமயத்தில் பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் R0 என குறிப்பிட்டு ஒரு எமோஜியையும் பதிவிட்டிருந்தது. இதற்கு மும்பை அணி,

ரோஹித் 6 கோப்பைகளை வென்றிருக்கிறார். நீங்கள் எந்தக் கோப்பையை வென்றிருக்கிறீர்கள் என்கிற ரீதியில் டிராபி கணக்குகளை வைத்து ஒரு பதில் ட்வீட்டை செய்தது. இந்த உரையாடலுக்கு நடுவில் புகுந்த சென்னை அணி, 'என்னடா பொசுக்குனு மரியாதை இல்லாம பேசிப்புட்ட...' என்ற வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் டெம்ப்ளேட்டைப் பதிவிட்டனர்.
அந்தப் போட்டியை பஞ்சாப் அணி தோற்கவே, பஞ்சாப் அணியின் அட்மின் அந்த R0 ட்வீட்டை டெலீட் செய்து பின்வாங்கினார். ஆனால், மும்பை அணியின் அட்மின் ஓயவில்லை. போட்டி முடிந்த பிறகு, "காவல்துறையினரே... இங்கே எந்தப் புகாரையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மொஹாலியில் நாங்கள் ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைத்தான் ஆடியிருக்கிறோம். அதில் ஒரு அணி தோற்றுப் போயிருக்கிறது. உங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும். உங்களின் சேவைக்கு நன்றி' என ட்வீட் செய்திருந்தனர். கடந்த போட்டியில் பஞ்சாப் அணி மும்பை போலீஸை டேக் செய்து போட்டதற்கான பதிலடி இது. இரு அணிகளின் இந்த மோதலும் ட்வீட்டுகளும் இணையத்தில் பயங்கர வைரல்.
இரு அணிகளுக்குமிடையேயான இந்த சமூகவலைதள மோதல் குறித்து மும்பை அணியின் வட்டாரத்தில் விசாரித்தோம், "நாங்கள் எப்போதுமே சமூகவலைதளங்களில் இதே மாதிரியான வாக்குவாதங்களில் ஈடுபடவே மாட்டோம். பல அணிகள் போட்டி முடிந்த பிறகு மற்ற அணிகளை சீண்டுவதை போல வீடியோக்களையெல்லாம் வெளியிடுவார்கள். நாங்கள் அது போன்றெல்லாம் செய்யவே மாட்டோம். ரொம்பவே பக்குவத்தோடும் முதிர்ச்சியோடும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் மட்டும்தான் சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால்,

அன்றைக்கு பஞ்சாப் அணி ரோஹித் சர்மா பற்றி அப்படி ட்வீட் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் எங்களின் கேப்டன். அவர் குறித்த இப்படியான ட்வீட் எங்களுக்குக் கடும் அதிருப்தியைக் கொடுத்தது. ரோஹித்தைச் சீண்டியதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்றுதான் அந்த பதில் ட்வீட்டைச் செய்தோம். மற்றபடி நாங்கள் சோஷியல் மீடியாவில் களமாடுகிற அணி அல்ல. களத்தில் ஆடி, கோப்பையை வெல்லும் அணி!"
என்றனர் நம்மிடம் பேசியவர்கள்!
களத்தில் நடக்கும் போட்டிக்கு ஈடாக இந்த சோசியல் மீடியா போட்டியும் ஒரு பக்கம் பரபரக்கத்தான் செய்கிறது.