Published:Updated:

`ராகுலுக்குப் பதில் சுப்மன் கில் தேர்வானது ஏன்?' - தேர்வுக்குழு தலைவர் சொல்லும் காரணம்

பிரேம் குமார் எஸ்.கே.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கில், தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் நிலையான ஆட்டம் மூலம் கவனம் பெற்றார்.

shubman Gill
shubman Gill

இந்திய அணியில் இடம்பிடிப்பது என்பது இளம் கிரிக்கெட் வீரர்கள் அத்தனை பேர்களின் கனவு. இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் அழைக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல் ராகுல் நீக்கப்பட்டு கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய ஏ அணிக்காக சுப்மன் கில் ஆடிய விதம், அவருக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்ததாகக் கூறுகிறார்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கில், தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் நிலையான ஆட்டம் மூலம் கவனம் பெற்றார். தற்போது இவர் டெஸ்ட் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதேபோன்று அணி தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பேசும்போது, ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்க டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தக் கருத்தை கடந்த சில நாள்களாக கங்குலி, லட்சுமணன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் தெரிவித்துவந்தனர்.

Rohit Sharma
Rohit Sharma

தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், ``ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்படும். அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றவர் கில் தேர்வானது தொடர்பாக பேசினார். ``சுப்மன் கில்லைப் பொறுத்தவரை அவரை நாங்கள் தொடக்க வீரராகவும் பார்க்கிறோம். அதேநேரத்தில் நிலையான மிடில் ஆர்டர் தேர்வாகவும் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து விளையாட அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும். காரணம் அவர் மூன்று விதமான கிரிக்கெட்டுக்குமான வீரர்” என்றார்.

டெஸ்ட் அணிக்கு தேர்வானது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சுப்மன் கில், ``ப்ளூ ஜெர்ஸியோ, வெள்ளை ஜெர்ஸியோ.. இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எப்போதுமே பெருமையான விஷயம்” என மகிழ்ச்சி தெரிவித்தார்.

KL Rahul
KL Rahul
AP

கே.எல் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. ராகுல் தொடர்பாக பேசிய எம்.எஸ்.கே பிரசாத், ``ராகுலிடம் நாங்கள் பேசினோம். அவர் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவரது ஃபார்ம் அவருக்குப் பின்னடவை ஏற்படுத்தியது.

`என்னால் அந்த ஆட்டத்தை மறக்கவே முடியாது!’ - கோலி நாஸ்டால்ஜியா பதிவால் கலங்கும் தோனி ரசிகர்கள்

தவான் மற்றும் முரளி விஜய் இல்லாத நேரத்தில் இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. ஒருவர் கட்டாயம் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். இதனால் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர் ஃபார்மில் இருக்கும்போது அவர் விளையாடுவதைப் பார்ப்பதே கண்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும்” என்றார்.