Published:Updated:

`கேப்டனான என்னிடம்கூட சொல்லவில்லை..!'- ட்விட்டரில் கோலி ஆதங்கப்பட்டது ஏன்?

 கோலி
கோலி

நேற்று திடீரென ஆர்.சி.பி அணியின் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து பதிவுகள் அழிக்கப்பட்டன. புரஃபைல் பிக்சரும் நீக்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் கோலி, ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் முக்கியமான அணியாக ஆர்.சி.பி அணி பார்க்கப்பட்டாலும், இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஐ.பி.எல் தொடரில் கோலி தலைமையிலான ஆர்.சி.பி அணியில் அதிரடிக்குப் பெயர் போன பல வீரர்கள் இருந்தாலும் கோப்பை வெல்லாதது பெரும் குறையாகப் பேசப்பட்டு வந்தது.

கோலி
கோலி

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை வீரர்கள் தொடங்கிவிட்டனர். இந்தமுறை கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என ஆர்.சி.பி அணியும் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென அந்த அணியின் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து பதிவுகள் அழிக்கப்பட்டன. புரஃபைல் பிக்சரும் டெலீட் ஆனது.

இதனால் குழப்பமான நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த அணியின் அதிகாரபூர்வ இணையதளமும் காலி ஆனது. அதில், ``ரசிகர்களுக்காக விரைவில் இன்னும் சிறப்பான இணையதளம் வருகிறது. அதுவரை காத்திருங்கள். விரைவில் மீண்டும் வருகிறோம்" எனப் பதியப்பட்டிருந்தது. இதுதான் நேற்று இந்திய கிரிக்கெட் வட்டாரத்தின் பேசுபொருளானது.

RCB Website
RCB Website

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும் ஆர்.சி.பி அணியின் முக்கிய வீரருமான சஹால் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஆர்.சி.பி, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த படங்கள் எங்கே?' எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து பலரும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இன்று இந்திய அணியின் கேப்டன் கோலியும் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.

Vikatan

கோலி ட்விட்டரில், ``பதிவுகள் காணாமல் போயுள்ளது. ஆனால், அணியின் கேப்டனுக்கு அதுதொடர்பாக எந்தத் தகவலும் தரப்படவில்லை. உங்களுக்கு எதாவது உதவி வேண்டுமென்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் பதிவுகள் காணாமல் போனதன் பின்னணியில் ஸ்பான்ஸர்கள் அல்லது பெயர் மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடருக்கு ஆர்.சி.பி அணிக்கு முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த செவ்வாய்கிழமை ஏற்படவே, புதன்கிழமை பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகத்தான் ஆர்.சி.பி இதுபோன்று செய்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும், பெங்களூர் என்ற ஊரின் பெயரை பெங்களூரு என மாற்றிய பின்னரும் அணியின் பெயர் தொடர்ச்சியாக பெங்களூர் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இதனால் இந்தமுறை அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

`உண்மை என்ன?' என்பது ஆர்.சி.பி இணையதளமும் அதன் சமூக வலைதளப் பக்கங்களும் முன்புபோலச் செயல்படத் தொடங்கும் போதுதான் தெரியவரும் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு