Published:Updated:

Nicholas Pooran: `இது என் சீசன்'- ரூ.16 கோடி ஏலம்;15 பந்துகளில் 50 ரன்கள்; ஒரு கரீபிய வீரனின் கர்ஜனை

பூரன்

RCB vs LSG: 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி அவரை வாங்கியது. இத்தனை பெரிய தொகையை வாங்கிவிட்டு இந்த சீசனிலும் அவர் எப்படியும் அந்த அணியை ஏமாற்றத்தான் போகிறார் என ரசிகர்கள் சிலர் நிக்கோலஸ் பூரனை ஏற்கெனவே ட்ரால் செய்யத் தொடங்கினர்.

Published:Updated:

Nicholas Pooran: `இது என் சீசன்'- ரூ.16 கோடி ஏலம்;15 பந்துகளில் 50 ரன்கள்; ஒரு கரீபிய வீரனின் கர்ஜனை

RCB vs LSG: 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி அவரை வாங்கியது. இத்தனை பெரிய தொகையை வாங்கிவிட்டு இந்த சீசனிலும் அவர் எப்படியும் அந்த அணியை ஏமாற்றத்தான் போகிறார் என ரசிகர்கள் சிலர் நிக்கோலஸ் பூரனை ஏற்கெனவே ட்ரால் செய்யத் தொடங்கினர்.

பூரன்
ஐ.பி.எல் 2023 ஒவ்வாெரு போட்டியும் விறுவிறுப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. கணிப்புகள் தலைகீழாக மாறியிருக்கின்றன. கவனம் பெறாத வீரர்கள் கலக்கியிருக்கிறார்கள். போட்டி முடிந்துவிட்டது என நினைக்கையில் ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது.
பெங்களூர் அணி ரசிகையின் அழுகை
பெங்களூர் அணி ரசிகையின் அழுகை

இப்படி ஒவ்வொரு போட்டியும் நடந்துகொண்டிருக்க நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அதே விறுவிறுப்பு குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூர் அணியிகன் ஹோம் கிரவுண்டான சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உற்சாகம், அழுகை, ஏமாற்றம் என கலவையான உணர்வுகளை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்தப் போட்டி இரு அணியினருக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத போட்டியாக மாறியிருக்கும்.

`தீராத கங்குகளால்

பழுத்துக்கிடக்கிறது

என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்

வடித்துக் கொடுப்பேன்

போய் வா!'

கவிஞர் வைரமுத்துவின் இந்த லேட்டஸ்ட் கவிதை ட்வீட்டிற்கு ஏற்ற கிரிக்கெட் வெர்ஷனாக சுழன்றடித்து கலக்கியிருக்கிறார் நிக்கோலஸ் பூரன். பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் 200+ சேஸிங்கின் போது லக்னோ அணிக்காக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகியிருக்கிறார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

Pooran
Pooran

நிக்கோலஸ் பூரன் அவரது திறனுக்கேற்ற வகையில் ஐ.பி.எல் தொடரில் இதுவரை பெரிதாகச் சாதித்ததில்லை. அவ்வபோது எதாவது மேஜிக்கல் இன்னிங்ஸை ஆடுவார் அவ்வளவுதான். முன்னதாக பஞ்சாப் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தவரை சன்ரைசர்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியிருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்காகவும் பெரிதாக ஆடிக்கொடுக்கவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் அணி இவரைத் தக்கவைக்காமல் விடுவித்தது. ஆனாலும் மினி ஏலத்தில் நிக்கோலஸ் பூரனுக்கான டிமாண்ட் குறையவே இல்லை. ரூ.16 கோடி கொடுத்து லக்னோ அணி அவரை வாங்கியது.

இத்தனை பெரிய தொகையை வாங்கிவிட்டு இந்த சீசனிலும் அவர் எப்படியும் அந்த அணியை ஏமாற்றத்தான் போகிறார் என ரசிகர்கள் சிலர் நிக்கோலஸ் பூரனை ஏற்கெனவே ட்ரால் செய்யவே தொடங்கிவிட்டனர். இந்நிலையில்தான் நிக்கோலஸ் பூரன் இப்போது லக்னோ அணிக்காக அசாத்தியமான ஒரு இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருக்கிறார்.

நிக்கோலஸ் பூரன் க்ரீஸுக்குள் வந்த சமயத்தில் லக்னோ அணிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் இருந்தது. உள்ளே வந்து சிறு தாமதம்கூட இன்றி தன்னுடைய மிஷனைத் தொடங்கினார் பூரன். கர்ன் சர்மாவிற்கு எதிராக அவர் சந்தித்த முதல் பந்தை டாட் ஆக்கியிருந்தார். விக்கெட்டைப் பறிகொடுத்த பந்தை தவிர நிக்கோலஸ் பூரன் டாட் ஆக்கியிருந்த மூன்று பந்துகளில் இதுதான் முதல் பந்து. ஆனால், இந்த டாட்டை ஆடிய அடுத்த பந்திலேயே லாங் ஆனில் ஒரு பெரிய சிக்சரை பறக்கவிட்டிருந்தார். கொஞ்சம் அப்படியே பின்வாங்குவது போல பாவனை காட்டிவிட்டு பாய்ந்து பாய்ந்து சம்பவம் செய்யும் வேட்டை புலியை போலத்தான் பூரன் தெரிந்தார். அந்த 2 வது பந்திலிருந்து எல்லாமே அதிரடிதான். `உயரே பறக்கிறேன்' என ஆகாயத்தில்தான் பந்துகள் இறக்கைக் கட்டி பறந்து கொண்டிருந்தது. பூரனின் இந்த இன்னிங்ஸில் அதிகம் கவனிக்க வேண்டியது அவரின் துணிச்சலும் துடுக்குத்தனமும்தான். எந்த ஒரு பௌலருக்கு எதிராகவும் தயக்கமே இன்றி அதிரடிகளை நிகழ்த்தினார். செட் ஆவதற்கெல்லாம் நேரமும் எடுத்துக் கொள்ளவில்லை.

Pooran
Pooran

நேரமே இல்லை என்பது வேறு கதை. ஆனால், சொல்லப்போனால் எந்த ஒரு பௌலருக்கு எதிராகவும் ஒரு 6 பந்துகளை கூட முழுமையாக அவர் எதிர்கொண்டிருக்கவில்லை. கர்ன் சர்மாவிற்கு எதிராக 5 பந்துகளைத்தான் எதிர்கொண்டிருந்தார். 19 ரன்களை அடித்திருந்தார். ஹர்ஷலுக்கு எதிராக 4 பந்துகளைத்தான் எதிர்கொண்டிருந்தார். 17 ரன்களை அடித்திருந்தார். பர்னலுக்கு 4 பந்துகளில் 15 ரன்களையும் வில்லிக்கு எதிராக 2 பந்துகளில் 7 ரன்களையும் அடித்திருந்தார். இந்த நான்கு பௌலர்களுக்கு எதிராகவும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 300-400 ஆக இருக்கிறது. மிரட்டல் அடி. சிராஜூக்கு எதிராக மட்டும்தான் கொஞ்சம் சறுக்கினார். சிராஜூக்கு எதிராக 4 பந்துகளில் 4 ரன்களை அடித்து அவரின் பந்திலேயே விக்கெட்டையும் விட்டிருந்தார். சரசரவென நொடிபொழுதில் வெடித்துச் சிதறும் 1000 வாலா பட்டாசாகத்தான் இருந்தது பூரனின் இந்த இன்னிங்ஸ்.

19 பந்துகளில் 62 ரன்களை அடித்திருந்தவர் ஆட்டநாயகன் விருதை கையில் ஏந்தியவாறு பேசியவை இங்கே...

`இந்த ஆட்டத்தை என் மனைவிக்காகவும் என் குழந்தைக்காகவும் சமர்பிக்கிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு பெரிதாக உதவியது. ஸ்டாய்னிஸ் நன்றாக ஆடி சேஸை உயிர்ப்போடு வைத்திருந்தார். கடைசி 4 ஓவர்களில் 50 ரன்களை எடுக்க வேண்டுமானாலும் எங்களால் எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தையே சிக்சராக்கியிருந்தேன். பந்து ஸ்லாட்டில் விழும்பட்சத்தில் அதை உறுதியாக சிக்சராக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது. ஒரு ஆட்டத்தை நின்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என எனக்கு நானே ஒருவித சவாலை உருவாக்கிக் கொண்டுதான் கடந்த சில சீசன்களாக ஆடி வருகிறேன். இந்தப் போட்டியையும் இறுதி வரை நின்று முடித்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவுட் ஆகிவிட்டேன்.

Pooran
Pooran
இந்த சீசன் எனக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். முகத்தில் புன்னகையோடு மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் ஆடி அணிக்காக போட்டிகளையும் வென்று கொடுக்க வேண்டும்' என பூரன் பேசியிருந்தார்.

பூரனின் நம்பிக்கை பலிக்கட்டும்!