ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய இரு அணிகளும் பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கவுள்ளது.
ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எஸ்.பாரத் (வி.கி.), இஷான் கிஷன் (வி.கி.), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது, ரவீந்திர ஜடேஜா, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த ஆண்டின் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாமல்போனது. இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காகக் களமிறங்குகிறார்.

இது பற்றிக் கூறியுள்ள அவர், "ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணியவுள்ளது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி தற்போது இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளேன். ஐந்து மாதங்கள் நீங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையென்றால் உங்களது மனநிலை எப்போது மீண்டும் அணிக்காக விளையாடப் போகிறோம் என்ற கவலையில் இருக்கும். நான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கடினமாக உணர்ந்தேன். உலகக்கோப்பையை டிவியில் பார்த்தபோது நான் அங்கு இருக்க வேண்டுமென்று நினைத்தேன். மீண்டும் இந்திய ஜெர்சியினை அணிந்து விளையாட வேண்டும் என்ற உந்துதல் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்தது என்றார்" என்று கூறினார்.