நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2023 ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குச் சென்றது சி.எஸ்.கே அணி.
கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் CSK-வின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவுக்கு அப்ஸ்டாக்ஸின் 'மதிப்புமிக்க வீரர் விருது (Upstox Most Valuable Asset Of the Match)' விருது வழங்கப்பட்டது.

இதற்கிடையில் ஜடேஜா சரியாக விளையாடவில்லை, கடைசி ஓவர்களில் அணிக்கு ரன்கள் சேர்க்காமல் பந்துகளை வீணாக்கிவிட்டார் எனப் பலரும் விமர்சித்து வந்தனர். இது மைதானம் தொடங்கி சமுக வலைதளங்கள் வரை ட்ரெண்டானது. மேலும், CSK ரசிகர்கள் பலரும் அணியின் வெற்றிக்காக விளையாடியவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த அப்ஸ்டாக்ஸின் 'மதிப்புமிக்க வீரர் விருது' வழங்காமல் ஜடேஜாவுக்கு வழங்கியிருப்பது நியாயமில்லாதது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர்.
இந்நிலையில் ஜடேஜா, அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "அப்ஸ்டாக்ஸ்-க்குக் கூட நான் சிறப்பாக விளையாடியது தெரிகிறது. ஆனால், ரசிகர்களுக்குத் தெரியவில்லை" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.