ஒரே சீட்டில் ஆட்சிகளே கவிழ்க்கப்படுவது போல் தொடரின் முடிவையே மாற்ற அஷ்வினுக்குத் தேவைப்படுவது ஒரு ஓவர்தான், ஒரு மணிநேரம்தான்.
"விக்கெட் எடுப்பதற்காக அஷ்வினிடம் உள்ள எல்லாக் கருவிகளுக்கும் எங்களிடம் விடை இருக்கிறது" - தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்மித் கூறிய வார்த்தைகள்தான் இவை. "எதற்கும் அஞ்சவில்லை" என்று இந்தியாவுக்குக் காட்ட நினைத்ததோடு, தனது அணிக்குத் தன்னம்பிக்கை ஊட்டவும் சொல்லப்பட்டவைதான். சரி! சொன்னபடி அவர்களால் சமாளிக்க முடிந்ததா என்று கேட்டால், "இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 15 ஆஸ்திரேலியர்களின் விக்கெட்டுகளையும் இத்தொடரில் ஒருமுறையாவது அஷ்வின் எடுத்திருக்கிறார்" என்ற தகவலே பதில் தரும். லீடிங் விக்கெட் டேக்கராக (25) மட்டுமல்ல, சிறந்த பௌலிங் ஆவரேஜோடும் (17.28) இத்தொடரை முடித்திருக்கிறார், டெஸ்ட் உலகின் 'நம்பர் 1' பௌலருக்கான இடத்தை ஆண்டர்சனோடு இணைந்து ஆக்கிரமித்துள்ள அஷ்வின்.

பொதுவாக டெஸ்டைப் பொறுத்தவரை ஸ்கோர் கார்டுகள் காட்டும் 'சந்தித்த பந்துகள், அடித்த ரன்கள்' என்னும் தகவலையும் மீறி ஒவ்வொரு விக்கெட்டுக்குப் பின்னும் ஒவ்வொரு கதையிருக்கும்; அதனை முன்னிருந்து இயக்கிய பௌலரின் உழைப்போடு சாமர்த்தியமும் சேர்ந்தே இருக்கும். அஷ்வினின் வெற்றி வளையத்தின் ஆரம் மேலே சொன்ன இந்த இரு கூறுகளால்தான் கூட்டப்பட்டிருக்கிறது. களம் காட்டும் அனுகூலம் மட்டுமே அவரது பக்கபலமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது அவருடைய திறனும் துல்லியத்தன்மையும். எல்லாவற்றையும் குறித்த புரிதலோடு, அடுத்தடுத்து எடுத்து வைக்கவேண்டிய அடிகள் குறித்த தெளிவுமே அவரது விக்கெட்டுகளுக்கான உட்பொருள்கள்.
நாக்பூர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்து விக்கெட் ஹாலைக் கருத்தில் கொள்வோம். 'Doctored Pitch' என வசைபாடப்பட்ட களம் மட்டும் அந்த ஹாலுக்கான வழிவகுக்கவில்லை, அஷ்வினின் வியூகங்களும் திறனும்தான். பந்துகள் டர்ன் ஆன அக்களத்தில் பவுன்ஸ் இல்லை. உஸ்மான் மற்றும் வார்னரை வீழ்த்த அவர் அன்று பின்னிய வலை ஃபுல் லெந்த் பந்துகளால் பின்னப்பட்டது. உஸ்மானுக்கு ஓவர் முழுவதும் ஃபுல் லெந்தில் வீசி, டிரைவ் ஆடத்தூண்டி பின் மீண்டுமொரு ஃபுல் லெந்த் பந்தை அதிகமாக டர்ன் ஆகவைத்து அனுப்ப, அவர் அதிலும் டிரைவ் ஆடத்துணிய, அது அவுட்சைட் எட்ஜை குசலம் விசாரித்து ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. இது எதிர்கொள்ளவே முடியாதென்றில்லை, முன்னிலும் கொஞ்சம் அதிகமாக மேலே தூக்கிப் போடப்பட்ட பந்து அது. ஃபுட் மூவ்மென்ட்டின் வாயிலாக அதனைச் சமாளித்திருக்கலாம். அதைச் செய்ய உஸ்மான் தவற, அத்தவற்றை தனக்கான லாபக்கணக்கில் அஷ்வின் வரவு வைத்திருந்தார்.

வார்னருக்கும் இதே வைத்தியம்தான். சுதாரிப்பார் என்பதால் ஃபுல் லெந்த் அம்புகளைத் தொடர்ந்து அனுப்பி நடுவே ஒரு ஸ்லைடரை அனுப்ப, அது லெக் ஸ்டம்பை முறைத்தவாறு நகர்ந்து வார்னரின் பேடோடு மோதிக்கொண்டது. தொடக்கத்திலேயே இந்த இரு அடிகள் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தன. மீட்சியின்றி இன்னிங்க்ஸ் தோல்வியையும் பெற வைத்தது. அவ்வப்போது வார்னேயின் சாயலோடும், தனக்கே உரிய மதியூகத்தோடும் வடிவமைக்கப்படும் அவரது சுழல் சக்கர வியூகங்கள் சத்தமேயின்றி எதிராளியை முட்டிச் சாய்க்கின்றன. மீளவே முடியாதென்றில்லை, அதற்கான கால அவகாசத்தை அஷ்வின் கொடுப்பதில்லை என்பதே உண்மை.
ஸ்பின்னர்களின் சீக்ரெட் கோட்களான Turn, Dip மற்றும் Drift மட்டுமே அஷ்வினின் ஆயதக்கிடங்கில் இருப்பவை அல்ல. பந்தின் வேகத்தை மாற்றுவது, அது பயணிக்கும் பரவளையப் பாதையில் அதன் அதிகபட்ச உயரத்தைக் கூட்டுவது, குறைப்பது, லைன் அண்ட் லெந்தை நூலாக்கி முனையில் கட்டப்பட்ட பட்டம் போல பந்தைத் தனது போக்குக்கு வேண்டிய இடத்தில் தரையிறக்குவது, பிட்ச்சான பந்து எந்தளவிற்கு டர்ன் ஆகவேண்டும் என்பதிலிருந்து எந்தக் கோணத்தில் நகர வேண்டுமென்பது வரை முடிவு செய்வது என அவரது கைவண்ணம் அத்தனையிலும் இருக்கும். தனக்கான எல்லைகளைப் புரிந்து கொண்டு அதற்குள்ளிருந்தே தனது ராஜ்யத்தை மெல்ல விரிவடைய வைப்பதில் அவர் சாமத்தியர்.

இத்தொடரில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கான இலக்கணம் மீறி இடக்கை பேட்ஸ்மேன்களை மட்டுமல்ல, வலக்கை பேட்ஸ்மேன்களையும் வறுத்தெடுத்தார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசும் கோணத்தின் மூலமாக நெருக்கடி தந்து கொண்டே இருந்தார்.
பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதற்கோ ரன்களைக் குவிப்பதற்கோ அனுமதிக்கவேயில்லை. பிட்சிலிருந்தே தனக்கான வாய்ப்புகளை விளைவித்துக் கொள்வதுதான் அவரது நிபுணத்துவத்தின் இன்னொரு பரிமாணம். ஆஃப் பிரேக்கோடு, கேரம் பால், ஸ்லைடர், டாப் ஸ்பின்னர் ஆகியவற்றை எந்த விகிதாச்சாரத்தில் பயன்படுத்த வேண்டுமென்பது மட்டுமல்ல, எப்போது யாரிடம் பயன்படுத்த வேண்டுமென்பதும் அவருக்கு அத்துப்படி. 'Customized Bowling' ஆக பேட்ஸ்மேன் ஒவ்வொருக்குமான ப்ளான்கள்தான் அஷ்வினின் ஸ்பெஷல். அதனையும் களத்திலேயே வகுக்கக்கூடிய அவரது வல்லமை போட்டியின் கியரையே மாற்றி விடுகிறது.
டெல்லி டெஸ்டில் ஒரே மேஜிக்கல் ஒவரில், ஸ்மித் மற்றும் லபுசேனின் விக்கெட்டுகளை அஷ்வின் எடுத்ததுதான் போட்டியின், ஏன் தொடரின் முக்கியத்தருணங்களில் ஒன்று. "45 Minutes of bad cricket"-க்குப் பதிலாக "An hour of Madness"-ஐ மட்டுமல்ல "An Over of Madness"-ஐயும் ஆஸ்திரேலியர்களுக்கு அஷ்வின் காட்டினார். ஸ்பின்னைச் சுலபமாக எதிர்கொள்ளத்தக்க இரு ஆஸ்திரேலிய ஆளுமைகளான லபுசேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரையுமே அஷ்வின் அடுத்தடுத்து வெளியேற்றினார். அதுவும் எப்படி என்பதுதான் சுவாரஸ்யமே. ஒரே இடத்தில் பிட்ச் ஆன பந்து இருவேறு விதமாக நகருமா? அஷ்வின் சொன்னால் நகரும்.
ஒரு பந்து ஆஃப் பிரேக்காக டர்னாகி லபுசேனனின் பேட்டின் இன்சைட் எட்ஜை தொட்டுச் சென்று விக்கெட் காவு வாங்கியதென்றால் ஸ்மித்துக்கு அதே இடத்தில் லாண்ட் ஆன பந்து மாற்றியமைக்கப்பட்ட சீம் பொஷிசனால் டர்ன் ஆகாமல் நேராக ஸ்லைடராக நகர்ந்து ஏமாற்றி அவரை வெளியேற்றியது.

டெஸ்டின் நிகழ்வுகள் சங்கிலித்தொடர் போன்றவை. ஓரிடத்தில் ஏற்படும் சின்ன அதிர்வு சிறு அலையாகப் பரவி அத்தனையையும் அமிழ்த்தும். அதுபோல் ஆஸ்திரேலியாவை மூழ்கடித்த ஆழிப்பேரலையை அஷ்வின் இந்த ஓவரில்தான் உருவாக்கினார்.
அந்த இரு விரைவான விக்கெட்டுகளும் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளையும் சமநிலையில் முடிக்க வைத்தது. ஆஸ்திரேலியா அணியை லீட் எடுக்க விட்டிருந்தால் தொடர் இந்நேரம் ஆஸ்திரேலியா கைகளுக்குச் சென்றிருக்கும். அதைத் தடுத்தது அஸ்வின். இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் எடுத்த மூன்று விக்கெட்டுகள் ஒருபுறம் இந்தியாவின் கையை ஓங்கவைக்க, கிராஸ் பேட்டில் ஆடுவது ஆபத்தெனப் புரியாமல் ஜடேஜாவின் பந்துகளை ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் செய்தே மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுகளை விட்டனர். இரு இன்னிங்ஸ்களிலும் அஷ்வின் இந்தியாவுக்கான ப்ரேக் த்ரூவைக் கொடுத்தார். இவையெல்லாம் களத்தின் கைங்கரியத்தால் நடப்பவை எனச் சொல்பவர்களால்கூட கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய ஸ்பெல்லைக் குறைத்துப் பேசமுடியாது.
பௌலர்களிடம் இரக்கமே காட்டாத ஸ்லோ பிட்,ச் உயிரோட்டமே இல்லாமல் பேட்டிங் பாரடைஸாக பேட்ஸ்மேன்களோடு நட்பு பாராட்டிக் கொண்டிருந்தது. அத்தகைய களத்தில் தனக்கான விக்கெட்டுகளை அஷ்வின் உருவாக்கினார் என்றே சொல்ல வேண்டும். எல்பிடபிள்யூவாகாமல் தற்காத்துக் கொள்வதற்காக லெக் ஸ்டம்புக்கு மிக வெளியே நின்று பந்துகளைச் சந்தித்தார் க்ரீன். சதமடித்து செட்டிலும் ஆகிவிட்டார். அவருக்கு முதல் செஷன் முழுவதும் லெக் ஸ்டம்புக்கு சற்றே வெளியே மற்றும் அவுட்சைட் தி ஆஃப் ஸ்டம்புக்கும் இடைப்பட்ட லைனைப் பற்றி வீசிக்கொண்டிருந்தார் அஷ்வின், பலனில்லை.
இரண்டாவது செஷனில் சற்றே தள்ளி லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசத்தொடங்கினார். இது ஸ்கோரிங் ஆப்சனைக் குறைத்தது. அதனால் க்ரீனுக்கு ரன்சேர்க்க வேண்டிய கட்டாயம் உண்டானது. இறுதியில் லெக் ஸ்டம்புக்கு மிக வெளியே ஒரு பந்தை சற்றே மெதுவாக அனுப்ப, அதை ஸ்வீப் செய்ய முயன்ற க்ரீன் ஆட்டமிழந்து வெளியேறினார். அலெக்ஸ் கேரேயை அஷ்வின் வீழ்த்திய விதமும் அதன் துல்லியத்தன்மையும் வியப்பூட்டுபவை. பந்தை வெவ்வேறு இடத்தில் பிட்ச் செய்ய வைத்தது மட்டுமல்ல டர்ன் ஆகக்கூடிய கோணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து திணறடித்தே அவரை வெளியேற்றினார்.

மற்ற பௌலர்களால் கோலோச்ச முடியாத களத்தில்கூட அஷ்வினை ஆஸ்திரேலியாவால் எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனாலேயே மற்ற பௌலர்கள் அளவுக்கு ரன்களை அவர் கசியவிடவில்லை. 47.2 ஓவர்களை அஷ்வின் வீசியிருந்தும் 91 ரன்களை மட்டுமே அந்த இன்னிங்ஸில் கொடுத்திருந்தார். ஆறு விக்கெட்டுகளை அநாயாசமாக வீழ்த்தியுமிருந்தார். அந்த இன்னிங்ஸில் மற்ற பௌலர்களில் சராசரி பௌலிங் ஆவரேஜ் 97.25 ஆக இருக்க அஷ்வினுடையதோ 15.17 ஆக மட்டுமே இருந்தது. பௌலிங் ஸ்ட்ரைக்ரேட்டோ மற்றவர்களது சராசரி 180 என எங்கோ இருக்க அஷ்வின் 47.33 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் எடுத்திருந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ஒரு பிட்சில்கூட தனது தடத்தை நிறுவி தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் அஷ்வினைத் தனித்துவமானவராக்குகிறது.
முன்பாக ஆஃப் பிரேக் மட்டுமின்றி லெக்பிரேக்கை அவர் முயற்சி செய்த வரலாறும் உண்டு, லோடிங் புள்ளியிலிருந்து ரிலீஸிங் பாயின்ட் வரை அவர் சற்றே மாற்றிக் கொள்வதுமுண்டு. எதனையும் ஒரு வீடியோ அனாலிஸ்டின் கண்களோடும் நுணுக்கங்களோடும் அணுகி அதில் சூழலுக்குத் தேவையானது எதுவோ அணியை எது முன்னிலைப்படுத்துமோ அதனை முயற்சி செய்யவும் அதற்கேற்றாற் போல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும் அவர் தயங்கியதே இல்லை. அஷ்வினின் வெற்றி சூத்திரமும் இதேதான்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் (114) என்னும் இடத்தை இத்தொடரில் கும்ப்ளேயிடம் இருந்து அஷ்வின் கைப்பற்றினார். 2022-க்குப்பின் டெஸ்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் அஷ்வின்தான். டெஸ்டில் அதிக தொடர்நாயகன் வாங்கியவர்கள் (11) பட்டியலில் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார், அதுவும் 133 போட்டிகளில். இந்தத் தொடரில் வாங்கிய விருதோடு இரண்டாவது இடத்திலுள்ள (10) அஷ்வினுக்கு அதற்குத் தேவைப்பட்டிருப்பது 92 போட்டிகள் மட்டுமே.

இந்தியாவில் வைத்து தொடர்ந்து தனது 16-வது டெஸ்ட் தொடரை இந்தியா வென்றிருக்கின்றதென்றால் அக்கோப்பையின் ஒவ்வொரு அங்குலத்திலும் அஷ்வினின் பெயரும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
அஷ்வினை ஸ்பின் டாக்டர் என அழைப்பதுண்டு. அதனை பகுப்பாய்வு செய்ய விரும்பினால், அதற்குரிய ஆய்வுகளுக்கான இடத்தில் இத்தொடரும், Observation என்னும் பகுதியில் இதன் ஸ்கோர் போர்டுகளும், ஆய்வு முடிவுகள் எனுமிடத்தில் அஷ்வின் ஒரு ஆகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர், 'Modern Day Great' என்பதுவும் பெரிதாக அடிக்கோடிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும்.