Published:Updated:

`அவரைவிட சிறந்த பந்துவீச்சாளரை இன்னும் பார்க்கவில்லை!' - அஸ்வின் தேடும் எஸ்.கே

அஸ்வின் ரவிச்சந்திரன்
அஸ்வின் ரவிச்சந்திரன்

நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தேன். ஆனால், எஸ்.கே தன்னுடைய பந்துவீச்சின் மூலமாக என்னை ஒரு முட்டாளைப்போல உணர வைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அஸ்வின் ரவிச்சந்திரன். ஒரு நாள், டி-20 மற்றும் டெஸ்ட் என கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர். தற்போது அஸ்வின், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஃப் ஸ்பின்னில் பல்வேறு வகையான வெரைட்டிகளைக் காட்டும் அஸ்வின், கேரம்பால் முறையிலும் மாஸ்டராக விளங்குகிறார்.

அஸ்வின் ரவிச்சந்திரன்
அஸ்வின் ரவிச்சந்திரன்

கேரம்பால் பந்துவீச்சில் சரியான முடிவுகளைப் பெற நுட்பமான விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிகமாக பந்து ஸ்பின் ஆக கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து இந்தப் பந்து வீசப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் இந்தப் பந்தை எதிர்கொள்வதற்கு கடினமாக இருக்கும். அணிக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்துக்கொடுக்கும் பந்து வீச்சில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதை மிகச்சிறப்பாக வீசும் ஸ்பின்னர்களில் உலக அளவில் அஸ்வின் முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார்.

cricbuzz இணையதளத்துக்கு அஸ்வின் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கேரம்பால் கற்றுக்கொண்டது தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது, ``முதன்முறையாக டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடச் சென்றபோது, நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு நபர் மிகவும் நேர்த்தியாகவும் அழகான சுழலுடனும் பந்து வீசிக்கொண்டிருந்தார். என் வாழ்க்கையில் அவரைவிட சிறந்த பந்து வீச்சாளரை நான் இன்னும் பார்க்கவில்லை. அவரது பெயர் எஸ்.கே. அவரிடம்தான் இந்த கேரம்பால் முறையைக் கற்றுக்கொண்டேன். ஆனால், இன்றுவரை அவர் எங்கிருக்கிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

Vikatan

மேலும், ``நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தேன். ஆனால், எஸ்.கே தன்னுடைய பந்துவீச்சின் மூலமாக என்னை ஒரு முட்டாளைப்போல உணர வைத்தார். இந்தத் தருணம்தான் அவரிடமிருந்து ஸ்பின்னை கற்றுக்கொள்ள உந்தியது. 10 முதல் 15 நாள்கள்தான் அவரிடம் கற்றுக்கொண்டேன்" என்று பகிர்ந்துள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

இதற்கிடையே மற்றொரு பேட்டியில் சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதில், ``எனக்கு 14 அல்லது 15 வயது இருக்கும்போது சென்னையில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் எங்கள் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. போட்டிக்குச் செல்வதற்கு முன்பாக அடையாளம் தெரியாத இரண்டு பேர் என்னை பைக்கில் டீக்கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். போட்டிக்கு நேரம் நெருங்கும்போது விளையாட மைதானத்துக்குச் செல்லலாம் என்று கூறினேன். அப்போது அவர்கள், `நாங்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள். உன்னைப் போட்டியில் விளையாட விடாமல் தடுக்கத்தான் வந்தோம். அதையும் மீறி நீ விளையாடினால் உன்னுடைய கைகளில் விரல்கள் இருக்காது' என்று மிரட்டினர்" என தன் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு