Published:Updated:

`கோலி மட்டுமல்ல... இவருகிட்டயும் க்ரீன் சிக்னல்தான்!'- ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளரான பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அவரை தேர்ந்தெடுத்துள்ளது.

ravi shastri
ravi shastri

உலகக் கோப்பை போட்டியைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. உலகக் கோப்பையுடன் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இருந்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் தொடர்முடியும்வரை, அதாவது 45 நாள்களுக்கு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Announcement letter
Announcement letter

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான டாம் மூடி, இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், தற்போதைய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புத் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் என மூன்று இந்தியர்... மூன்று வெளிநாட்டவர் என மொத்தம் 6 பேரை பி.சி.சி.ஐ இறுதி செய்தது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு 6 பேரிடமும் நேர்காணல் நடத்தியுள்ளது. அதன்படி, இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே தொடர்வார் என அந்தக் குழு அறிவித்துள்ளது.

kohli - ravi shastri
kohli - ravi shastri

மேலும் 2021-ம் ஆண்டு ஐசிசி டி20 வரை ரவிசாஸ்ரியே பயிற்சியாளராக நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட பின்னணி!

ரவி சாஸ்திரியைப் பொறுத்தவரை அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 70 சதவிகிதப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது, 2 ஆசிய கோப்பை தொடர்களை வென்றது, உலகக் கோப்பையில் அதிக ரன்களை எடுத்து அசத்தியது என இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகள், 36 டி20 போட்டிகளில் 25 வெற்றிகள், 60 ஒருநாள் போட்டிகளில் 43 வெற்றிகள் என ரவி சாஸ்திரி தலைமையில் பெற்றிருந்தாலும், உலகக் கோப்பை தொடர்... சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் முக்கியமான தொடர்களில் கோட்டைவிட்டது, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது மைனஸ் பாயின்டுகளும் அவரைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஆனால், அதை இந்திய கேப்டன் கோலியின் வலுவான ஆதரவு மைனஸ் பாயின்டை பிளஸாக மாற்றியது எனலாம்.

kohli - ravi shastri
kohli - ravi shastri

அடுத்த பயிற்சியாளர் குறித்த பேச்சுகள் எழுந்தபோதே ``பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கிரிக்கெட் ஆலோசனைக் குழு என்னை அணுகவில்லை. அவர்கள் என்னுடன் ஆலோசனை நடத்த விரும்பினால், நான் அவர்களைச் சந்திக்கத் தயார். வீரர்களுடன் ரவிசாஸ்திரி நல்ல நட்பில் உள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் மீண்டும் அவர் நீடித்தால் மகிழ்ச்சி'' என வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்பும்முன் பேட்டி கொடுத்துவிட்டுச் சென்றார் கோலி. இந்தக் கருத்துக்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அன்ஷுமான் கெய்க்வாட் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தாலும் முன்னாள் வீரர்கள் கங்குலி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

கோலி மட்டும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவரான கபில் தேவ்வும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ``6 பேர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டாலும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வெற்றி விழுக்காடு அதிகமாக இருப்பதன் காரணமாகவும், இந்திய அணியின் செயல்பாடு ரவியின் பயிற்சியின் கீழ் சிறப்பாக உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

kapil dev
kapil dev

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் சக உறுப்பினர்களோடு ஆலோசனை செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவரை பயிற்சியாளராகப் பரிந்துரை செய்கிறேன். பயிற்சியாளராக ரவி தொடர்ந்தால் கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு இந்திய அணியை பலப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்" என்று நேர்காணல் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் என சூசகமாக அறிவித்தார் கபில்தேவ்.