Published:Updated:

`டி20 உலகக் கோப்பையும் 2020 ஐபிஎல் தொடரும்!' - தோனி குறித்த கேள்விக்கு ரவிசாஸ்திரி பதில்

இந்திய அணியில் தோனி மீண்டும் இடம்பிடிப்பாரா என்ற கேள்விக்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்திருக்கிறார்.

தோனி - ரவி சாஸ்திரி
தோனி - ரவி சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அதற்குப் பின் இந்திய அணி 3 டி20 மற்றும் ஒரு ஒருநாள் தொடர்களில் விளையாடிவிட்டது. இதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று யூகங்கள் கிளம்பின.

தோனி
தோனி

இதுதொடர்பாக பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற கங்குலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் இதுதொடர்பாகக் கடந்த அக்டோபரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது தோனிதான் என்று இருவரும் ஒரேமாதிரி பதிலளித்தனர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க!'-செய்தியாளர்களைக் கலாய்த்த கோலி

இந்தநிலையில், தோனி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரவி சாஸ்திரி முன் மீண்டும் வைக்கப்பட்டது. அதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்றும் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரவி சாஸ்திரி, ``ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்தே அமையும்'' என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``விக்கெட் கீப்பிங் பணியை மற்ற வீரர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதும் அவர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடர் வருவதால், இந்திய அணியை முடிவு செய்யும் முக்கிய தொடராக அது இருக்கும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

இதனால், ஐபிஎல் 2020 தொடர் உலகக் கோப்பைத் தொடருக்குத் தேர்வாகும் வீரர்களுக்கு முக்கியமான தொடராக அமையும் என்று தெரிகிறது. அதேநேரம், 2021-ம் ஆண்டு ஏலத்தில் சி.எஸ்.கே அணியில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அணி நிர்வாகத்திடம் தோனி கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியுள்ள சி.எஸ்.கே நிர்வாகிகள், ``2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்கும் ஏலத்தில் தோனி கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தது உண்மைதான். அப்படி ஏலம் நடக்கும்போது Right-to-Match மூலம் குறைந்த விலைக்கு தோனியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அமையும். ஒரு கேப்டனாகத் தோனி, அணியின் நலனுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார். 2021 ஐபிஎல் தொடரில் விளையாடத் தயாராக இருப்பதாகத் தோனி கூறியிருக்கிறார். அதனால், அவர் அதற்கு முன்பாக ஓய்வுபெறும் திட்டம் எதுவும் இல்லை'' என்று கூறியிருக்கிறார்.

`அவர்தான் தீர்மானிக்கணும்; உலகக் கோப்பைக்குப் பிறகு சந்திக்கவில்லை!' - தோனி குறித்து ரவி சாஸ்திரி

அதேபோல், சி.எஸ்.கே-வில் ஷேன் வாட்சன், பிராவோ, ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அநேகமாக 2020 ஐபிஎல் தொடரோடு ஓய்வுபெற வாய்ப்பு இருக்கிறது. அதன்பின்னர் நடக்கும் ஏலத்தில் புதிய அணியைத் தேர்வு செய்து, 2021 ஐபிஎல் தொடரில் அந்த அணியோடு பயணித்து புது நம்பிக்கை அளிக்க தோனி தயாராக இருப்பதாகவும் சி.எஸ்.கே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.