Published:Updated:

அதிர்ச்சி, அவமானம், அசிங்கம்... கோலியா, ரவி சாஸ்திரியா... பிரச்னை யாரிடம்?! #AUSvIND

அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதும், சில நொடிகள் அப்படியே தன்னுடைய இரண்டாவது ஸ்லிப் இடத்தில் நின்று கொண்டிருந்தார் கேப்டன் விராட் கோலி. அவரின் கால்கள் அசையவில்லை. தலை கவிழ்ந்திருந்தது. முகம் வாடியிருந்தது. கிங் கோலி நொறுங்கிப்போய் நின்றுகொண்டிருந்தார்.

2020, டிசம்பர் 19... கேப்டன் கோலிக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் அவமானகரமான நாள். 4,9,2,0,4,0,8,4,0,1... செல்போன் நம்பர்போல இருக்கும் இதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் நேற்றைய ஸ்கோர் கார்ட். 36 ரன்களுக்கு இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிந்தது. 70 ஆண்டுகால இந்திய கிரிக்கெட்டில் மிகவும் குறைவான ஸ்கோர்.

2016, டிசம்பர் 19... இதேநாளில்தான் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரான 759/7 பதிவுசெய்யப்பட்டது. 199,71, 16,15,303,29,67,51... அன்றைய ஸ்கோர் கார் இது. ஒருவர்கூட சிங்கிள் டிஜிட்டில் இல்லை.

இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இந்திய அணிக்குள் பெரிய மாற்றம் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இதே கோலிதான் அப்போதும் கேப்டன். கிட்டத்தட்ட அதே அணிதான். ஆனால், போட்டி நடந்தது சென்னையில்... இப்போது போட்டி நடந்திருப்பது ஆஸ்திரேலியாவில்!

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதும், சில நொடிகள் அப்படியே தன்னுடைய இரண்டாவது ஸ்லிப் இடத்தில் நின்று கொண்டிருந்தார் கேப்டன் விராட் கோலி. அவரின் கால்கள் அசையவில்லை. தலை கவிழ்ந்திருந்தது. முகம் வாடியிருந்தது. மனம் நொந்துபோயிருந்தது. கிங் கோலி எனக் கொண்டாடப்படும் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் நொறுங்கிப்போய் நின்றுகொண்டிருந்தார். ஆனால், வெளிநாட்டு மைதானங்களில் இப்படி பெருத்த அவமானங்களைச் சுமந்து நிற்பது கோலிக்குப் புதிதல்ல!

‘'என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் தெரிவித்திருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்.’’
அணில் கும்ப்ளே

2017 ஆகஸ்ட்டில் கும்ப்ளேவின் விலகலுக்குப்பிறகு முழுநேரப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் ரவி சாஸ்திரி. கடந்த ஆண்டு கபில்தேவ் தலைமையில் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களும் ''ரவி சாஸ்திரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தான் எங்கள் எல்லோரின் முதல் தேர்வாக இருந்தார்'' என அறிவித்தார்கள். ரவி சாஸ்திரியைவிட்டால் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பயிற்சியாளர் கிடைக்கமாட்டார் என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் அன்று சொன்னார்கள்.

அதுதான் உண்மையா?!

ரவி சாஸ்திரி பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபிறகு 2018-ல் இங்கிலாந்து சென்றது இந்தியா. 4-1 என டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு 2018-ன் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. ஆனால், ஸ்மித், வார்னர் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்குள் இல்லாத காலம் அது. அடுத்து கரீபியன் தீவுகளுக்குச்சென்ற இந்தியா, 2-0 எனத்தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் இப்போது எப்படிப்பட்ட அணியாக இருக்கிறது என்பது நம் எல்லோருக்குமே தெரியும் என்பதால் இந்தத் தொடர் வெற்றிகுறித்து சிலாகிக்கப் பெரிதாக ஏதும் இல்லை.

#AUSvIND
#AUSvIND
David Mariuz
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்து சென்ற இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை இழந்தது. ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிஸன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் திணற அவமானகரமானத் தோல்விகள். ஆனால், இந்தத் தோல்விகளில் இருந்து ஒரு சிறு பாடம்கூட கற்றுக்கொள்ளவில்லை, எந்தத் தவறுகளையும் திருத்திக்கொள்ளவில்லை என்பதற்கான உதாரணம்தான் அடிலெய்ட் டெஸ்ட்டின் 36/9.

இந்தியாவின் இந்தத் தோல்விகளுக்கு மிக முக்கியமானக் காரணம் ப்ளேயிங் லெவன் சொதப்பல்கள். பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப சரியான வீரர்களைத் தேர்ந்தெடுக்காமல் தங்கள் மனம்போனப் போக்கில் ப்ளேயிங் லெவனை இறுதிசெய்வதுதான் தோல்விகளுக்கான ஆரம்பம். ஆனால், ப்ளேயிங் லெவன் சொதப்பல்களுக்கு கோலியை மட்டும் காரணம் காட்டி, தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார் ரவி சாஸ்திரி. பயிற்சியாளர் என்கிற முறையில் ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் அவரின் பங்கு மிக முக்கியமானது. கேப்டனுக்கு சரியானப் ப்ளேயிங் லெவனைப் பரிந்துரைப்பதுதான் அவருடைய முக்கியமான வேலையே... நான் சொல்வதைக் கோலி கேட்கமாட்டார் என்று ரவி சாஸ்திரி சொல்வாரேயானால், அவர் பயிற்சியாளராக இருப்பதற்கான எந்தத் தகுதியும் இல்லாதவர். அணில் கும்ப்ளே போன்று பாதியிலேயே பதவி விலகியிருக்க வேண்டியவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து அவமானங்கள்!

2018-ல் இங்கிலாந்தில் 4-1 எனத் தொடரை இழந்த இந்தியா அந்தத் தொடரில் ப்ளேயிங் லெவனில் எவ்வளவு குழப்படிகள் செய்தது என்று கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், கோலி- சாஸ்திரி கூட்டணியின் அபத்தங்கள் புரியும்.

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட்டில், டெஸ்ட் போட்டிகளுக்கு விளையாடுவதற்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டு, அதற்காக மட்டுமே அணியில் இடம்பிடிக்கும் செத்தேஷ்வர் புஜாரா ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. புஜாரா ஏன் சேர்க்கப்படவில்லை என்பதை விளக்குவதற்கான சரியான எந்தக் காரணமும் கோலி - சாஸ்திரியிடம் இல்லை. பேட்டிங் சொதப்பலால் முதல் டெஸ்ட்டை இழந்தது இந்தியா.

இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸில் நடந்தது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். முதல் டெஸ்ட்டில் புஜாராவின் நீக்கம் சர்ச்சைக்குள்ளானதால் தவானுக்குப் பதில் புஜாரா சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஸ்பின்னரான குல்தீப் யாதவ் சேர்க்கப்பட ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்தியாவின் தோல்வி உறுதியானது. லார்ட்ஸ் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது.

#AUSvIND
#AUSvIND
David Mairuz

நாட்டிங்ஹாமில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது. ஆனால், இந்த வெற்றி கேப்டன் - கோச்சின் சரியான திட்டமிடலால் கிடைத்த வெற்றியல்ல. தவான் மீண்டும் உள்ளே வந்தது, தினேஷ் கார்த்திக்கு பதில் ரிஷப் பன்ட் உள்ளே வந்தது என சொதப்பல்கள் அதிகம். தவான், பன்ட் என இருவரின் பங்களிப்புமே இந்த டெஸ்ட்டில் மிகவும் சுமார்தான். ஆனால், இந்தியா வெற்றிபெற்றுவிட்டது.

சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட்டில் ப்ளேயிங் லெவனை மாற்றாமலேயே சொதப்பல் நடந்தது. வெற்றிபெற்ற ப்ளேயிங் லெவனில் இருந்துவிட்டார் என்பதற்காகவே தவானை மட்டும் அல்ல, ப்ளேயிங் லெவனிலேயே எந்த மாற்றமும் செய்யாமல் புது வியூகம் வகுத்தது இந்தியா. பிட்ச்சின் தன்மைக்கு ஏற்றபடியான பேட்ஸ்மேனோ, பெளலர்களோ, ஆல்ரவுண்டர்களோ அணியில் சேர்க்கப்படவில்லை. கோலி, புஜாரா, ரஹானேவைத்தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப இந்தியா தோல்வியை சந்தித்தது.

ஐந்தாவது டெஸ்ட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன் என சொதப்பி, அதிலும் தோல்வி. மொத்தத்தில் 4-1 எனத் தொடர் தோல்வி.

சொதப்பல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஸ்பின் ட்ராக்கில் விக்கெட் எடுக்கத்திணறிய ஸ்பின்னர் என இங்கிலாந்து தொடரில் கோலியும், சாஸ்திரியும் பெரும் பாடம் கற்றுக்கொண்டனர். ஆனால், தவறுகளைச் சரிசெய்ய சிறு முயற்சிகூட எடுக்கவில்லை என்பது நியூஸிலாந்தில் நிரூபணமானது. இதோ அடுத்த அடி அடிலெய்ல்டில் விழுந்திருக்கிறது.

ஃபுட் மூவ்மென்ட்!

90, 2000-ம்களில் இந்தியாவின் பெரும்பிரச்னையாக இருந்தது பெளலிங். சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண் என ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து பிட்ச்களில் வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடக்கூடிய மிகத்திறமையான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தார்கள். ஆனால், அந்த மைதானங்களில் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியின் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இதனால்தான் பெரும்பாலானப் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆனால், ரன் மெஷின் கோலி கேப்டனாக இருக்கக்கூடிய இக்காலகட்டத்தில் பும்ரா, ஷமி, இஷாந்த், அஷ்வின் என எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கக்கூடிய பெளலர்கள் இருக்கிறார்கள். ஆனால், வேகப்பந்து வீச்சைத் தாக்குப்பிடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை.

#AUSvIND
#AUSvIND

ஓப்பனிங் பேட்ஸ்மேன்!

ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முக்கியம் என்பது பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்குத் தெரியாததல்ல. எந்த டெஸ்ட் தொடரிலுமே முதல் போட்டி மிக முக்கியமானது. முதல் போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்தால் அந்த பாசிட்டிவ் எனர்ஜி அடுத்தடுத்தப் போட்டிகளுக்கும் நம்பிக்கைக்கொடுக்கும். ஆனால், அந்த பாசிட்டிவ் எனர்ஜி பற்றியெல்லாம் சாஸ்திரி கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர் பல ஆண்டுகளாக பார்டர் - கவாஸ்கர் டிராபி என்று பெயரிடப்பட்டு நடந்து வருகிறது. இந்த ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர் இருவருமே ஷுப்மான் கில் இந்தியாவின் ஓப்பனராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு பேட்டி கொடுத்திருந்தார்கள். காரணம் பயிற்சிபோட்டியில் பிரித்வி சொதப்ப, ஷுப்மான் கில் சிறப்பாக ஆடியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதாலோ என்னவோ அடிலெய்ட் டெஸ்டுக்கான அணியில் ஷுப்மான் கில் சேர்க்கப்படவில்லை.

பயிற்சிப் போட்டிகள் நடப்பதே யார் இந்த பிட்சின் தன்மையைப் புரிந்து சிறப்பாக ஆடுகிறார்கள், யாரைப் ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவரலாம் என்று முடிவெடுப்பதற்காகத்தான். ஆனால், பயிற்சி போட்டியில் சொதப்பும் வீரரைச் சேர்ப்போம், சிறப்பாக ஆடிய வீரரைப் புறக்கணிப்போம் என்றால் அது என்ன மாதிரியான வியூகம்?!

ஐபிஎல் போட்டிகளிலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் பிரித்வியின் விக்கெட்டை சொல்லிவைத்து எடுத்தார்கள். ஐபிஎல் தொடரிலேயே அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டவர் பிரித்வி. ஆனால், அவருக்கு ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரின் பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றால் அது என்னமாதிரியான அணித்தேர்வு?!

இந்திய அணிக்குள் வீடியோ அனலிஸ்ட்டுகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண் ஆகியோரின் பேட்டிங் வீடியோக்களை இனியாவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து போட்டுக் காட்டவேண்டும். அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பந்துவீசி, தனக்கு கவர் டிரைவ் ஆசைக்காட்டி அவுட் ஆக்குகிறார்கள் எனப்புரிந்துகொண்டு ஒரு இன்னிங்ஸ் முழுக்க டிரைவ் ஷாட்டே ஆடாதவர் சச்சின். சிட்னி மைதானத்தில் சச்சின் அன்று எடுத்த ரன்கள் 241 நாட் அவுட். மூவிங் பந்துகளை எப்படி தடுத்தாடுவது என டிராவிட்டின் பேட்டிங்கைப் பார்த்தால் புரியும். பெளலர்களின் கை மேலோங்கும் பிட்ச்களில் ஒரு மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன் எப்படி நிற்கவேண்டும் என்பது லட்சுமணின் பேட்டிங்கைப் பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும். ஆக்ரோஷமான அணுகுமுறை என்றால் என்ன என்பது கங்குலியின் பேட்டிங்கைப் பார்த்தால் விளங்கும்.

436 பந்துகள், 10 மணி நேர ஆட்டம், சச்சினின் 241 ரன்களில் ஒரு கவர் டிரைவ் கூட இல்லை... ஏன்?! #Sachin
#AUSvIND
#AUSvIND
David Mariuz

அடிலெய்டில் காற்றின் தன்மைக்கு ஏற்ப ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் மூவரும் பந்து வீசுகிறார்கள். பந்து காற்றில் மூவ்வாகி வருகிறது. ஆனால், இந்தப் பந்துகளை எதிர்கொள்ளக்கூடிய டெக்னிக் எதுவும் இந்திய பேட்ஸ்மேன்களுக்குத் தெரியவில்லை. கால்களை நகர்த்தி, பேட்டை விலக்கி ஆடும் ஃபுட் மூவ்மென்ட்டை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சுத்தமாக மறந்துபோனார்கள்? மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி என டெஸ்ட் ஸ்பெஷல் பேட்ஸ்மேன்களே மூவிங் பந்தை எதிர்கொள்ளத்தெரியாமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார்கள் என்றால் ஆஸ்திரேலியத் தொடருக்கு என இவர்கள் என்ன மாதிரியான பிரத்யேகப் பயிற்சிகள் எடுத்தார்கள், பயிற்சி கொடுத்திருக்கவேண்டிய ரவி சாஸ்திரி என்ன செய்துகொண்டிருந்தார்?

''நாங்கள் புதுமையாக எந்தப்பந்துகளையும் வீசிவிடவில்லை. ஃபுல்லர் லென்த் பந்துகளை, ஸ்டம்ப் லைனை நோக்கி நேராக வீசினோம். இந்திய பேட்ஸ்மேன்களால் இந்தப் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை'' என்று போட்டி முடிந்ததும் சொன்னார் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்திருந்த ஜோஷ் ஹேசில்வுட். இந்தப் பேட்டி மிக முக்கியமானது. அதாவது டெஸ்ட் போட்டிகளில் காலங்காலமாக பயன்படுத்தப்படும் பெளலிங் வியூகத்தைத்தான் நாங்கள் கையில் எடுத்தோம் என்பதுதான் அவர் சொன்னது. இந்தப் பந்துகளையே எதிர்கொள்ள முடியவில்லை என்றால் மெல்போர்னில் எகிறிவரும் பந்துகளை எப்படி எதிர்கொள்வார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள்? அதுவும் இனி நடக்கப்போகும் மூன்று டெஸ்ட்களுக்கும் கோலி அணியில் இல்லை!

ஆஸ்திரேலிய டெஸ்ட் என்றால் லட்சுமணன் இல்லாமலா... வெறிபிடிக்கவைத்த விவிஎஸ் ஸ்பெஷல்கள்! #AUSvIND
சர்வவல்லமைப் பொருந்திய ரவி சாஸ்திரியின் ப்ளேயிங் லெவன் முடிவுகளை மாற்றிப்போடக்கூடிய கேப்டன் இனி இல்லை. அதனால், 15 ஆண்டுகளில் இல்லாத மிகத்திறமையான அணியை உருவாக்கி வைத்திருப்பதாகச் சொல்லும் ரவி சாஸ்திரி, மெல்போர்னில் என்ன மாதிரியான வியூகங்கள் அமைக்கப்போகிறார் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்... இன்னும் சில நாட்களே இருக்கிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு