“ வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு நம் மக்கள் எந்த ஒரு உணர்வும் அளிப்பதில்லை. இதனால் கடந்த மூன்றாண்டு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று பலமுறை யோசித்ததுண்டு ” என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்திலும் 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதனால் பவுன்சர் பூமியான தென்னாப்பிரிக்காவில் விராட்டின் படை வெற்றி பெறுமா என்று எதிர்வரும் தொடரின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரவி அஷ்வின் சமீபத்தில் ESPNக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஒரு தொடருக்காக தான் ஆயத்தமாகும் முறை, காயங்களை எதிர்கொள்ளும் விதம், மனதளவிலான ஆரோக்கியம் , ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த போடப்பட்ட திட்டம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அப்பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதிலிருந்து சில துளிகள்
“ 2018 முதல் 2020-ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட பல முறை யோசித்தேன். ஏனென்றால் அந்த நாட்களில் நான் மிக அதிக அளவிலான உழைப்பை என் கேமை மேம்படுத்த செலவிட்டேன். ஆனால் என் உழைப்பிற்கான விளைவுகளோ முற்றிலும் நேர் மாறாக இருந்தன. இது என்னை மிகவும் பாதித்தது. கூடவே காயங்கள் வேறு. Athletic pubalgia மற்றும் patellar tendonitis ஆகியவற்றால் அவதிப்பட்ட எனக்கு பந்துவீசுவதே மிக சவாலாக இருந்தது

ஒரு பந்தை வீசிய பிறகு உடல் முழுவதும் வலி ஏற்படும். மேலும் முட்டி வலியை குறைப்பதற்காக அடுத்த பந்து வீசும்போது சற்று குறைவாக குதிப்பேன். இரண்டாவது பந்தை குறைவான உயரத்தில் குதித்து வீசுவதால் என் தோள்பட்டையை அதிக அளவில் உபயோகிப்பேன். அப்போது Pubalgia வேலையை காட்டத் தொடங்கும். எனவே அடுத்த பந்தில் தோல்களுக்கு பதில் இடுப்பு பகுதில் அதிக அழுத்தம் கொடுப்பேன். இவ்வாறு மாற்றி மாற்றி ஆறு பந்துகளை வீசி முடிக்கையில். ‘ எனக்கு இப்போது ஓய்வு தேவை ‘ என்ற உணர்வு தானாக ஏற்படும்”
“ இவ்வாறு என் உழைப்பை கொட்டுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என்னை நீங்கள் அணியில் சேர்க்காமல் கூட விடுங்கள் ஆனால் என் போராட்ட குணத்தை மட்டும் கேள்வி எழுப்பாதீர்கள். அது தான் என்னை மிகவும் பாதிக்கிறது. மேலும் எனக்கு ஏற்படும் காயங்களுக்கு மக்கள் உணர்வளிக்காமல் என் ஆட்டத் திறனை மதிப்பிடுவது எனக்கு மேலும் வலிக்கிறது. இதுவே நான் ஓய்வு பெற நினைத்ததற்கான காரணம்” என்றார் அவர்.
எதிர்வரும் ஒரு தொடருக்காக ஆயத்தமாவது பற்றிக் கூறுகையில், “ ஒரு போட்டிக்காக இரண்டு வகையில் தயாராக வேண்டும். ஒன்று உடல் சார்ந்தது. மற்றொன்று மனம் மற்றும் வியூகம் சார்ந்தது. இங்கே உடல் மற்றும் திறன்களை மேம்படுத்த கொடுக்கப்படும் முக்கியத்துவம் வியூகம் அமைப்பதற்கு கொடுக்கப்படுவதில்லை. இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் முன் இலங்கையுடன் ஒரு தொடர் ஆடியது இங்கிலாந்து. அப்போது இலங்கை தொடரை ஒரு பந்து கூட தவறவிடாமல் நான் பார்த்தேன். இலங்கை பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து பேட்டர்கள் எந்த திட்டத்தோடு சமாளிக்கிறார்கள் என்பதை அறியவே அவ்வாறு செய்தேன்” என்றார்.
சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. அப்போட்டிக்கு பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார் கேப்டன் கோலி. இச்செய்தி வெளியான உடனேயே இந்திய அணி அத்தொடரை 0-4 என்ற கணக்கில் நிச்சயம் தோற்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் பல்வேறு சவால்களுக்கிடையில் ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்தது இந்தியா. இது குறித்து அவர் “ அது ஒரு தனி மனித பார்வையில் உள்ள தவறால் நடப்பதில்லை. விராட் கிளம்பிய பிறகு அணியில் புஜாரா இருந்தார், துணை கேப்டன் ரஹானே இருந்தார், பௌலிங்கிற்கு பும்ரா மற்றும் நான் இருந்தோம். நாங்கள் அனைவரும் அணிக்காக பலமுறை வெற்றி பெற்று தந்திருக்கிறோம்" என்று கூறினார் அஷ்வின்.