Published:Updated:

ரஷீத் கான் : ''ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நாம் போராடியே ஆக வேண்டும்'' - நம்பிக்கை தரும் நாயகன்!

Rashid Khan

ஆப்கானிஸ்தான் - இப்போது தாலிபான்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. உயிர்ச்சேதம், பொருள்சேதம் என பல இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆப்கான் மக்களுக்கு உதவுவதைத்தன் முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்.

ரஷீத் கான் : ''ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நாம் போராடியே ஆக வேண்டும்'' - நம்பிக்கை தரும் நாயகன்!

ஆப்கானிஸ்தான் - இப்போது தாலிபான்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. உயிர்ச்சேதம், பொருள்சேதம் என பல இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆப்கான் மக்களுக்கு உதவுவதைத்தன் முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்.

Published:Updated:
Rashid Khan

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அடையாளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு மிகமுக்கியக் காரணமாகத் திகழ்பவர். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ரஷீத், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பொது வெளியிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர். அமைதியின் அவசியத்தை, கல்வியின் முக்கியத்துவத்தை பல முறை வலியுறுத்தியிக்கும் இந்த இளம் ஹீரோ, இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தொடங்கியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில நாள்களாக ஆப்கானிஸ்தான் யுத்தத்தை சந்தித்துவந்த நிலையில், எந்தவித தயக்கமுமின்றி பொது வெளியில் தன் கருத்துகளைப் பதிவிட்டார் ரஷீத்.

அதில், "உலக தலைவர்களே, என் நாடு மாபெரும் பிரச்னையில் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளும், உடைமைகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயிரமாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. எங்களை இப்படியான சிக்கலில் தவிக்கச் செய்யாதீர்கள். ஆப்கன் மக்களைக் கொல்வதையும், ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்கு அமைதி தேவை" என்று கடந்த வாரம் ட்வீட் செய்திருந்தார்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

அதுமட்டுமல்லாமல், தன் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கடந்த ரம்ஜானின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் 9,461 பவுண்டுகள் crowd funding மூலம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் 5 மாகாணங்களிலுள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

இப்போது போரினால் ஆப்கானிஸ்தான் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதால் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கியிருக்கிறார் ரஷீத். தன் அறக்கட்டளையோடு மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தோடு இணைந்து ஆன்லைன் மூலம் நிதி திரட்டத் தொடங்கியிருக்கிறார்.

"என்னால் எல்லா பெரிய விஷயங்களையும் செய்துவிட முடியாது. ஆனால், சில சின்ன சின்ன விஷயங்களை நேசத்தோடும் உத்வேகத்தோடும் செய்ய முடியும். பெரும் காரணத்தோடு செய்யப்படும் விஷயங்களைவிட அன்போடு செய்யும் சிறு உதவியும் பெரியது. இந்தக் காலகட்டத்தில் சிறுவர்களின் படிப்புக்கு, ஆதரவற்றவர்களுக்கு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்துக்கு ரஷீத் கான் அறக்கட்டளை உதவி செய்யும்" என்று கூறியிருக்கிறார் ரஷீத்.

தன் சொந்த நாட்டுக்காகக் குரல் கொடுப்பதால் மட்டும் அவரை ஹீரோ என்று சொல்லிவிடவில்லை. குழந்தைகளின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் அவர். பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப்பட்டபோதும் குரல் கொடுத்திருக்கிறார். எங்கு எப்போது ரத்தம் கசிந்தாலும், குழந்தைகள் இன்னல்களைச் சந்தித்தாலும், ரஷீத் கான் தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

இந்த மே மாதம் பாலஸ்தீனம் தாக்குதலுக்குள்ளானபோதும் அவர் தன் வருத்ததை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். "உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரனாக, இந்த உலகம் போரற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றேன். ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் மக்கள் மடிவதை என்னால் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் கொல்லப்படுவதை விடவும் கொடூரமான விஷயம் எதுவும் இல்லை. அந்தக் குழந்தைகள் பறவைகளின் கீச்சொலிகளுக்கு நடுவே துயிலெழ வேண்டுமென்று விரும்புகிறேன். குண்டுச் சத்தத்துக்கு நடுவே அல்ல" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இதற்கெல்லாம் காரணம் அவர் வளர்ந்த சூழ்நிலை. போருக்கும், குண்டுச் சத்ததுக்கும் நடுவே ரத்தத்தைப் பார்த்து வளர்ந்தவர் அவர். இப்போதுதான் ஒரு மாற்றுப் பாதையில் அந்த நாடு நகர்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த நகர்வில் தானும் ஒரு அங்கமாய் விளங்குகிறார். அதனால்தான், மீண்டும் அப்படியொரு சூழ்நிலையை அடுத்த தலைமுறை சந்திப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"நான் அரசியல்வாதி அல்ல. ஆனால், அமைதியை நிலைநாட்டவேண்டுமென்று உலக தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் போர்களுக்கு நடுவே வளர்ந்தவன். அதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சத்தை என்னால் உணர முடியும். ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்திலும் ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதற்குமேல் என்னால் இதைப் பார்க்க முடியாது. ஆம், எது சரியோ அதற்காக நாம் போராடியாகவேண்டும்" என்றும் பாலஸ்தீன தாக்குதலின்போது பதிவிட்டிருந்தார் ரஷீத்.

UNICEF ஆப்கானிஸ்தானின் தூதராக இருக்கும் ரஷீத் கான், குழந்தைகளின் கல்விக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்விக்கு எப்போதும் குரல் கொடுப்பவர். அதனால்தான், ரஷீத் கான் அறக்கட்டளை கவனம் செலுத்தும் விஷயத்தில்கூட நீர், சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னால் குழந்தைகளின் கல்வியை குறிப்பிட்டிருப்பார். கல்வியின் அவசியத்தை, அது தன் நாட்டில் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தின் முக்கியத்துவத்தை, குழந்தைகளின் நலனை இந்த அளவுக்கு வலியுறுத்தும் ரஷீத் கானுக்கு வயது 22!