நடப்பு உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்த ஆப்கானிஸ்தான், ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவில்லை. ஆல்ரவுண்டர் குல்பதின் தலைமையில் களமிறங்கி, 9 லீக் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது, ஆப்கான் அணி. நிலையற்ற பேட்டிங் ஆர்டர், சுழற்பந்துவீச்சை மட்டுமே முழுமையாக நம்பியிருந்த பெளலிங் யூனிட், போட்டிக் களத்தில் கேப்டன் குல்பதினின் சொதப்பலான முடிவுகள் போன்ற காரணங்களால், ஆப்கான் அணியால் சோபிக்க முடியவில்லை.

ஜூலை 4-ம் தேதி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விளையாடியதே நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் கடைசிப் போட்டி. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களிலும் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக அஸ்கர் ஆப்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகத்தான் கேப்டனை மாற்றியது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு, உள்நாட்டு வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறிய பிறகு, இப்போது மீண்டும் கேப்டன் மாற்றப்பட்டது, அணிக்கு பாதகமா சாதகமா என்பது ஆப்கானிஸ்தான் விளையாடும் போட்டி முடிவுகளில் தெரியும்.