ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பன்ட்-க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விக்கெட் கீப்பிங் பணி கே.எல்.ராகுல் வசம் வந்தது. கூடுதல் பேட்ஸ்மேனாக மனிஷ் பாண்டே அணிக்குள் கொண்டு வரப்பட்டார். முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றது இந்திய அணி.
கே.எல்.ராகுலைத் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாம் என்ற மனநிலையில் இந்திய அணி உள்ளது. கோலியின் பேச்சும் இதை உறுதிசெய்துள்ளது. `நாங்கள் நன்றாகத்தான் ஆடி வருகிறோம். ஆடும் லெவனில் மாற்றங்களைக் கொண்டுவராமல் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அணி சரியான கலவையில் இருக்கும்போது அதில் ஏன் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியைச் செய்வதால் அணிக்குள் மேலும் ஒரு பேட்ஸ்மேனைக் கொண்டுவர முடிகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று’ எனப் பேசியிருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை இதற்கு உதாரணமாக கூறியிருந்தார். தோனியின் வருகைக்கு முன்னரே ராகுல் டிராவிட்தான் விக்கெட் கீப்பிங் பணியைச் செய்துவந்தார்.
தோனிக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். தோனி செய்வதை ரிஷப் பன்ட் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரரான ரிஷப் பன்ட்-க்கு இதனால் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. விக்கெட் கீப்பிங்கில் சிறிய தவறு செய்தாலும் ரசிகர்கள் தோனியின் பெயரை மைதானத்தில் எழுப்புகின்றனர். இந்த நிலையில்தான், பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் பணியில் தொடர வைக்கலாம் என அணி நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.
கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்வது அணிக்கு சரிப்பட்டு வராது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ``ராகுல் டிராவிட் இருந்ததைவிட கே.எல்.ராகுல் சிறந்த விக்கெட் கீப்பர்தான். ஆனால், இது ஒரு வழக்கமான ஒன்றாக இருப்பதை விரும்பவில்லை. 50 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு டாப் ஆர்டரில் இறங்கி ஆட முடியாது. ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு இன்னொரு வேலையைக் கொடுக்காதீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில், ராகுல் மிகவும் திறமையான வீரர். அவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற ஸ்லாட்டுக்குள் கொண்டு வராதீர்கள். நீங்கள் அப்படிச் செய்வது அவரது பணிச்சுமையை அதிகரிக்கும். அணியின் தேவைக்கு ஏற்ப ஒருமுறை அவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக பயன்படுத்திக்கொண்டால் பரவாயில்லை. ஆனால், நீண்ட காலத்துக்கு அவரை அந்தப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவரை 10,000 ரன்களை எடுக்க அனுமதியுங்கள்” என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.