Published:Updated:

ராகுல் டிராவிட்டின் இந்தியாவோடு சமர்… இழந்த மாண்பை மீட்குமா இலங்கை?! #INDvSL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராகுல் டிராவிட் - ஷிகர் தவான்
ராகுல் டிராவிட் - ஷிகர் தவான்

சொந்த மண்ணில், ஒரு அபார வெற்றியைப் பதிவேற்றினால் மட்டுமே, இழந்த மாண்பை மீட்க முடியும் என்பதால் இத்தொடரை இலங்கை அணி மிகுந்த கவனத்தோடு அணுகும்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது இந்திய அணி. இலங்கை இப்போது இந்தியாவுக்கு சவால்விடுக்கும் அணியாக இல்லையென்றாலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா ஆடும் ஒயிட்பால் தொடர் என்பதால் இத்தொடர் அதிக கவனம் பெறுகிறது. மேலும் முதல்முறையாக இந்தியாவுக்கு பயிற்சியாளராக தலைமையேற்று அணியை வழிநடத்தயிருக்கிறார் ராகுல் டிராவிட். புதிய பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் செயல்பாடுகள் எப்படியிருக்கப்போகிறது, இளம் வீரர்களை அவர் அணிக்குள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்போகிறார், பட்டைத் தீட்டப்போகிறார் என்று பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆவலோடு தொடரை எதிர்பார்த்தபடியிருக்கிறார்கள்.

களம் எப்படி?

மூன்று ஒருநாள் போட்டிகளும், அதன் பின்னர் மூன்று டி20 போட்டிகளும், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில்தான் நடைபெற இருக்கின்றன. மைதானத்தின் கடந்த கால வரலாறு, களம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்கிறது. குறிப்பாக, இந்தியா இந்த மைதானத்தில், ஆறு முறை 300-க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளது. கடைசியாக, 2017-ல் இங்கே விளையாடிய கோலி அண்ட் கோ, 375 ரன்களைக் குவித்து 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே, நிச்சயம் ரன் மழை பொழிய அதிக வாய்ப்புகள் உள்ளன.

மோசமான ஃபார்ம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இங்கிலாந்து என எந்த அணியுடன் விளையாடிய ஒருநாள் தொடரையும் இலங்கை வெல்லவில்லை. இது இன்று நேற்று கதையல்ல, 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது இலங்கை. குறிப்பாக, இந்தியா, இலங்கைக்கு இடையே நடந்துள்ள கடைசி எட்டு ஒருநாள் தொடர்களில், ஒன்றைக் கூட இலங்கை கைப்பற்றவில்லை. அத்தனையிலும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.

இஷான் கிஷன், தவான்
இஷான் கிஷன், தவான்

அவசியமான வெற்றி!

இந்தியாவை விட இலங்கைக்கு இத்தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர் தோல்விகள், சம்பள விவகாரம், அதனால் வீரர்கள் அதிருப்தி, போர்டுக்கும் வீரர்களுக்குமான பனிப் போர், வீரர்கள் விதிமீறல், புதுமுக வீரர்கள் சர்வதேச தளத்தில் சாதிக்கத் திணறுவது என தவறான காரணங்களுக்காகவே, இலங்கை சமீபகாலங்களில், ஊடகங்களில் உலா வருகிறது. இதுவும், இலங்கை வீரர்களை எழ விடாமல் வீழ்த்தும் மைண்ட் கேமாக மாறிப் போனது. இதை மாற்றியமைத்து, சொந்த மண்ணில், ஒரு அபார வெற்றியைப் பதிவேற்றினால் மட்டுமே, இழந்த மாண்பை மீட்க முடியும் என்பதால் இத்தொடரை இலங்கை அணி மிகுந்த கவனத்தோடு அணுகும்.

கேப்டன்களின் கதை!

அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பு, பல ஆண்டுகள் தாமதமாகக் கிடைத்ததைப் போலவே, தற்போது கேப்டனாகும் வாய்ப்பும் தவானுக்கு மிகத் தாமதமாகவே கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில், இந்தியாவின், 25-வது கேப்டனாகக் களிமிறங்கும் ஷிகர் தவான்தான், இந்தியாவுக்கு இதுவரை தலைமையேற்றவர்களில் அதிக வயதில் (35 வயது) கேப்டனாக அறிமுகமாகும் வீரர். இதுவரை வீரராக மட்டுமே ஆடியவருக்கு, கேப்டனாக தன்னை நிரூபித்துக் காட்டும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. இலங்கையின் பக்கமோ, கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை கேப்டன்கள் மாற்றப்பட்டு, பத்தாவது கேப்டனாக தசன் ஷனகா பதவியேற்றுள்ளார். அழுத்தம் நாலாபுறமும் சூழ்ந்துள்ள நிலையில், பதவியேற்றிருக்கும் அவருக்கும், இது சவால் நிறைந்த தொடராகத்தான் இருக்கப் போகிறது.

டிராவிட்டின் வீயூகமென்ன?!

கேப்டனாக உள்ள தவானின் பலத்தை இரட்டிப்பாக்கும் வகையில், பயிற்சியாளராக, ராகுல் டிராவிட் இணைந்துள்ளார். இதுவரை, இந்தியாவின் அண்டர் 19, இந்தியா 'ஏ' அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ள டிராவிட், 'இதைத்தான் செய்வார்!' என கணிக்க முடியாத முடிவுகளை எடுக்கக் கூடியவர். 2018-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்தியா வென்றதிலிருந்து, 'அவரைப் பயிற்சியாளராக்குங்கள்' என்ற கோரிக்கைகள் எல்லா தரப்பிலிருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், இந்தியா அபார வெற்றி பெற்ற போது, இந்தியாவின் பேக் அப் வீரர்களை, அற்புதமாக உருவாக்கிக் கொண்டுள்ளார் என பலதரப்பிலிருந்தும் அவருக்கு புகழ்மாலை சூட்டப்பட்டது. அவர், இந்தத் தொடரில், என்ன வியூகங்கள் அமைப்பார் என்பதில் இருக்கிறது சர்ப்ரைஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய ஓப்பனர்கள்!

இந்திய ஓப்பனிங்கை தவானோடு யார் தொடங்கி வைப்பார் என்பது குறித்து, பல நாட்களாகவே, சூடான விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. ப்ரித்வி, படிக்கல், கெய்க்வாட், ராணா என அவர்களது சமீபத்திய ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு யார் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர்கள் என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இவர்களில், ப்ரித்வி ஷாவுக்கே வாய்ப்புகள் அதிகம் எனினும், படிக்கல்லுக்கும் பின்வரும் போட்டிகளில், விளையாட வாய்ப்பளிக்கப்படலாம்.

வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி

விக்கெட் கீப்பர் யார்?

சூர்ய குமார் யாதவும், மணீஷ் பாண்டேவும், தவிர்க்க முடியாத மத்திய வரிசை வீரர்களாக இருப்பார்கள் என்பதை சுலபமாகவே கணிக்கலாம். அதனைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பருக்கு இந்தியாவிடம், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என இரண்டு சாய்ஸ்கள் உள்ளன. எனினும், முதல் போட்டிக்கு முதல் தேர்வாக, சாம்சன்தான் இருப்பார். ஐபிஎல் போட்டிகளிலேயே, நல்ல தொடக்கத்தைக் கொடுப்பதும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற இயலாமல் ஆட்டமிழப்பதும், நிலைத்தன்மை இல்லாமல் ஆடுவதும்தான் அவரது பலவீனங்கள். அதைச் சரி செய்ய இந்தத் தொடரை சாம்சன் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவரது தலைக்கு மேலே, இஷான் என்னும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இரட்டை ஆல் ரவுண்டர்கள்!

ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா இருவரும், ப்ளேயிங் லெவனை அலங்கரிப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள் ஆல் ரவுண்டர்களாக இருப்பதுதான். இடது கை ஸ்பின்னராக, பிரதான ஸ்பின்னருடன், குர்ணால் துணை நிற்பார். எனினும், ஹர்திக் பாண்டியாவைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், பௌலராகவும், பழையபடி அவர் அணிக்காக ஆட வேண்டுமென்பதே அவரிடம், அணியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பௌலிங் படைக்கு, ஆறு தோட்டாக்களாய், வகைவகையாய், ஆறு பௌலர்கள் வேண்டுமென்பதால், ஹர்திக் பந்தையும் பேச வைக்க வேண்டிய வேளை வந்து விட்டது. குறிப்பாக, உலகக் கோப்பை டி20 அணியில், தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த நகர்வு அவர் விஷயத்தில் அவசியமாகிறது.

பௌலிங் படை!

பௌலிங் யூனிட்டைப் பொறுத்தவரை, சமீபத்திய இங்கிலாந்துடனான தொடரில், கட்டர்களாலேயே கதைமுடித்த, புவனேஷ்வர் தலைமையில் முன்னேறும் படையில், சஹால் தவிர்க்க முடியாத தேர்வாகி விடுவார். கோலியின் ஆஸ்தான பௌலராக வலம் வந்த அவர், சில தொடர்களாகவே திணறி வருகிறார். அவருக்கும் இது முக்கிய தொடராக அமைய உள்ளது. இவர்களைத் தவிர்த்து, தீபக் சஹாருடைய இடமும் கிட்டத்தட்ட உறுதி என்னும் நிலையில், மிச்சமுள்ள ஒர் இடத்தை, சைனியோ, ராகுல் சஹாரோ ஆக்ரமிக்கலாம்.

மணிஷ் பாண்டே, குல்திப் யாதவ்
மணிஷ் பாண்டே, குல்திப் யாதவ்

குல்தீப் வருவாரா?

மற்ற வீரர்கள் எல்லாம், அறிமுகத்துக்காக போராடுகின்றார்கள் என்றால், குல்தீப் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறார். இந்தியா அணிக்குள் அவர் திரும்பவும் நுழைய, முதலில், இந்தத் தொடரில், பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வேண்டும். ஆனால், அதற்கே அவர் போராட வேண்டிய நிலைதான் இங்குள்ளது.

சர்ப்ரைஸ் அறிமுகங்கள்!

இவர்களைத் தவிர, வருண் சக்ரவர்த்தி, கிருஷ்ணப்பா கௌதம், சேத்தன் சகாரியா போன்ற திறமைமிக்க வீரர்களும் இந்தியாவின் வசம் உள்ளனர். "இவர்களை போய் வெளியில் உட்கார வைக்கலாமா?!" என்ற நிலையில்தான் அவர்களது ஆட்டத்திறனும் இருக்கிறது. எனவே, டிராவிட் - தவான் கூட்டணி, இவர்களையும் ஆங்காங்கே பயன்படுத்த வாய்ப்புள்ளது. இரண்டாவது கட்ட வீரர்கள் என அர்ஜுனா ரணதுங்கா விமர்சித்திருந்தாலும், உண்மையில், பிரதான இலங்கை அணிக்கும், ஒருபடி மேலானதாகத்தான் இந்திய அணி இருக்கிறது.

தொடரும் காயங்கள்!

இலங்கையைப் பொறுத்த வரை, மற்ற பிரச்னைகள் தரும் தலைவலி போதாதென்று வீரர்கள் காயமும் அவர்களை பாடாய்படுத்துகிறது. திக்வெல்லா தடை காரணமாக வெளியேற்றப்பட, சொந்தக் காரணங்களுக்காக, மேத்யூஸ் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், குஷால் பெரேரா மற்றும் பினுரா ஃபெர்ணான்டோவும் காயத்தால் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா, உடானா, ரஜிதா உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் மற்ற வீரர்கள் எப்படி ஆடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் தீர்வாகும்.

தங்களது அணியின் அடையாளத்தை மீட்டெடுக்க இலங்கை வீரர்களும், தத்தம் இடத்தை இந்திய டி20 எக்ஸ்பிரஸில் துண்டு போட்டு பிடித்து வைத்துக் கொள்ளும் நோக்கோடு இந்தியா வீரர்களும் களமிறங்குகின்றனர்.

ராகுல் டிராவிட்டின் வியூகங்களைக் காண காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு