Published:Updated:

வீரர்கள்...தனிமைப்படுத்தப்பட்ட சூழல்! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு டிராவிட்டின் கேள்வி

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்குவதற்காக வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான சூழலில் வைப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. கிரிக்கெட் முதல் ஒலிம்பிக் வரை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியங்கள் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இதற்காக குறிப்பிட்ட தொடர்கள் முழுவதும் முடிவடையும்வரையில் வீரர்களை அவர்களது குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்காக வீரர்களை வரும் ஜூன் 23ம் தேதி சௌதாம்ப்டன் மைதானத்துக்கு வருமாறு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்க இருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் வரையில் கிட்டத்தட்ட 9 வாரங்கள் அவர்களது குடும்பத்தினரை விட்டு தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இருக்குமாறும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை தி கார்டியன் இதழ் வெளியிட்டிருக்கிறது. அதேபோல், இந்திய அணிக்கெதிரான தொடருக்காக இதேபோன்று வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலுக்குக் கொண்டுவர தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்திருக்கிறது.

Dravid
Dravid

இந்தநிலையில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியங்களின் இந்த முடிவு நடைமுறைக்கு ஒத்துவராதது என இந்திய அணி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கருத்துத் தெரிவித்திருக்கிறார். வெபினார் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டிராவிட், ``வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ள யோசனை நடைமுறைக்கு ஒத்துவராதது. இந்த சீசனின் முக்கியமான கட்டத்தில் எந்தவொரு போட்டியும் நடக்காததாலேயே அந்தத் தொடர்களை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது’’ என்றார்.

மேலும், ``அவர்கள் சொல்வதுபடியே வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வைத்து, அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்வதாகவே வைத்துக் கொள்வோம். இப்படியான சூழலில் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் வீரர் ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் என்ன செய்வது? அதன்பின்னர் என்ன நடக்கும்? தற்போதைய சூழலில் அமலில் இருக்கும் விதிகளின்படி பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் வந்து வீரர்கள் முதல் அந்தப் போட்டியோடு தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவார்கள். அதுதான் நடக்கும்.

Dravid
Dravid

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொல்வதுபடியே வீரர்களைத் தனிமையான பாதுகாப்பான சூழலில் வைக்க முடிந்தாலும் வேறொரு வழியில் சிக்கல் உண்டு. தற்போதைய தொடர் அட்டவணைப்படி அவர்கள் பயணிக்க வேண்டி வரும். அப்படியான பயணத்தின்போது, இதில் தொடர்புடைய அனைவரையும் அப்படியான சூழலில் வைக்க முடியுமா?’’ என்று ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார். கொரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் விவகாரத்தில் நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

`தாமதமாகும் விசாரணை; ஐசிசி தலைவர் பதவி!’ - பிசிசிஐ-க்கு மாற்றாக கங்குலியின் புதிய பிளான்?
BCCI
BCCI

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் போன்று வீரர்களை தனிமை, பாதுகாப்பான சூழலில் வைப்பது போன்ற எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என்றும் வீரர்களின் உடல்நிலை விவகாரத்தில் இதுபோன்று விபரீத முயற்சிகளை எடுக்க விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு