Published:Updated:

கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?

நான் முட்டியிடுவது மற்றவர்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட காரணமாய் இருக்குமாயின் நான் மிக்க மகிழ்ச்சியோடு அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாபிக் குவின்டன் டிகாக். டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் திடீரென டிகாக் விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியிருக்கிறார் என முதலில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில் நிறவெறிக்கு எதிராக முட்டி போட்டு கையை உயர்த்த டிகாக் மறுப்பு தெரிவித்தே இந்த போட்டியிலிருந்து விலகினார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டே அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து டிகாக்கிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் டிகாக் இந்த உலகக்கோப்பையில் ஆடுவதும், ஏன் இனி அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆடுவதுமே கூட சந்தேகம்தான் எனப் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போ இந்தப் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட டிகாக்கே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் டிகாக், ''நான் முட்டியிடுவதால் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் எனில் அதை செய்யவும் தயாராக இருக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார். மேலும், அந்த அறிக்கையில்...

''நிறவெறிக்கு எதிராக நிற்கவேண்டியதன் தேவையை நான் உணர்ந்திருக்கிறேன். மேலும், கிரிக்கெட் வீரர்கள் எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

டிகாக் வெளியிட்ட அறிக்கை
டிகாக் வெளியிட்ட அறிக்கை
நான் முட்டியிடுவது மற்றவர்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட காரணமாய் இருக்குமாயின் நான் மிக்க மகிழ்ச்சியோடு அதை செய்யத் தயாராக இருக்கிறேன். நான் யாரையும் அவமதிக்க வேண்டுமென அப்படி செய்திருக்கவில்லை. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அவமதிக்க நினைக்கவில்லை.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சில விஷயங்கள் புரியவில்லை. எனது குடும்பம் முழுக்க முழுக்க வெள்ளையினத்தை சார்ந்ததில்லை. எனது குடும்பத்தின் முக்கியமான நபர்கள் கறுப்பினத்தை சேர்ந்தவர்களே. இப்போதில்லை நான் பிறந்ததில் இருந்தே என் வாழ்வில் கறுப்பினத்தவர்களின் சம உரிமை முக்கியமானதாகவே இருந்திருக்கிறது. என்னுடன் வளர்ந்தவர்களுக்கும் என்னுடன் கிரிக்கெட் ஆடியவர்களுக்கும் நான் யார் என தெரியும். நான் நிறவெறிமிக்கவனாக இருந்திருந்தால் அதை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அமைதியாக முட்டி போட்டு விட்டு சென்றிருப்பேனே. ஆனால், அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. அனைவருக்குமான சமநிலையும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் என்னுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏனெனில், கடைசி நிமிடத்தில் மைதானத்திற்கு விளையாட கிளம்பும் போதே இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள். எங்களிடம் கலந்தாலோசிக்க கூட இல்லை.

நான் யார் என்பது எனக்கு தெரியும். அதை இது போன்ற செயல்பாடுகள் மூலம்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் இதை செய்தே ஆக வேண்டும் என சிறிய கலந்தாலோசனை கூட இல்லாமல் சொல்லப்படும்போது, இந்த இயக்கத்தின் அடிப்படையே பொருளற்றதாக போய்விடுவதாக நினைக்கிறேன்.
டிகாக் வெளியிட்ட அறிக்கை
டிகாக் வெளியிட்ட அறிக்கை

என்னுடைய அணியின் ஒவ்வொரு வீரரையும் விரும்புகிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக கிரிக்கெட் ஆடுவதை விட வேறெதுவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்காது. இந்த விஷயங்களெல்லாம் உலகக்கோப்பைக்கு முன்பாகவே பேசி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். உலகக்கோப்பையின் போது இதேமாதிரியான சச்சரவுகள் ஏற்படுவது சரியாக இல்லை. என்னுடன் நின்ற அணி வீரர்களுக்கும் கேப்டன்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் என்னை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. ஆனால், என்னுடைய கேப்டன் என்னை புரிந்துக்கொண்டார். அவர் ஒரு அற்புதமான தலைவர்.''

இப்படியாக அந்த அறிக்கையில் தன்னுடைய விளக்கத்தை குவின்டன் டிகாக் பதிவு செய்துள்ளார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு