Published:Updated:

டி-காக் இன்று ஆடாததற்கு இதுதான் காரணமா? கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி!

'தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்றைய போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்' எனவும் குறிப்பிட்டிருந்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

அமெரிக்காவில், ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் உலகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இன்னும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நிறவெறி காரணமாக ஒரு உயிர்ப்பலியாவதை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது. அந்தச் சம்பவம் நடைபெற்றதிலிருந்தே, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தொடர்ந்து தங்களால் இயன்ற வகையில் நிறவெறிக்கு எதிராகத் தங்கள் குரல்களை பலமாகவே பதிவு செய்துவருகின்றனர்.

டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில் இரு அணி வீரர்களும் வேற்றுமையை மறந்து நிறவெறிக்கு எதிராக மைதானத்தில் ஒற்றுமையாக மண்டியிட்டு தங்கள் குரல்களைப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று வெஸ்ட் இன்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெற்றிருக்கிறது. போட்டி தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாக குயின்ட்டன் டி காக் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவித்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். 'தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்றைய போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்' எனவும் குறிப்பிட்டிருந்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

மற்ற அணிகளைப் போலவே இன்றைய போட்டியிலும் நிறவெறிக்கு எதிராக இரு அணி வீரர்களும் மைதானத்தில் மண்டியிட்டு கைகளை உயர்த்தி தங்கள் குரல்களைப் பதிவுசெய்தனர். இந்த உலகக்கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் அணி வீரர்கள் இதை செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு குயின்ட்டன் டி காக் ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். இதனாலேயே அவர் இன்றைய போட்டியில் ஆட வில்லை என தகவல்கள் வெளிவந்தன.

குயின்ட்டன் டி காக் இப்படிச் செய்வது இது முதல்முறை அல்ல. இதற்குமுன் ஜூன் மாதம் நடந்த வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதும் நிறவெறிக்கு எதிராகத் தங்கள் குரல்களைப் பதிவு செய்ய மைதானத்தில் மண்டியிட்டனர் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள். அப்போதும் குவின்ட்டன் டி காக் எதுவும் செய்யாமல் அமைதியாகவே நின்றிருந்தார்.

இதுப்பற்றி அப்போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "என் காரணம் என்னுடனே இருக்கட்டும். அது எனது தனிப்பட்ட விருப்பம். யாரையும் வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய வைக்க முடியாது. நான் அப்படிதான் இதையும் பார்க்கிறேன்" என்றார்.

குவின்ட்டன் டி காக்
குவின்ட்டன் டி காக்
AP

"சமீபத்திய நிகழ்வுகளை மனதில் கொண்டு நிறவெறிக்கு எதிராக மொத்த தென் ஆப்பிரிக்க அணியும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் எனக் கருதுகிறோம். அதுவும் தென் ஆப்ரிக்காவின் துயரமான வரலாற்றை கணக்கில் கொள்ளும்போது இது இன்னும் அவசியமாகிறது" என இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

டி காக்கின் இந்த நிலைப்பாட்டுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்கள். தனிப்பட்ட நிலைப்பாடு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, அணியிலிருக்கும் மற்ற அனைவரும் ஒருமித்த மனதோடு ஒரு செயலை செய்கையில், மனிதாபிமான அடிப்படையிலாவது நிறவெறிக்கு எதிராக டி காக் தன் கைகளை உயர்த்தியிருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Black Lives Matter
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு