Published:Updated:

Priyank Panchal: 13 வருட உழைப்பு, டிராவிட்டின் வார்ப்பு - யார் இந்த பிரியங்க் பஞ்சல்?

Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்
News
Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்

பிரியங்க் பஞ்சலின் கிரிக்கெட் கரியரில் இப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அங்கே மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஆடவிருக்கிறது. இந்தத் தொடருக்காக இந்தியா டிசம்பர் 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்குக் கிளம்ப இருக்கிறது. இந்நிலையில், ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவிற்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் எனும் வீரர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிரியங்க் பஞ்சல், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் கேள்விப்பட்டிடாத பெயர். யார் இவர்?
Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்
Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

31 வயதாகும் பிரியங்க் பஞ்சல் இந்திய உள்ளூர் தொடர்களில் அதிக அனுபவமிக்கவர். கிட்டத்தட்ட 2008 லிருந்து 13 வருடமாக குஜராத் அணிக்காக ஆடி வருகிறார். ஓப்பனரான இவர் 2016-17 ரஞ்சி சீசனில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். இந்த சீசனில் பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் அணி, முதல் முறையாக ரஞ்சி தொடரை வென்றிருந்தது. குஜராத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் பிரியங் பஞ்சலே! இந்த சீசனில் மட்டும் 10 போட்டிகளில் 1310 ரன்களை அடித்திருந்தார். 5 சதங்களை அடித்திருந்தார். பஞ்சாபுக்கு எதிரான ஒரு போட்டியில் முச்சதத்தையும் அடித்திருந்தார். ஜார்கண்ட்டுக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களை அடித்து வெற்றிக்கு உதவியிருந்தார். இந்த 2016-17 சீசன் பிரியங்க் பஞ்சலின் கரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்த சீசன்களிலும் லிமிடெட் ஓவர் தொடர்களிலும் தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்தார். இதனால் 2019-ம் ஆண்டு இந்திய A அணிக்கு கேப்டனாகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
13 வருட முதல்தர கரியரில் இதுவரை 7011 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 45க்கும் மேல் இருக்கிறது. இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது பிரியங்க் பஞ்சலின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், எவ்வளவோ சிறப்பாக ஆடியும் அந்த கனவு நிறைவேறாமல் இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தொடரில் ரிசர்வ் ப்ளேயராகச் சேர்க்கப்பட்டிருந்தார். ரிசர்வ் ப்ளேயரை அணிக்குள் அழைப்பதற்கான தேவை ஏற்படாததால் பிரியங்க் பஞ்சலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்
Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்

கடந்த மாதம் இந்திய A அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தது. பிரியங்க் பஞ்சல் 2 போட்டிகளில் ஆடியிருந்தார். அதில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 171 பந்துகளில் 96 ரன்களை எடுத்திருந்தார். ரோஹித் சர்மாவிற்குக் காயம் என்றவுடன் பிசிசிஐ பிரியங்கை டிக் அடிக்க இந்த இன்னிங்ஸே காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்கத் தொடரை முடித்துவிட்டு இந்தியா வந்து இறங்கியவுடன் இந்தச் செய்தி வெளியானது. அதனால், ஒரு வார இடைவெளியில் மீண்டும் பிரியங்க் பஞ்சல் தென்னாப்பிரிக்காவிற்கு பறக்க இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரியங்க் பஞ்சலின் கிரிக்கெட் கரியரில் இப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றியிருக்கிறார். டிராவிட் இந்திய அணிக்கு ஆடிக்கொண்டிருக்கும் போது பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்வதை, Under 15 வீரராக அப்போதே ரசித்து பார்த்திருக்கிறேன் என பிரியங்க் பஞ்சல் கூறியிருக்கிறார்.

டிராவிட் இந்திய A அணிக்கு பயிற்சியாளராக இருக்கும்போதுதான் பிரியங்க் பஞ்சல் இந்திய A அணிக்கு கேப்டன் ஆக்கப்பட்டார். தொடக்கத்தில் அந்த கேப்டன்சி அழுத்தத்தைச் சமாளிக்க பிரியங்க் தடுமாறிய போது, "நீ மிகச்சிறப்பாக ஆடுகிறாய். அதனால்தான் உனக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. கேப்டனாகிவிட்டோம் என்பதற்காக உன்னுடைய ஆட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எப்போதும் போல இயல்பாகவே ஆடு" என ராகுல் டிராவிட் ஆலோசனை கூறி உடனிருந்து வழிநடத்தியிருக்கிறார். டிராவிட்டுடன் செலவழித்த நாள்கள் பெரும் பயனைக் கொடுத்ததாக பிரியங்க் பஞ்சல் கூறியிருக்கிறார்.

Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்
Priyank Panchal | பிரியங்க் பஞ்சல்
இப்போதுதான் தென்னாப்பிரிக்காவில் தொடரை முடித்துவிட்டு வந்திருப்பதால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் பிரியங்க் பஞ்சல் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 வருட காத்திருப்பின் பலனாக கிடைத்திருக்கும் வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!