Published:Updated:

IND v PAK Asia Cup: வந்தாச்சு கிரிக்கெட்டின் மாபெரும் கொண்டாட்டம்; என்ன செய்யும் ரோஹித் படை?

Rohit Sharma

கடந்த உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானே இந்திய அணியின் வீழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தது. அந்தத் தோல்வியிலிருந்து இந்திய அணியால் அவ்வளவு சீக்கிரமாக மீள முடியவில்லை.

IND v PAK Asia Cup: வந்தாச்சு கிரிக்கெட்டின் மாபெரும் கொண்டாட்டம்; என்ன செய்யும் ரோஹித் படை?

கடந்த உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானே இந்திய அணியின் வீழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தது. அந்தத் தோல்வியிலிருந்து இந்திய அணியால் அவ்வளவு சீக்கிரமாக மீள முடியவில்லை.

Published:Updated:
Rohit Sharma

அலுவலகத்தில் இப்போதே ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தைச் சொல்லி வருகிற திங்கள் கிழமையின் காலையில் ஒரு 2 மணி நேர பர்மிஷனுக்காவது ஒரு முன் அனுமதியைப் பெற்றுவிடுங்கள். அப்படி அனுமதி பெற்றுவிட்டீர்கள் எனில், அலுவலக பீதியின்றி இந்த ஆண்டின் பெரும் விறுவிறுப்பான ஒரு ஞாயிற்றுக் கிழமையை எந்தவித அழுத்தமும் இல்லாமல் முழுமையாகக் கொண்டாடித் தீர்க்க முடியும்.

அந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணமாக இருக்கப்போவது இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பைப் போட்டி!
Team India
Team India

1984 முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரை இந்திய அணி 7 முறை வென்றிருக்கிறது. கடைசியாக 2016, 2018-ல் நடந்த ஆசியக்கோப்பைத் தொடர்களையுமே இந்திய அணிதான் வென்றிருக்கிறது. 2018-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்த தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய சாம்பியன் ஆகியிருந்தது. இப்போது அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் ஆசியக்கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்போடு இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். வழக்கம்போலவே இந்த முறையும் இந்த மோதலை ஒரு யுத்தமாக பாவிக்கும் அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கிறது. அக்டோபரில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. அதுவும் நெருங்கிவிட்டதால் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவும் இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி என இருதரப்புமே தங்களின் முழுபலத்தை வெளிக்காட்ட தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கத்தை விட இந்திய அணிக்கு இந்த மோதல் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த உலகக்கோப்பை தோல்வி.

IND vs PAK
IND vs PAK
AP
கடந்த 2021 இல் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானே இந்திய அணியின் வீழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தது. இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மொத்தமாக சாய்த்து வென்றிருந்தது.

அந்தத் தோல்வியிலிருந்து இந்திய அணியால் அவ்வளவு சீக்கிரமாக மீள முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியிலும் வீழ்ந்து நாக் அவுட் சுற்று வாய்ப்பையே இந்திய அணி இழந்தது. இந்திய ரசிகர்கள் திரும்பிப் பார்க்க விரும்பாத கசப்பான ரீவைண்ட் காட்சிகள் இவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் எக்கச்சக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கேப்டன் மாறிவிட்டார். பயிற்சியாளர் மாறிவிட்டார். இந்தப் புதிய கூட்டணியின் முயற்சிகளால் அணியின் அணுகுமுறையே மொத்தமாக மாறிவிட்டது. முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்யும் மனநிலைக்கு இந்திய அணி மாறிக்கொண்டிருக்கிறது. உலகக்கோப்பை தோல்விக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்காக மட்டுமல்ல, இந்திய அணி முயன்று பார்த்திருக்கும் புதிய சமாச்சாரங்கள் பெரிய தொடர்களில் என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கப்போகின்றன என்பதற்கான முன்னோட்டமாகவும் இந்த ஆசியக்கோப்பை அமையும்.

2021 அக்டோபரில் நடந்த உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய அணி 24 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறது. இந்த 24 போட்டிகளில் 19 போட்டிகளை இந்திய அணியே வென்றிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக தலா 1 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருக்கிறது. இந்த 24 போட்டிகளிலும் இந்திய அணி சுழற்சி முறையில் பல வீரர்களையும் பயன்படுத்தியிருக்கிறது. ப்ளேயிங் லெவனின் முக்கியமான இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆப்சன்களை முயன்று பார்த்திருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஓப்பனிங் ஸ்பாட்.

இந்த 24 போட்டிகளில் மட்டும் 9 வெவ்வேறு ஓப்பனிங் இணையை இந்திய அணி பயன்படுத்தியிருக்கிறது.
Pant - Bavuma
Pant - Bavuma
ICC

பண்ட், சூர்யகுமார் யாதவ் முதற்கொண்டு நாம் முன்பு கற்பனையே செய்திடாத வீரர்களையெல்லாம் ஓப்பனராக இறக்கிவிட்டார்கள். இந்திய அணியின் இந்த அதீத பரிச்சார்த்த முயற்சிகளுக்கும் ஒரு வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த உலகக்கோப்பை தோல்விதான் காரணம். அந்த உலகக்கோப்பையில் ஷாகீன் ஷா அப்ரிடி வீசிய ஓப்பனிங் ஸ்பெல்லில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமும் சிதறியிருக்கும். ஷாகீன் ஷா அப்ரிடி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாத இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக போல்டை மனதில் வைத்து டாப் ஆர்டரில் அவசரமான மாற்றத்தைச் செய்திருந்தது. இஷன் கிஷன் திடீரென லெவனுக்குள் வந்து ஓப்பனராகியிருந்தார். ரோஹித் நம்பர் 3 மற்றும் கோலி நம்பர் 4 என வழக்கமான ஆர்டரிலிருந்து கீழே இறங்கியிருந்தனர்.

இந்த மாற்றம் இன்னும் சேதாரத்தையே கொடுத்தது. நியூசிலாந்திடமும் இந்திய அணி பலத்த அடி வாங்கியது. அந்த தோல்விகள் கொடுத்த படிப்பினையில்தான் இந்திய அணி பல வீரர்களையும் கலைத்துப் போட்டு முன்னும் பின்னுமாக மாற்றி இறக்கி பார்த்தது. சூழலை பொறுத்து எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் மாற்றி இறக்கப்பட்டாலும் இந்திய அணி தடுமாறாமல் இலக்கை எட்ட வேண்டும். இதுதான் ரோஹித் - டிராவிட் கூட்டணியின் புதிய திட்டமாக இருந்தது. இதை ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்படுத்தியும் காட்டியிருக்கின்றனர். ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலும் இடம்பெற்றிருக்கிறார். ஆக, ரோஹித்தும் ராகுலும் ஓப்பனிங் இறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும் சூழலைப் பொறுத்து திடீர் மாற்றமாக சூர்யாவோ ரிஷப் பண்ட்டோ கூட ரோஹித்துடன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Virat Kohli
Virat Kohli
வேறு எந்த வீரரை விடவும் விராட் கோலிக்கு இந்தத் தொடர் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கோலியின் சமீபத்திய ஃபார்ம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. டி20யிலுமே மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸ் அவரிடம் வெளிப்படவில்லை. ரொம்பவே சுமாராகத்தான் ஆடியிருக்கிறார்.

கோலிக்கு ஓய்வளித்துவிட்டு நம்பர் 3-ல் இறக்கப்பட்ட மற்ற வீரர்கள் கோலியை விட அதிகமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆயினும், விராட் கோலிக்கு இந்த ஆசியக்கோப்பையில் இடம் கிடைத்திருக்கிறது. ஆசியக்கோப்பையிலும் இதே சொதப்பலை கோலி தொடரும்பட்சத்தில் இதே சௌகரியத்தோடு கோலி அணியில் தொடர முடியுமா என்பது கேள்விக்குறியே. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கோலியின் 100வது சர்வதேச டி20 போட்டி. 100வது போட்டியில் ஒரு செஞ்சுரி அல்லது ஒரு நல்ல தாக்கம் ஏற்படுத்தும் இன்னிங்ஸை கோலி ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அணியில் அவரின் இருப்பை உறுதி செய்துகொள்ளவும் கோலி இந்த ஆசியக்கோப்பையில் சாதித்தே ஆக வேண்டும்.

தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக் என அணியில் பேட்டிங்கிற்குப் பஞ்சமே இல்லை. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் எனத் தேவைக்கு ஏற்ப சரியான வேகப்பந்து வீச்சு கூட்டணியும் அமைந்திருக்கிறது. அஷ்வின், சஹால், ரவி பிஷ்னோய் என வலுவான ஸ்பின்னர்களையும் இந்திய அணி வைத்திருக்கிறது. ஸ்பின்னர்களே மேட்ச் வின்னர்களாக மாறினாலும் ஆச்சர்யமில்லை.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரைக்கும் இந்த ஆசியக்கோப்பைத் தொடரை இரண்டே இரண்டு முறை மட்டுமே வென்றிருக்கின்றனர். கடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இப்போது வரை 7 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் வென்றிருக்கின்றனர்.

Shaheen Afridi
Shaheen Afridi
இந்திய அணியை நிலைகுலைய வைத்த ஷாகீன்-ஷா-அப்ரிடி கடைசி நேரத்தில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியது பாகிஸ்தானுக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஷாகீன் ஷாவை தவிர இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் வேறு யாரும் அணியில் இல்லாததும் அந்த அணிக்குப் பின்னடைவே. அணியின் பாரம் ஒட்டுமொத்தத்தையும் தோளில் தூக்கி சுமக்கப் போவது கேப்டன் பாபர் அசாமும் முகமது ரிஸ்வானுமே. இவர்களுக்கு உறுதுணையாக மற்ற வீரர்களும் நிற்கும்பட்சத்தில் பாகிஸ்தான் இந்திய அணிக்குக் கடும் சவாலளிக்கவே செய்யும்.

வெற்றி - தோல்வியை கடந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது கிரிக்கெட்டின் மாபெரும் கொண்டாட்டம். வெறுப்புகளை களைந்து இந்த ஆட்டத்தையும் இரு அணியின் வீரர்களையும் மகிழ்ச்சிப் பெருக்கோடு அரவணைப்பதே கொண்டாட்டத்தின் உச்சமாக இருக்கும். கொண்டாடுங்க மக்களே!

அப்படியே இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும், கோலி ஃபார்முக்கு வருவாரா போன்ற கேள்விகளுக்கு உங்களின் பதில்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.