Published:Updated:

ENG vs IND: தொடரை முடிவு செய்யும் 5வது டெஸ்ட் போட்டி - இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன?

Indian test team

1971, 1986, 2007 இந்த மூன்று சமயங்களில் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாதிக்குமா?

ENG vs IND: தொடரை முடிவு செய்யும் 5வது டெஸ்ட் போட்டி - இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன?

1971, 1986, 2007 இந்த மூன்று சமயங்களில் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாதிக்குமா?

Published:Updated:
Indian test team

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்கவிருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளும் கடந்த ஆண்டே நடந்து முடிந்துவிட்டன. தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. அப்போதுதான் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக வீரர்களுக்கு கொரோனாத் தொற்று பரவவே, அந்தக் கடைசிப் போட்டி மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்தப் போட்டிதான் இப்போது நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நடந்து முடிந்திருக்கும் அந்த 4 போட்டிகள் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட் இங்கே...
Indian Cricket team
Indian Cricket team
Rajanish Kakade

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்குப் பறந்திருந்தது. இங்கிலாந்தின் அந்த சம்மர் சீசனில் இந்திய அணி இரண்டு தொடர்களில் ஆடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி மோதியிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்குத் தோல்வியே மிஞ்சியது. நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியிருந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஒன்றரை மாதங்கள் இங்கிலாந்திலேயே முகாமிட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்தியாவைப் போன்றே இங்கிலாந்தும் ஒரு சரிவிற்குப் பிறகே இந்தத் தொடருக்கு வந்திருந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தனர். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு எழ வேண்டும் என்கிற முனைப்பு இரு அணிகளுக்குமே இருந்தது. இப்படி ஒரு சூழலில்தான் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கியது.

முதல் போட்டி | மழை பறித்த வெற்றி!

முதல் போட்டி நாட்டிங்காமில் நடந்திருந்தது. முதல் போட்டியின் முதல் ஓவரிலிருந்தே இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் டக் அவுட் ஆகியிருந்தார். இந்த முதல் இன்னிங்ஸில் மட்டும் இங்கிலாந்தின் 4 பேட்டர்கள் டக் அவுட் ஆகியிருந்தனர். இங்கிலாந்தின் பேட்டிங் மொத்தமாகச் சொதப்பியிருந்தது. கேப்டனான ஜோ ரூட் மட்டும்தான் வழக்கம்போல அணியைக் காப்பாற்றினார். பேட்டிங் பாரம் மொத்தத்தையும் அவர் தலையிலேயே ஏற்றிக்கொண்டார். முதல் இன்னிங்ஸில் அவர் அரைசதம் கடக்க இங்கிலாந்து 183-க்கு ஆல் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதமடிக்க இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட். ரூட்டிற்கு மற்ற பேட்டர்கள் யாருமே பெரிதாக ஒத்துழைக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இந்திய அணியைப் பொறுத்தவரை ஷமி, பும்ரா, சிராஜ் என்கிற இந்த வேகக்கூட்டணி வியப்பளிக்கும் வகையில் வீசியது. இங்கிலாந்தில் இங்கிலாந்து பௌலர்களைவிட இவர்கள் சிறப்பாக வீசியிருந்தனர்.
Bumrah
Bumrah
Twitter

கே.எல்.ராகுல் சிறப்பாக ஆட இந்திய அணி முதல் இன்னிங்ஸிலேயே முன்னிலை பெற்றிருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 209 ரன்கள் மட்டுமே டார்கெட். எளிய இலக்கு. இந்தியா வேகமாக சேஸிங்கைத் தொடங்கியது. நான்காம் நாள் முடிவில் 52-1 என்ற நிலையில் இருந்தது. ஐந்தாம் நாளில் இந்திய அணி எளிதில் வென்றுவிடும் என்ற சூழலில் மழை குறுக்கிட்டது. விடாது பெய்ததால் கடைசி நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவின் வெற்றி மழையால் பறிக்கப்பட்டது.

இரண்டாவது போட்டி | வரலாற்று வெற்றி!

முதல் போட்டியில் தவறவிட்டதை இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் செய்துகாட்டினர். இந்தியா வென்றது. அதுவும் சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி. ஏனெனில், இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தது.

Lord's honours board
Lord's honours board
Lord's
பழம்பெருமைமிக்க இந்த லார்ட்ஸ் மைதானத்தில் 1986இல் கபில்தேவ் தலைமையிலான அணியும் அதன்பிறகு 2014இல் தோனி தலைமையிலான அணியும் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்தி வென்றிருக்கிறது. இந்த வரிசையில் கேப்டன் கோலியும் தனது பெயரை இணைத்துக்கொண்டார்.

முதல் இன்னிங்ஸில் ஓப்பனர்களான ரோஹித்தும் ராகுலும் இணைந்து கூட்டணியாக சதத்தைக் கடந்திருந்தனர். SENA நாடுகளில் 11 ஆண்டுகள் கழித்து இந்திய ஓப்பனிங் கூட்டணியால் பதிவு செய்யப்பட்ட சென்ச்சூரி பார்ட்னர்ஷிப் அது. ராகுல் நின்று நிதானமாக தனியாக சதமடித்து லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டிலும் தனது பெயரைப் பதித்திருந்தார். வழக்கம்போல எதிர் முகாமில் ரூட் மட்டுமே உறுதியாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பினார்கள். இங்கிலாந்துக்கு 272 ரன்கள் டார்கெட். கடைசி நாளில் 60 ஓவர்கள் மீதமிருக்கின்றன. இந்த 2 செஷன்களில் விக்கெட் விடாமல் நின்றுவிட்டாலே போட்டியை டிரா செய்துவிடலாம் என்கிற சூழல். ஆனால், இங்கிலாந்து பேட்டர்களால் அதைக்கூடச் செய்ய முடியவில்லை. 52 ஓவர்களில் 120 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் அவுட் ஆகியிருந்தனர். 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

மூன்றாவது போட்டி | வலுவான பதிலடி!

லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியை இழப்பதென்பது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கே நிகழ்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். அப்படி லார்ட்ஸில் ஒரு போட்டியை தோற்றால் அதற்கடுத்த போட்டியில் இங்கிலாந்து எத்தனை மூர்க்கமாக பதிலடி கொடுக்கும் என்பதை லீட்ஸில் காண முடிந்தது. முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட். ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன் ஆகியோர் வெறித்தனமாக பந்து வீசியிருந்தனர். இங்கிலாந்து சார்பில் இந்த முறையும் ஜோ ரூட் சதமடித்தார். ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது போன்றோரும் ரூட்டிற்கு ஒத்துழைப்பு கொடுக்க இங்கிலாந்து 400+ ஸ்கோரை எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கே செய்யவில்லை. இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

ENG Vs IND
ENG Vs IND
Kirsty Wigglesworth
நான்காவது போட்டி | சமரசமில்லா யுத்தம்

தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சமயத்தில் ஓவலில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் முக்கியமான பேட்டர்கள் கொஞ்சம் சுமாராகவே ஆடியிருந்தாலும் டெய்ல் எண்டர்கள் இந்திய அணியைக் கரைசேர்த்திருந்தனர். இரண்டு இன்னிங்ஸிலுமே ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். கூடவே உமேஷ் யாதவ், பும்ரா போன்றோரும் மதிப்புமிக்க ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதும் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிராவுக்காக ஆடுவதுதான் இங்கிலாந்தின் இலக்காக இருந்தது. ஆனால், அதைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை. 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தனர். உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் என இந்த முறையும் இந்திய பௌலர்கள் அசாத்தியமாக வீசியிருந்தனர்.

2-1 என இந்திய அணி இப்போது முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான் நிலவுகிறது. இந்திய அணி இந்த ஐந்தாவது போட்டியை டிரா செய்தால்கூடப் போதும். தொடரை வென்றுவிடலாம். அதேநேரத்தில், இங்கிலாந்து இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். வென்றால் மட்டுமே தொடரை டிராவாவது செய்ய முடியும். இந்த ஒரு வருட காலத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டன. முதல் 4 போட்டிகளின் போது இந்திய அணிக்கு கேப்டனாக கோலியும், பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும் இருந்தனர். இப்போது கேப்டனாக ரோஹித் இருக்கிறார். பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். இதேமாதிரிதான் அங்கேயும். இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக மெக்கல்லம் பதவியேற்றிருக்கிறார். புதிய கேப்டனாக பென்ஸ்டோக்ஸ் நிற்கிறார்.

Ben Stokes
Ben Stokes
AP

இங்கிலாந்து அணியின் அணுகுமுறையிலேயே எக்கச்சக்க மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன.

லார்ட்ஸில் இரண்டு செஷன்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து இப்போது இல்லை. சொல்லப்போனால், மெக்கல்லமின் வழிகாட்டுதலில் டிராவைப் பற்றியெல்லாம் இந்த அணி யோசிக்கப்போவதே இல்லை.

நியூசிலாந்தை எப்படி அடித்து வெளுத்தார்களோ அதே அட்டாக்கிங் மனநிலையில்தான் இந்தப் போட்டியையும் அவர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள். இந்திய அணியில் ரோஹித் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அவர் ஆடாதபட்சத்தில் பும்ரா கேப்டனாகச் செயல்படுவார். ஏற்கெனவே, கே.எல்.ராகுலும் காயமுற்றிருப்பதால் தொடரில் இல்லை. சில வீரர்களின் இல்லாமை பேட்டிங்கில் கொஞ்சம் பின்னடைவைக் கொடுத்தாலும் பந்துவீச்சில் இந்திய அணி பலமாகவே இருக்கிறது. மேலும், வென்றே ஆக வேண்டும் என்கிற அழுத்தம் இல்லாமையும் இந்தியாவிற்கு சாதகமான விஷயமாக இருக்கும்.

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
twitter.com/BCCI
1971, 1986, 2007 இந்த மூன்று சமயங்களில் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாதிக்குமா? கமென்ட்டில் சொல்லுங்கள்.