Published:Updated:

பவர் ப்ளே - 1: வாத்தியாரே... அப்ப ஜோ ரூட் பெரிய ஆட்டக்காரன் இல்லையா?!

ஜோ ரூட்

12 வயது ரசிகனின் கண்கொண்டு கிரிக்கெட்டர்களைப் பார்க்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் தொடர்!

பவர் ப்ளே - 1: வாத்தியாரே... அப்ப ஜோ ரூட் பெரிய ஆட்டக்காரன் இல்லையா?!

12 வயது ரசிகனின் கண்கொண்டு கிரிக்கெட்டர்களைப் பார்க்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் தொடர்!

Published:Updated:
ஜோ ரூட்
"கிரிக்கெட் வீரர்களை 12 வயது சிறுவனின் கண்கள் வழியே ரசிப்பதுபோல வேறு யாராலும் ரசிக்க முடியாது!"
இயான் பீபிள்ஸ்
முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் எழுத்தாளருமான இயான் பீபிள்ஸின் புகழ்பெற்ற மேற்கோள் இது. நான் முதன் முதலாக தொலைக்காட்சி நேரலையில் பார்த்து வியந்த கிரிக்கெட் நட்சத்திரம் விரேந்திர ஷேவாக். 2004 முல்தான் டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய ருத்ர தாண்டவம் இன்றுவரை அப்படியே என் மனதுக்குள் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வயதில் கிரிக்கெட்டின் விதிகள், தொழில்நுட்பம் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாக கிரிக்கெட்டை ரசிக்க முடிந்தது ; உண்மையில் இப்போது அந்த Pleasure குறைந்துவிட்டது. அந்தவொரு உணர்ச்சிக் கொந்தளிப்பை மீண்டும் அடைந்து விட மாட்டோமா என்கிற எதிர்பார்ப்பு மட்டும் இன்னமும் தொடர்கிறது. இந்தத் தொடரின் மூலமாக வாசகர்களாகிய உங்களையும் அந்த உணர்வு நிலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். இது கிரிக்கெட் பற்றிய ஒரு தொடராக இருந்தாலும் முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றி மட்டுமே நாம் அலசப் போவதில்லை. அரசியல், வரலாறு, சுய முன்னேற்றம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உளவியல் என பல்வேறு சுவாரஸ்யமான தளங்களில் பயணிக்கும் ஒரு காக்டெய்ல் விருந்தாக இது இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொது வாசகர்களும் இதனை அனுபவித்துப் படிக்கலாம்.
பவர் ப்ளே
பவர் ப்ளே
ஜோ ரூட்
ஜோ ரூட்
ரமணன்

ஜோ ரூட்டை மனம் கொண்டாட மறுக்கிறதா? 

106 டெஸ்ட் போட்டிகள். சராசரி 49.09. சதங்கள் 21. இதுவரை இவர் சதமடித்த ஒரு போட்டி கூட தோல்வியில் முடிந்ததில்லை. அதிகபட்ச ஸ்கோர் 254. ஒருநாள் போட்டிகளிலும் சாதனைகளுக்கு குறைவில்லை. 152 போட்டிகளில் 51.33 சராசரியுடன் 6,109 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 86.84. சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம். இத்யாதி, இத்யாதி...

இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஜோ ரூட்டை ஏன் பலரும் ஆதர்ச நாயகனாக பேசுவதில்லை, ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் ஏன் ரூட்டை ஏலத்தில் எடுப்பதில்லை, கூகுளில் joe என டைப் செய்தவுடன் வந்து நிற்கும் பெயர்களில் ஏன் இவர் பெயர் முதல் பெயராக இல்லை... ஏன், இவ்வளவு கேள்விகளை கேட்கும் நானே கூட இந்தத் தொடரை எழுத முடிவு செய்தவுடன் மனதில் தோன்றிய முதல் பெயராக ஜோ ரூட்டின் பெயர் இல்லையே?!

என்னவொரு பாரபட்சம்! நியூசிலாந்து ஜாம்பவான் மார்ட்டின் குரோவ் சொல்லி வைத்துவிட்டு சென்றதால் Fab 4 வரிசையில் இருந்து ஜோ ரூட்டை இன்னும் தூக்காமல் விட்டு வைத்திருக்கிறோம். அதிலும் முதல் மூன்று இடங்களை அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்ற முன் நிபந்தனையோடு!

ஜோ ரூட்
ஜோ ரூட்

இப்போது அந்த நான்காம் இடத்துக்கும் பாகிஸ்தானின் பாபர் ஆஸமை கொண்டுவருவதற்கு ஜோ, 'ரூட் கிளியர்' செய்ய வேண்டுமென முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டோம்.

சரி ஜோ ரூட்டுக்கும் நமக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா, ஏன் நாம் உள்ளூர அவரை வெறுத்து ஒதுக்குகிறோம்? இல்லை இல்லை நாம் அவரை வெறுக்கவெல்லாம் செய்யவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் அவரைப் பொருட்படுத்தி இருப்போமே? நமக்கு ஒரு கிரிக்கெட் வீரரை ஏன் பிடிக்கிறது என்பதைத் தீர்மானிப்பதில் நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. இதனை இனம், கலாசாரம், வரலாறு, அரசியல், உளவியல் போன்ற காரணிகளுடன் சேர்த்து நவீன வஸ்துக்களான Image building, social marketing போன்றவைகளும் தீர்மானிக்கின்றன.

மார்ட்டின் குரோவ் : நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர்தான் முதன் முதலாக Fab 4 என்ற வார்த்தையைப் பிரபலப்படுத்தினார். கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வரும் கிரிக்கெட் உலகைக் கட்டி ஆளப் போகிறார்கள் என்கிற இவரது ஆரூடம் அப்படியே பலித்தது.

ரூட்டை தவிர்த்து Fab 4-ல் இருக்கும் மற்ற மூவருக்கும் ரசிகர்களின் நாயக வழிபாட்டுக்கு உரிய ஏதோவொரு குணாதிசயம் உள்ளது. அது கோலியிடம் ஆக்ரோஷமாகவும், வில்லியம்சனிடம் துறவு நிலையாகவும், ஸ்மித்திடம் போர்க்குணமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் ரூட்டிடம் இதுபோல ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல முடியமா?

ஜோ ரூட்
ஜோ ரூட்

அவருடைய தாடியற்ற முகத்தையும் இங்கு நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோலியின் தாடியைப் பார்த்தால் masculinity தெறிக்கும். வில்லியம்சனின் தாடி சொல்லும் சேதி என்பது வேறு; இயேசு நாதரைப் போல. ஸ்மித்துக்கு தாடி இல்லையென்றாலும் அவரை யாரும் ஒரு பாலகன் என்று சொல்ல மாட்டார்கள். ஒரு கிரிக்கெட் வீரரின் நடையும் அவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. கோலியின் நடையில் ஒரு swagger இருக்கும் ; விவியன் ரிச்சர்ட்ஸ் போல. வில்லியம்சன் நடையில் ஒரு உறுதித்தன்மையை பார்க்க முடியும்.

Fab 4 -ல் மோசமாக நடப்பவர் யார் என்பதில் ஸ்மித்துக்கும் ரூட்டுக்கும் இடையேதான் போட்டி. ஸ்மித்துக்கு இருக்கும் ஆன்ட்டி ஹீரோ இமேஜ் அவருடைய தாறுமாறான நடைக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து விடுகிறது. ஆனால் ரூட்டின் தத்தக்கா பித்தக்கா நடையோ நம் கண்களுக்கு துருத்திக் கொண்டு தெரிகிறது.

"இவையெல்லாம் Cod Psychology" என திட்டினாலும் பரவாயில்லை. உண்மையை சொல்லித் தானே தீரவேண்டும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு ரூட்டுக்கு கிடைப்பதற்கு தடையாக நான்கு முக்கியமான பிரச்னைகள் அவர் முன் நிற்கின்றன. முதலாவதாக அவருடைய அடையாளச் சிக்கல்.

ஜோ ரூட் 1990-ல் தெற்கு யார்க்ஷயர் கவுன்ட்டியைச் சேர்ந்த ஷெபீல்ட் (Sheffield) இல் பிறந்தார். நிற்க... இது போல பிறந்த வருடம், குடும்ப பின்னணி உள்ளிட்ட தகவல்களை அறிவார்ந்த வாசகர்களான உங்களுக்கு தருவதில் துளியும் விருப்பமில்லை.

ஜோ ரூட், ஜாஸ் பட்லர்
ஜோ ரூட், ஜாஸ் பட்லர்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற அசாதாரண வீரர்களைப் பற்றி எழுதும் போது வேண்டுமானால் ஒரு நிமித்தத்திற்கு (cause) இந்த சமாசாரங்கள் எல்லாம் தேவைப்படலாம். நாம் இப்போது ரூட்டை பற்றித்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரூட் கிரிக்கெட் மீது பற்று கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பாரம்பரியமிக்க யார்க்ஷர் அணியில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர். நமக்கு இதுவரைக்கும் போதுமென நினைக்கிறேன்.

குடியிருந்த கோயில் எம்ஜிஆர் போல ''நான் யார்... நான் யார்'' என ரூட் அடையாளச் சிக்கலில் சிக்கித் தவிப்பதற்கு இந்த யார்க்ஷைரும் ஒரு காரணம். ரஞ்சி போட்டிகளில் இந்தியாவுக்கு மும்பை அணி போல கவுன்ட்டி போட்டிகளில் இங்கிலாந்துக்கு யார்க்ஷையர் அணி. தேவையில்லாமல் ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுப்பது என்பது உயிரைப் பறி கொடுப்பதற்கு சமானம் என நினைக்கும் ஒரு அணி அது. ஜெஃப்ரி பாய்காட், சர் ஹட்டன் போன்ற orthodox வீரர்களே அதன் அடையாளம். ஆனால் ரூட் சிறுவயதில் இருந்தே டெட் டெக்ஸ்டர் ( Ted Dexter ) பாணியிலான ஒரு ஸ்ட்ரோக் மேக்கர்.

இங்கிலாந்துக்கு ஆடத் தேர்வானதும் ரூட் முதன் முதலாக கண்ணாடியின் எதிரே நின்று அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டார். "இப்போது நான் யார் போல ஆடவேண்டும் : ஜெஃப்ரி பாய்காட் போலவா அல்லது டெட் டெக்ஸ்டர் போலவா?"

ஒருநாள் டெக்ஸ்டர், ஒருநாள் பாய்காட் என பரமபதம் ஆடிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் பேட்டிங்கில் தனக்கான இணைவை (Fusion) கண்டறிந்தார். அதாவது யார்க்ஷையரின் தடுப்பாட்டத்தை உள்வாங்கிய ஸ்ட்ரோக் மேக்கிங். நம் ஊர் ராகுல் டிராவிட் மராட்டியத்தையும் கர்நாடகத்தையும் உள்வாங்கிக் கொண்டதைப் போல. அந்த யார்க்ஷயர் இரத்தம் உடம்பில் ஓடுவதால் தான் க்ரீஸில் ரூட்டின் இயல்பான நகர்வு backfoot ஆக இருக்கிறது.

ஜோ ரூட்
ஜோ ரூட்
Rui Vieira

தன்னுடைய 26-வது வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பேற்ற ரூட் இன்னொரு அடையாளச் சிக்கலை எதிர்கொள்கிறார். ஜோ ரூட் இயல்பிலேயே துறுதுறுப்பானவர் ; களத்தில் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டும் அங்குமிங்கும் உலாவிக் கொண்டும் சக வீரர்களையும் எதிரணி வீரர்களையும் செல்லமாக சீண்டிக் கொண்டும் இருப்பவர். ஆனால் அவருடைய இந்த இயல்பே அவர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் அவர் தலைக்கு முன்னால் கத்தியாக வந்து தொங்கியது. அலெஸ்டர் குக் மாதிரியான ஒரு கனவான் இருந்த பதவியில் இந்த வாய் துடுக்குள்ள பையன் சமாளிப்பானா என ஊடகங்கள் அவர் நியமனத்தின் மீது சந்தேகம் எழுப்பின. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ரூட் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு மீண்டும் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டார்.

"ஒரு கேப்டனாக இப்போது நான் யார்? குக்கின் தொடர்ச்சியாக இருப்பதா அல்லது நான் நானாகவே இருப்பதா?" ஆரம்பத்தில் குக்கின் தொடர்ச்சியாக ரூட் இருந்தாலும் காலப்போக்கில் தனக்கென ஒரு புதிய பாதையை அவர் வகுத்துக் கொண்டார். இன்றைக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஒவ்வொரு வீரர்களும் ரூட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள். அதை குக்கைப் போல அதிகாரத்தால் இல்லாமல் தன்னுடைய வெளிப்படைத் தன்மையால் சாதித்திருக்கிறார் ரூட். இந்தக் களேபரங்களுக்கு நடுவில் அவருடைய பேட்டிங் திறன் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது.

ரூட் சந்தித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது பிரச்னைக்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட்டின் split captaincy முறை. என்னதான் ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிஸ்தாவாக இருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் இயான் மார்கனுக்கு இருக்கும் செல்வாக்கை அவரால் நெருங்கக் கூட முடியாது. காரணம் அவர்களின் நீண்ட நாள் கனவான உலகக் கோப்பையை தூக்கிச் சுமந்தது மார்கன்தானே!

உண்மையில் இங்கிலாந்து ஒரு வித்தியாசமான நாடு. டெஸ்ட் கிரிக்கெட் தான் இங்கிலாந்தின் ஆன்மா என ஆர்ப்பரிப்பார்கள் ; ஆனால் அவர்களே ஒருநாள் அணி பாணியில் டெஸ்ட் அணியைக் கட்டமைக்க பெரும்பாடு படுவார்கள். இதன் மூலமாக மார்கனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் ரூட்டின் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. கோப்பை வெல்கிறாரோ இல்லையோ இந்திய கிரிக்கெட்டின் முகம் விராட் கோலிதான் ; அதுபோலவே தான் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித்தும் நியூசிலாந்துக்கு வில்லியம்சனும். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட்டின் முகமென ரூட்டை சொல்ல முடியாது. காரணம் இரட்டைத் தலைமை !

ஜோ ரூட்
ஜோ ரூட்

அணிக்கு வெளியில் கோலி, ஸ்மித், வில்லியம்சன் என்ற மும்முனைப் போட்டி ; தேசிய அணிக்குள் குறைந்த ஓவர் போட்டிகளின் கேப்டன் இயான் மார்கனின் தனியாவர்த்தனம். இப்படி பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் ரூட்டுக்கு எதிர்பாராத திசையில் இருந்து இன்னொரு சவாலும் துரத்திக் கொண்டு வருகிறது. அதுதான் ரூட் சந்தித்துக் கொண்டிருக்கும் மூன்றாவது பிரச்னை : பென் ஸ்டோக்ஸின் எழுச்சி. ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ; அணியில் ரூட்டின் நெருங்கிய நண்பர்.

பாரம்பரியம், orthodox கிரிக்கெட் என பொது வெளியில் சொல்லிக் கொண்டாலும் ஆங்கிலேயர்களுக்கு நடைமுறையை மீறுபவர்கள் மீது ஓர் ஆர்வம் உண்டு. என்னதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் முகமாக ரூட் இருந்தாலும் ஸ்டோக்ஸ் தான் ஊடகங்களின் செல்லப்பிள்ளை. காரணம் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஆடுகிறார் ; சர்ச்சைகளில் சிக்குகிறார் ; Tattoo குத்திக் கொண்டுள்ளார் ; ஒற்றை ஆளாக அணியை ஆபத்தில் இருந்து மீட்கிறார் ; உளவியல் பிரச்னைகளை தைரியமாக பொதுவில் பேசுகிறார். வேறென்ன வேண்டும் இதற்குமேல். இன்னொரு புறம் நாசர் ஹுசைன் போன்றவர்கள் ''பென் ஸ்டோக்ஸ் ஒரு தைரியமான கேப்டன்'' என சான்றிதழ் கொடுப்பதன் மூலமாக ஜோ ரூட்டை செல்லமாக சீண்டுகிறார்கள். சக நண்பனே சக போட்டியாளன். ரூட் ரொம்ப பாவம்!

ஜோ ரூட் - ஸ்டீவ் ஸ்மித்
ஜோ ரூட் - ஸ்டீவ் ஸ்மித்

ரூட்டின் நான்காவது பிரச்னை ரொம்பவும் விசித்திரமானது ; அது அவருடைய தலையாய பிரச்னையும் கூட : இங்கிலாந்தின் பேட்டிங் பாரம்பரியத்தில் ரூட் யாருடைய வாரிசு? சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட வாரிசு விராட் கோலிதான் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது ; பிராட்மேனின் சமகால வடிவமென ஸ்மித் தன் முத்திரையை பதித்துவிட்டார் ; வில்லியம்சன் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு மார்ட்டின் குரோவின் பரம்பரை. ஆனால் ரூட்டிற்கு அப்படி ஏதேனும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளதா... உண்மையில் ரூட் யாரைப் பின்பற்ற வேண்டும் : ஜாக் ஹாப்ஸ்? ஜெஃப்ரி பாய்காட்? டேவிட் கோர்? அல்லது சமகால தலைமுறையை சேர்ந்த கெவின் பீட்டர்சன்? அலெஸ்டர் குக்?... ஏதோவொன்று இடிக்கிறது அல்லவா? அதுதான் ரூட் வாங்கி வந்த வரம். இங்கிலாந்தில் ஒரு பேட்ஸ்மேனாக பிறப்பது என்பது மிகவும் கொடுமையான விஷயம்.

பிற நாட்டு பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கும் Home advantage எல்லாம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கிடையாது. மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு என்ன Home advantage வேண்டி கிடக்கிறது. தொழில்நுட்ப புலி மைக் ஆதர்டனின் சராசரி 40-ஐ நெருங்கவில்லை ; அலெஸ்டர் குக் ஓய்வு பெறும் காலத்தில் தன்னுடைய சராசரியான 45-ஐ தக்கவைக்க போராட்டம் நடத்தினார். இப்படிப்பட்ட வரலாற்றுத் தரவுகளை வைத்துக் கொண்டு தான் ரூட் டெஸ்ட்டில் 50 சராசரியை தவறவிட்டு விட்டார் என நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறோம். என்னவொரு கொடுமை!

Backlift : பந்தை சந்திக்க காத்திருக்கும் பேட்ஸ்மேன் பேட்டை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தூக்கிப் பிடித்திருப்பதற்கு பெயர் Backlift . இது எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ ஷாட்களில் அந்தளவுக்கு வலு கிடைக்கும் ; ஆனால் அதே சமயம் கன்ட்ரோல் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

இந்த பாரம்பரியம், தரவுகள் இவற்றையெல்லாம் ஓரக் கடாசிவிட்டு ஒரு பேட்ஸ்மேனாக ரூட் எப்படி எனப் பார்ப்போம். ரூட்டின் ஆஃப் சைட் ஆட்டத்தை ஸ்மித், வில்லியம்சன் போன்றவர்களால் கூட ஈடு கொடுக்க முடியாது. ஸ்டீவ் ஸ்மித் ஓர் un orthodox வீரர் என்பதால் அவரை இந்த ஓப்பீட்டிற்குள் கொண்டு வரவில்லை. ஆஃப் சைடில் ரூட் ஆதிக்கம் செய்வதற்கு அவருடைய side-on பேட்டிங் ஸ்டான்ஸ் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

அவருடைய High Backlift மற்றும் orthodox grip-ன் உதவியால் கவர் திசையில் சரளமாக அவரால் ரன் குவிக்க முடிகிறது ; நல்ல லென்த்தில் விழுகின்ற பந்தைக் கூட ரூட்டால் பேக்ஃபுட் கவர் டிரைவ் அல்லது பேக் கட்டாக மாற்ற முடியும். சச்சினுக்குப் பிறகு Backfoot cover drive - ஐ ஸ்டைலாக ஆடுபவர் ரூட் மட்டும்தான். இயல்பில் Backfoot பேட்ஸ்மேன் என்றாலும் ஃப்ரன்ட் ஃபுட் கவர் டிரைவையும் ரூட் சரளமாக ஆடுவதைப் பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக அவருடைய கண்கவர் knee bended கவர் டிரைவ்கள்!

ஜோ ரூட்
ஜோ ரூட்
Rui Vieira
Back and across Trigger movement: பந்தை சந்திக்கும் சில நொடிகளுக்கு முன்பாக பேட்ஸ்மேன் கால்களை நகர்த்தி தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு பெயர் Trigger movement. இதில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாணி Back and across.

இந்த ஆஃப் சைடுக்கு கொடுக்கும் முன்னுரிமை காரணமாக உள்ளே வருகின்ற பந்துகளுக்கு ரூட் கடந்த சில வருடங்களாக தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலத்தில் அந்தக் குறையையும் அவர் கடந்து வந்துவிட்டார். அதற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் பேட்டிங் டெக்னிக்கில் அவர் மேற்கொண்ட சில மாறுதல்களும் காரணம். தன்னுடைய High backlift மற்றும் Back and across trigger movement ஐயும் தற்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளார்.

இது பேட்டிங்கில் அவருக்கு முன்பை விட கூடுதல் கட்டுப்பாட்டை கொடுக்கிறது. Fab 4 வரிசையில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுபவர்களில் ரூட்டுக்குத்தான் முதலிடம். எந்த லென்த்தில் பந்து விழுந்தாலும் sweep ஆடி கூட்டித் தள்ளி விடுவார். அதற்கு நல்ல உதாரணம் சென்னை டெஸ்ட்டில் அவர் அடித்த இரட்டை சதம். Fab 4 வரிசையில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த பெர்சனாலிட்டி உள்ளது. நாம் முன்பே பார்த்தது போல கோலிக்கு ஆக்ரோஷம் ; வில்லியம்சனுக்கு துறவு நிலை ; ஸ்மித்துக்கு போர்க்குணம். சரி ஜோ ரூட் ஓய்வு பெறும் போது தன்னுடைய அடையாளமாக எதை விட்டு விட்டுச் செல்வார்.

ஜோ ரூட்
ஜோ ரூட்
Rui Vieira

2019-ல் செயின்ட் லூசியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் ஜோ ரூட் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். ஆக்ரோஷமாக பந்து வீசிக் கொண்டிருந்த கேப்ரியலைப் பார்த்து ரூட் குறும்பாக சிரிக்கிறார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த கேப்ரியல் " என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்... நீ என்ன ஓரின சேர்க்கையாளனா?" எனச் சீறுகிறார்.

அதற்கு அமைதியாக ரூட் சொன்ன பதில் "என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக தயவு செய்து ஓரின சேர்க்கையாளர்களை பற்றித் தவறாகப் பேசாதே. அப்படி இருப்பதில் எந்தத் தவறும் இல்லை’’.

இந்த மனிதாபிமானம் தான் தன்னுடைய பெர்சனாலிட்டியாக ரூட் விட்டுச் செல்லும் அடையாளமாக இருக்கும். Love you root!