Published:Updated:

பவர் ப்ளே - 3| ஜேம்ஸ் ஆண்டர்சன்... உலகின் உன்னதமான வேகப்பந்து வீச்சாளனை புரிந்துகொள்வோமா?!

ஜேம்ஸ் ஆண்டர்சன் - பவர் ப்ளே -3

தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் மூன்றாம் பகுதி இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கரியரை அலசுகிறது!

பவர் ப்ளே - 3| ஜேம்ஸ் ஆண்டர்சன்... உலகின் உன்னதமான வேகப்பந்து வீச்சாளனை புரிந்துகொள்வோமா?!

தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் மூன்றாம் பகுதி இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கரியரை அலசுகிறது!

Published:Updated:
ஜேம்ஸ் ஆண்டர்சன் - பவர் ப்ளே -3

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 45,292 பந்துகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 626 விக்கெட்டுகள், முதல் தர கிரிக்கெட்டில் 1012 விக்கெட்டுகள், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதல் இடம். இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் 19 -ம் நூற்றாண்டில் எங்கோ ஒரு மூலையில் கிரிக்கெட் ஆடிய யாரோ ஒருவரின் புள்ளி விபரங்கள் அல்ல ; சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய இருபதாவது வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் ஆன்டர்சனின் சாதனை எண்கள்.

கடைசியில் எல்லாம் வெறும் புள்ளியியல் தரவுகள் என்பதாக சுருங்கி விடுவதுதான் கிரிக்கெட்டின் ஆகப் பெரிய துயரமே! இந்த தரவுகளின் பாரத்தை எல்லாம் கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு ஆண்டர்சனை என்றைக்காவது நாம் கொண்டாடி இருக்கிறோமா, நூறு சதங்கள் அடித்தார் என்பதற்காகவா சச்சினை கொண்டாடினோம்? கிரிக்கெட்டை கூட இங்கே விட்டு விடுவோம். தன் மனதுக்கு பிடித்தமானது என்ற ஒரே காரணத்திற்காக எப்படி ஒரு விஷயத்தை இருபது வருடங்களாக ஒரு மனிதனால் பின் தொடர முடிகிறது? அதுவும் அழகியலும் தீவிரமும் துளி கூட குறையாமல்!

உண்மையில் அழகியலும் தீவிரத் தன்மையும் கிரிக்கெட்டில் எதிரெதிர் துருவங்கள். ஒன்றை இறுக்கமாகப் பற்றிக் கொண்டால் மற்றொன்று சொல்லிக் கொள்ளாமல் கை நழுவி விடும். இவ்விரண்டையும் தன் வசப்படுத்த முடிந்ததனால்தான் ஆண்டர்சனும் சச்சினைப் போல ஒரு மேதை என்கிறோம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Alastair Grant

பொதுவாக கிரிக்கெட் மேதைகளுக்கு என்று சில பிரத்யேக பண்புகள் உண்டு. வடிவேலு சொல்வது போல வெளியில் தெரிவது ஒரு ரூபம். ஆனால் உள்ளுக்குள் இருப்பது பல ரூபங்கள். ஒரு போட்டிக்குள் பல போட்டிகளை உருவாக்கி விடும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆண்டர்சனின் ரன் அப் ஒரு event ; அவுட் ஸ்விங் ஒரு event ; இன் ஸ்விங் ஒரு event ; பேட்ஸ்மேனை விக்கெட்டுக்காக செட் அப் செய்யும் விதம் ஒரு event. போட்டியை இங்கிலாந்து VS எதிரணி என்பதில் இருந்து ஆண்டர்சன் VS எதிரணி என்பதாக மாற்றிவிடும் வித்தை அது. இன்னொன்று ஓயாமல் அவர்கள் மேற்கொள்ளும் பரீட்சார்த்த முயற்சிகள். 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆண்டர்சனின் சமீபத்தைய கண்டுபிடிப்பு swinging wobble ball. இது போலத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் 'Reverse' Reverse swing என்ற புதிய வஸ்துவை கண்டுபிடித்து கிரிக்கெட் உலகை அலற வைத்தார்.

இந்த விஷயத்தை உலக்குக்கு தெரியப்படுத்திய பெருமை சாட்சாத் சச்சின் டெண்டுல்கரையே சாரும். அது சரி வேறு யாரால் இதையெல்லாம் கவனிக்க முடியும்! மேதைகள் எல்லாருக்கும் பொதுவான மற்றொரு முக்கியமான அம்சம் 'இருக்கு ஆனால் இல்லை'. என்ன எஸ்.ஜே. சூர்யா பட வசனம் போல இருக்கிறதா? ஆண்டர்சனுக்கு கிரிக்கெட் தான் உயிர் ; ஆனால் கிரிக்கெட் அத்தனை முக்கியம் கிடையாது. "ஆண்டர்சனுக்கு பந்தை ஸ்விங் செய்வதை விட சுடோகு ஆட்டத்தில் புதிரை கண்டுபிடிப்பதில் தான் ஆர்வம் அதிகம்" சொன்னது வேறு யாருமல்ல ஆண்டர்சனுடன் ஜோடி சேர்ந்து 1000 விக்கெட்டுகளுக்கு மேல் ஒன்றாக குவித்த ஸ்டூவர்ட் பிராட். தேவையான போது Focus ஸ்விட்சை ஆன் அண்ட் ஆஃப் செய்துகொள்ள முடிகிற காரணத்தால் தான் அவர் மேதை.

ஆண்டர்சனை போய் எல்லாம் சச்சின் உடன் ஒப்பிடுவதா என நீங்கள் விசனப்படுவது எனக்குப் புரிகிறது. சரி வேண்டாம் விட்டு விடுவோம். ஒரு வேகப்பந்து வீச்சாளரை பேட்ஸ்மேன் உடன் ஒப்பிடுவது சரியல்லதான். பேட்ஸ்மேன் என்றால் உசத்தி ; வேகப்பந்து வீச்சாளர் என்றால் மட்டம். அவர்கள் artists ; இவர்கள் manual labourers. காலம் காலமாக கிரிக்கெட்டில் பார்க்கப்பட்டு வரும் பாரபட்சம் இது. ஆண்டர்சனின் ரோல் மாடலான வாசிம் அக்ரமுடன் அவரை ஒப்பிடலாமா? "அது எப்படி முடியும். ஆண்டர்சன் ஒரு நல்ல ஸ்விங் பெளலர்தான். மறுக்கவில்லை. டெஸ்ட்டில் 600 விக்கெட்டுகள் எடுத்திருக்கார். ஒப்புக்க்கொள்கிறோம். பந்தை Reverse's Reverse swing செய்யக் கூடிய அளவுக்கு அவர் ஒரு magician தான். ஆனால் அதற்காகவெல்லாம் வாசிம் அக்ரம் மாதிரி ஒரு All time great உடன் அவரை ஒப்பிடுவது சரியல்ல.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Jon Super

வாசிம் பாலைவனத்தில் கூட ஸ்விங் செய்தவர். ஆண்டர்சன் என்ன அப்படியா?" சரி வேண்டாம். விட்டு விடுவோம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் உடன் ஒப்பிடலாமா? "ஆண்டர்சன் அளவுக்கு மெக்ராத் கூட சச்சினுக்கு அந்தளவுக்கு தொந்தரவு கொடுத்ததில்லை. அவர் பந்துகளை கணிக்க முடியாமல் சச்சின் பொத்து பொத்தென்று விழுந்தது எல்லாம் இன்னமும் கண் முன் வந்து போகிறது.

கடைசி பத்தாண்டுகளில் ஆசிய கண்டத்தில் அவருடைய ரெக்கார்ட் எல்லாம் Top notchதான். யார் இல்லை என்று சொன்னோம். ஆனால் அதற்காகவெல்லாம் மெக்ராத் உடன் போய் ஆண்டர்சனை ஒப்பிட முடியுமா? மெக்ராத்துடைய உயரம் என்ன, பவுன்ஸ் என்ன, seam movement என்ன?! "ஆமாம் தப்பு தான். விட்டு விடுவோம். குறைந்தபட்சம் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் பெயருக்கு பக்கத்திலாவது ஆண்டர்சனை வைத்துப் பார்க்கலாமா?’’ முதலில் கேள்வியே தப்பு. ஸ்டெயின் 145 kph வேகத்தில் ஸ்விங் செய்தவர். ஆண்டர்சனோ மிதவேக ஸ்விங் பெளலர். ஆண்டர்சன் எத்தனை டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்? அவர் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அவ்வளவு தான்."

இவையெல்லாம் ஆண்டர்சனை ஒரு குறுகிய வட்டத்துக்குள் தொடர்ந்து வைப்பதற்கு சொல்லப்படும் வியாக்கியானங்கள். இவற்றில் சில உண்மைகளுடன் சேர்த்து நிறைய முன் முடிவுகளும் பாரபட்சங்களும் இருப்பதைக் காண முடியும். வாசிமைப் போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் சாதிக்கவில்லைதான். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் அவரை முறியடித்து 5 வருடங்கள் கடந்து விட்டது. மெக்ராத் போல ஆண்டர்சன் All condition மாஸ்டராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று அவர் வெறுமனே ஸ்விங் பெளலர் மட்டும் அல்ல. wobble seam, cutters, Reverse என ஏகப்பட்ட வித்தைகளை கைவசம் கொண்டவர். ஸ்டெய்னின் வேகத்துடன் நிச்சயமாக ஆண்டர்சனால் போட்டி போட முடியாதுதான். ஆனால் ஸ்டெய்னைப் போல இவர் 35 வயதுக்குள் ஆடிக் கலைத்து விடவில்லை!

நாம் எல்லாரும் ஆண்டர்சனை கடுமையாக வெறுக்கிறோம். ஆனால் உள்ளூர ரகசியமாக அவரை ரசிக்கிறோம். ஆண்டர்சனுக்கு சிறு வயதில் இருந்தே ஓடுவதிலும் விஷயங்களை நேர்த்தியாக செய்வதிலும் அலாதி ஆர்வம் உண்டு. ஜெர்மன் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் போரிஸ் பெக்கரின் ஆட்டத்தில் இருந்த அழகியலை தானும் நிகழ்த்த வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்தது. கோல்ஃப், ரக்பி, கால்பந்து, டென்னிஸ், கிட்டார் வாசிப்பு எனப் பல்வேறு இடங்களில் இதனை தேடிப் பார்த்தவர். இறுதியாக கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். பந்தை அவர் பிடித்திருக்கும் விதமே அதன் மீதான அவருடைய காதலை வெளிப்படுத்தும். என்ன ஒரு seam presentation!

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Alastair Grant

புதிதாக வாங்கிய நோட்டு புத்தகத்தில் முத்து முத்தாக எழுத ஆசைப்படும் குழந்தை போல. அவருடைய ஸ்விங்கின் ரம்மியத்தில் மயங்கி சில நேரங்களில் பேட்ஸ்மேனே தன்னை விக்கெட்டுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறோனா என்று தோன்றும். காற்றுடன் ஆண்டர்சன் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் தீரும் வரை அவர் ஸ்விங் செய்வதை நிறுத்த மாட்டார். எப்பேர்ப்பட்ட கலைஞன்! ஆனால் அவருடைய முகத்தைப் பாருங்கள். அழுவதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கும் குழந்தை போல இருக்கும். முகமெல்லாம் வெறுப்பாக! விஷயங்களை இத்தனை அழகாகப் பார்த்துப் பார்த்து செய்பவருக்கு எதற்கு இத்தனை கோபம்? எதிரணி வீரர்களை மட்டுமில்லாமல் ஏன் சக வீரர்களையும் சகட்டு மேனிக்கு கத்துகிறார்? இந்தக் கேள்வி ஆண்டர்சனிடமே ஒருமுறை கேட்கப்பட்டது. "உண்மையில் நான் ஒரு கூச்ச சுபாவி.

டேட்டிங்கின்போது என் கேர்ள் ஃபிரண்ட் முத்தத்திற்காக காத்திருந்ததைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு மண்டூகம் நான். ஆனால் களத்தில் காலெடுத்து வைத்ததும் ஏதோவொரு சக்தி என்னுள்ளே புகுந்து கொள்கிறது. அப்போது நான் என்ன பேசுகிறேன், என்ன செய்கிறேன் என்பதே எனக்கு நினைவில் இருப்பதில்லை." இதுதான் ஆண்டர்சனின் ஆளுமை. உண்மையில் களத்தில் இருக்கும்போது இருக்கும் ஆண்டர்சன் உண்மையான ஆண்டர்சன் அல்ல. அதேநேரம் அவர் வெளிப்படுத்துவது ஒரு போலியான பிம்பமும் அல்ல.

ஆண்டர்சனின் நண்பர்கள் வட்டம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கிரேம் ஸ்வான் ஒரு நவீன விதூஷகன். மரண செய்தியைக் கூட சிரித்துக் கொண்டே சொல்லும் ஒரு வித்தியாசமான பிறவி. அப்படியே ஆண்டர்சனுக்கு எதிர்த் தரப்பு. 2014-ல் ஸ்வான் ஓய்வு பெறும் காலம் வரை ஆண்டர்சனுக்கு அவர் தான் best mate. இன்னொரு நண்பரான அலஸ்டயர் குக் ஒரு perfectionist. ஆண்டர்சனோ தன்னுடைய கிட் பேக்கை கூட மாற்றி வைக்க சலித்துக் கொள்பவர். மற்றொரு நண்பரான ஸ்டூவர்ட் பிராட் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர். ஆண்டர்சனோ தன்னுடைய பந்து வீச்சில் கேட்ச் விட்டால் சக வீரர்கள் என்று கூடப் பார்க்காமல் சகட்டு மேனிக்கு திட்டுபவர். எப்படிப்பட்ட ஒரு நண்பர் குழாம் என்று பாருங்கள்! உண்மையில் ஆண்டர்சன் தன்னிடம் இல்லாதவற்றை, தான் ஆக ஆசைப்பட்டவற்றை தன் நண்பர்களின் அண்மை மூலமாக நிரப்பிக் கொண்டார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Alastair Grant

தொழில் ரீதியாகவும் இந்த நண்பர் வட்டம் சுவாரசியமானது ; ஒருவர் கூட ஸ்விங் பெளலர் கிடையாது. ஸ்விங் வீசுவதற்கு மட்டும் தான் லாயக்கு என்கிற அடையாளத்தில் மீண்டு வருவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஸ்டூவர்ட் பிராடிடம் இருந்து லெக் கட்டரையும் பாகிஸ்தானின் முகமது ஆஸிப்பிடம் இருந்து Wobble seam-யையும் ஆண்டர்சன் கற்றுக் கொண்டார்.

பொதுவாக ஆண்டர்சனின் swing பந்துகள் பேசப்பட்ட அளவுக்கு அவருடைய variations பேசப்படவில்லை. உதாரணத்துக்கு Wobble seam பந்தை எடுத்துக் கொள்வோம். ஸ்டூவர்ட் பிராட், சிராஜ் போன்றவர்கள் இந்தப் பந்தை வீசும் போது நூல் கண்டை எடுத்து வீசியதைப் போல தாறுமாறாக இருக்கும். உண்மையில் தாறுமாறு (uncertainty) தான் அதன் விஷயமே. ஆனால் ஆண்டர்சன் அதிலும் தன்னுடைய இங்கிலீஷ் டச்சைக் காண்பிக்க எத்தனிப்பார். அதில் கொஞ்சம் ஸ்விங்கையும் கலக்கப் பார்ப்பார். நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் கோலியை அவர் காலி செய்தது இப்படித்தான். இந்த இங்கிலீஷ் டச் மீது ஆண்டர்சனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் கெவின் பீட்டர்சன் மீது முன்பு வெறுப்பாக திரும்பியது. பீட்டர்சன் இங்கிலீஷ் டச் என்பதை பழம்பெருமை என ஒதுக்கியவர்.

ஆண்டர்சனுக்கு ஒரு தீராத மனக்குறை உண்டு. அது வேகப்பந்து வீச்சாளர்கள் மீது கிரிக்கெட் உலகம் காட்டும் பாரபட்சம். ஆண்டர்சன் வார்த்தையில் சொல்வதென்றால் "களத்தை நாங்கள் செட் செய்கிறோம், நாங்கள் கஷ்டப்பட்டு நாளெல்லாம் பந்து வீசுகிறோம், விக்கெட்டுகளை எடுத்து அணியை வெற்றி பெற உதவுகிறோம். ஆனால் பாராட்டுக்களை மட்டும் வேறு யாரோ தட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள்."

ஆண்டர்சன் அடிக்கடி வெளிப்படுத்தும் இன்னொரு மணக்குறையும் உண்டு. அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மை. லார்ட்ஸ் டெஸ்ட்டில் தன்னை நோக்கி பெளன்சர்களாக வீசிய பும்ராவிடம் ஆண்டர்சன் கேட்கிறார். "இவ்வளவு நேரம் நார்மலாக பந்து வீசிக்கொண்டிருந்த நீ ஏன் என்னைப் பார்த்ததும் புயல் வேகத்தில் வீசுகிறாய்?". அவர் பும்ராவிடம் கேட்காமல் கேட்ட இன்னொரு விஷயம் 'hey mate, இங்கப் பாரு, உன்னோட கேப்டன் கோலியும் என்னோட கேப்டன் ரூட்டும் களத்தில் மோதிக்கிறது கிடையாது. உன் அணியின் விக்கெட் கீப்பர் பன்ட்டும் என் அணியின் விக்கெட் கீப்பர் பட்லரும் சண்டை போட்டுக்கிறது இல்லை. நாம் மட்டும் எதற்காக மாறி மாறி தாக்கிக்கணும்?' ஜேம்ஸ் ஆண்டர்சனின் வெற்றி நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் ஒன்றே ஒன்றுதான். பிடித்ததை செய் ; அதையும் நேர்த்தியாக செய்.

Well bowled jimmy!