Published:Updated:

பவர் ப்ளே - 6 | ஆண்ட்ரி ரஸல் களத்தில் இருந்தால்... பும்ராவின் யார்க்கரும் சிக்ஸருக்குப் பறக்கும்!

ஆண்ட்ரி ரஸல்
ஆண்ட்ரி ரஸல்

ரஸலை வெறுமனே ஆல்ரவுண்டர் என்று சொல்வது அவருடைய திறமைக்கு நியாயம் சேர்ப்பதாகாது. பவர் ஹிட்டிங் பேட்டிங், விக்கெட் எடுத்துக் கொடுக்கும் வேகப்பந்து வீச்சு, பாயும் புலி போல ஃபீல்டிங் என எல்லா வகையிலும் ரஸல் ஒரு சூப்பர் ஆல்ரவுண்டர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘’டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார் என்ற விவாதம் வரும் போதெல்லாம் என் பெயரையும் பிராவோ பெயரையும் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் அது ரஸல்தான். அவர் தன்னுடைய முழுத் திறமையையும் உணர்ந்து கொண்டால், அவரைப் போல ஒரு வீரர் உலகத்தில் யாரும் கிடையாது."
பொலார்ட்
2019 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கைரன் பொல்லார்ட் பெருந்தன்மையுடன் ரஸல் குறித்து பேசிய வார்த்தைகள் இவை.
ஆண்ட்ரி ரஸல்
ஆண்ட்ரி ரஸல்

டி20 கிரிக்கெட்டின் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயிலின் பேட்டிங் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. ஆரம்பத்தில் அடக்கம். பின்னர் இடி முழக்கம் என்பதாக அவருடைய அணுகுமுறை இருக்கும். கெயிலின் அடுத்த வாரிசானா பொல்லார்டும் அதே ஸ்டைலுக்கு தன்னை வரித்துக் கொண்டவர். டி20 கிரிக்கெட் என்றாலும் நேர் கோட்டில் பேட்டிங் செய்ய நினைப்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுடைய அணுகுமுறைக்கு நேர் எதிரானது ரஸல் பேட்டிங். எக்ஸ்ட்ரா கவர் திசையிலும் இவரால் நினைத்த நேரத்தில் சிக்சர்களை பறக்க விட முடியும். டி20 கிரிக்கெட்டில் எதுவும் சாத்தியம் என்கிற புதிய யதார்த்தத்துக்கு ரசிகர்களை பழக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஆண்ட்ரு ரஸல்.

ரஸலின் அதிரிபுதிரியான வெற்றிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிக முக்கிய காரணம். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா தான் முதன்முதலாக நட்சத்திர வீரர்கள் மீதான கவர்ச்சியில் இருந்து வெளிவந்த முதல் அணி. அணிக்குத் தேவையில்லை என்றவுடன் கொல்கத்தா இளவரசன் கங்குலியையே தூக்கிப் போட்டது அதன் வரலாறு. அணியைத் தேர்வு செய்த பின்னர் தான் கேப்டன் யார் என்பதை முடிவு செய்யும் பழைய ஆஸ்திரேலியா பாணியை பின்பற்றிய முதல் ஐபிஎல் அணியும் அதுதான். 2014 ஐபிஎல் ஏலத்தில் ரஸல், கொல்கத்தாவுக்கு தேர்வு செய்யப்படாமல் போயிருந்தால் அவருடைய கரியர் இந்தளவுக்கு வளர்ந்திருக்காது என நிச்சயமாக சொல்ல முடியும்.

2013 ஐபிஎல் தொடரில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டிருந்தார் ரஸல். டி20 உலகக் கோப்பையில் அவருடைய திறமையை கணித்த கொல்கத்தா அணி, அவரை 60 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் 2014-ல் ஒரேயொரு போட்டியில் மட்டும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் எதிர்காலத்துக்கான வீரர் என்பதில் கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

ரஸல், தினேஷ் கார்த்திக்
ரஸல், தினேஷ் கார்த்திக்

அதன் பின்னர் அந்தப் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடையத் தொடங்கியது. 2016-க்குள் ஐந்து வெவ்வேறு அணிகளுக்காக டி20 தொடர்களை வென்று கொடுக்கும் அளவுக்கு உருமாறினார் ரஸல். கொல்கத்தா அணியின் வெற்றி ரகசியமே இதுபோன்ற எதிர்காலத்துக்கான வீரர்களை அடையாளம் கண்டு கொள்வதில் தான் இருக்கிறது. ரஸல் மட்டுமல்லாமல் நரைன், கிறிஸ் லின் போன்றவர்களும் கொல்கத்தாவுக்கு ஆடிய பின்னர்தான் டி20 சூப்பர் ஸ்டார்களாக உருமாறினர். வெஸ்ட் இண்டீஸ் டி20 பாரம்பரியத்தில் ரஸலின் இடம் முக்கியமானது.

10 வருட காலம் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சாதித்த பின்னர் தான் கெயில் ஃப்ரீலான்ஸ் டி20-யின் முகமாக மாறினார். ஆனால் ஒரேயொரு டெஸ்ட் மட்டுமே ஆடியுள்ள ரஸல், ஃப்ரீலான்ஸ் டி20 மூலமாகவே தனக்காக அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டார். பொலார்ட், ரஸல் ஆகியோர் வகுத்துக் கொடுத்த பாதையில் இன்று நிறைய கரீபிய வீரர்கள் ஃப்ரீலான்ஸ் கிரிக்கெட்டர்களாக நடை போட்டுக் கொண்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் பிற டி20 தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தும் அணி KKR. கரீபியன் தீவுகளில் நடக்கும் சிபிஎல் தொடரில் டிரினிடாட் அண்ட் டொபாகோ (TKR) அணியின் உரிமை KKR அணி நிர்வாகத்திடம்தான் உள்ளது. இதன் மூலம் T20 கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத அங்கமான கரீபிய வீரர்களைப் பற்றிய முழு டேட்டா பேஸ் KKR அணிக்கு கிடைக்கிறது. ஐபிஎல் தொடரில் KKR அணிக்கு ஆடும் வீரர்களே பெரும்பாலும் TKR அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

அணியின் பயிற்சியாளர்கள் அனலிசிஸ்டுகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் கிட்டத்தட்ட அதே முகங்களே. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னரும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு இடையே இணக்கத்தை தொடர ஏற்படுத்தப்பட்ட ஓர் உத்தி இது. இதற்கு உதாரணமாக ரஸலையே எடுத்துக் கொள்வோம். சிபிஎல் தொடர் முடிந்த உடனே ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக ரஸலுக்கு பயிற்சி கொடுப்பது KKR நிர்வாகத்தின் வழக்கம். KKR நிர்வாகத்தை பொறுத்தவரை ஐபிஎல் தொடருக்கு உத்தேசிக்கப்பட்ட உத்திகளை சோதனை செய்து பார்க்கும் ஒரு களம் தான் சிபிஎல் தொடர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஸலை வெறுமனே ஆல்ரவுண்டர் என்று சொல்வது அவருடைய திறமைக்கு நியாயம் சேர்ப்பதாகாது. பவர் ஹிட்டிங் பேட்டிங், விக்கெட் எடுத்துக் கொடுக்கும் வேகப்பந்து வீச்சு, பாயும் புலி போல ஃபீல்டிங் என எல்லா வகையிலும் ரஸல் ஒரு சூப்பர் ஆல்ரவுண்டர். அவர் இல்லாமல் IPL, BBL, PSL, T20 Blast, CPL, BPL என எந்தவொரு டி20 தொடரும் கவனம் பெற முடியாது என்கிற ஒரு நிலை உருவாகிவிட்டது. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் கன்சிஸ்டன்சியுடன் ஆடுவது கடினம். ஆனால், ரஸல் அந்தத் தடையையும் உடைத்துக் காட்டிவிட்டார். 2019 ஐபிஎல் தொடர் அதற்கு ஒரு உதாரணம். அந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் குவித்த ரன்கள் 510. ஸ்ட்ரைக் ரேட் 204.81. சராசரி 56.66. மொத்தமாக ரஸல் அடித்த சிக்சர்கள் 52. ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 500 ரன்களுக்கு மேல் குவித்தது அதுதான் முதல்முறை.

ரஸல்
ரஸல்

டி20 கிரிக்கெட்டில் ஒரு ஃபினிஷர் கன்சிஸ்டன்சியுடன் ஆடுவதற்கு எக்கச்சக்க உழைப்பை கொடுக்க வேண்டியதிருக்கும். முகமது அலி சொன்னது போல ஆட்டம் என்பது களத்தில் மட்டும் நடப்பதல்ல என்பதை ரஸல் புரிந்து கொண்டிருக்கிறார். கடுமையான வலைப் பயிற்சி, உடற்பயிற்சி, எந்த டார்கெட்டையும் கடந்து விடலாம் என்கிற உறுதியைத் தரும் மனப்பயிற்சி என அவருடைய வெற்றிக்கு பின்னால் நிறைய விஷயங்கள் மறைந்துள்ளன.

ஒரு கட்டுப்படுத்த முடியாத பேட்ஸ்மேனாக ரஸல் மாறியதற்கு காரணம் அவர் தன்னுடைய ஸ்கோரிங் ஏரியாவை எல்லாத் திசைகளிலும் பரந்து விரியச் செய்யும் திறன் தான். பொலார்டை கூட நல்ல களத்தடுப்பை ஏற்படுத்துவதன் கட்டுப்படுத்தலாம். அவருடைய ஸ்கோரிங் ஏரியா என்பது லாங் ஆனில் தொடங்கி மிட் விக்கெட்டில் முடிந்துவிடும். பாயின்ட், ஸ்கொயர் திசைகளில் அவரால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது. ஆனால் ரஸல் விஷயத்தில் இது எதுவுமே எடுபடாது. காரணம் அவர் எக்ஸ்ட்ரா கவர் திசையையும் தன்னுடைய ஸ்கோரிங் ஏரியாவாக வைத்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு விதமான பவர் ஹிட்டிங்கை பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா தன்னுடைய பவரை க்ரீஸில் டீப்பாக நின்று உருவாக்கிக் கொள்கிறார். திறந்த வாக்கிலான அவருடைய இடுப்புப் பகுதி ஒரு ஒரு பேஸ் பால் ஹிட்டருடைய சக்தியை கொடுக்கிறது. ரஸல் பவர் ஹிட்டிங் என்பது தனி ரகமானது. அவருடைய நீண்ட சக்தி வாய்ந்த கைகள் எதையும் தேடிச் சென்று தாக்கும் திறன் கொண்டது. மற்ற பவர் ஹிட்டர்களை போல பேக் லிஃப்ட்டை மட்டுமே நம்பி இல்லாத காரணத்தால் பந்தை தரையோடு தரையாக செதுக்கவும் அவரால் முடிகிறது. பந்தை சந்தித்த நொடி ரஸல் தன்னுடைய முன்னங்காலை பூமியில் இருந்து மேலே எடுத்து விடுகிறார். இது முழு சக்தியையும் பந்தின் மீது மட்டும் கொடுக்கும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. பந்தை அடித்த உடன் தன்னுடைய பேலன்ஸ் தகராமல் பார்த்துக் கொள்ள தன்னுடைய பின்னங்காலை அவர் ஊன்றிக் கொள்கிறார்.

மும்பைக்கு எதிரான ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் பும்ராவுடன் ரஸல் நடத்திய சமரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். வைட் லைனுக்கு நெருக்கமாக புயல் வேகத்தில் யார்க்கர் லென்த்தில் பும்ரா வீசுகிறார். மற்ற எந்த பேட்ஸ்மேனுக்கும் அந்தப் பந்தில் சிங்கிள் மட்டும் தான் கியாரன்ட்டி. ஆனால் ரஸல் அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். எப்படி இதை சாத்தியப்படுத்தினார் ரஸல்? பந்து ஸ்டம்ப் லைன் யார்க்கராக வரும் என்று எதிர்பார்த்து முன்னங் காலை திறந்த வாக்கில் வைத்து காத்திருந்தார் ரஸல். பந்து வைட் ஆஃப் ஸ்டம்ப் யார்க்கராக வீசப்பட்ட உடன் முன்னங்காலை தரையில் இருந்து எடுத்து உடல் எடையை அப்படியே பின் காலுக்கு மடைமாற்றி பந்தின் திசையில் கைகளை நீட்டி விட்டார். சிக்ஸர்! பும்ரா வழக்கம் போல பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார். டி20 கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என உணர்த்திய ஷாட் அது.

ரஸல்
ரஸல்

பொதுவாக ரஸலின் பேட்டிங், ஃபீல்டிங் அளவுக்கு அவருடைய வேகப்பந்து வீச்சு சரியான கவனம் பெறவில்லை. 140 கிமீ வேகத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் அவர் வீசும் யார்க்கர்கள், பெளன்சர்களை சமாளிப்பது மிகவும் கடினமானது. காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் சமீப காலமாக ரஸல் இரண்டு ஓவர்கள் மட்டும்தான் வீசுகிறார். அதுவும் டெத் ஓவர்களில் மட்டும். 2021 ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் பேட் செய்த மும்பை அணி 17 ஓவர்கள் முடிவில் 125 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. அப்போது தான் பந்தை ரஸல் கைகளில் கொடுக்கிறார் மார்கன். மொத்தமாக 12 பந்துகளை மட்டுமே வீசிய அவர் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெத் ஓவர்களில் ரஸலின் வேகப்பந்து வீச்சு ஓர் அணிக்கு கொடுக்கும் பலன் அதிகம்.

2017 ரஸலின் கரியரைப் புரட்டிப் போட்ட ஆண்டு. ஊக்க மருந்து பரிசோதனை கமிட்டியின் முன் சரியாக ஆஜராகாத காரணத்தால் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ரஸல். ஒரு சிறிய கவனக் குறைவு தன்னுடைய ஒரு வருட கிரிக்கெட்டை காவு வாங்கும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அது ஒருவிதத்தில் ரஸலின் கரியரில் நல்லதாகவே முடிந்தது. இடைவெளியை சரியாகப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைத்து புதுப் பொலிவுடன் அவர் திரும்பி வந்தார். அப்போதிருந்து ரஸல் தொட்டதெல்லாம் பொன் தான்.

"என்னுடைய திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். அதை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை கொஞ்ச காலத்துக்குப் பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன்." ஐபிஎல் தொடரில் ரஸலின் சரவெடிக்கு காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு