Published:Updated:

பவர் ப்ளே - 6 | ஏபி டி வில்லியர்ஸ்… பேட்டிங்கில் இருப்பது வன்முறையா, அழகியலா?

ஏபி டி வில்லியர்ஸ்

தினேஷ் அகிரா எழுதும் சமகால சிறந்த கிரிக்கெட்டர்கள் பற்றிய பவர் ப்ளே தொடரில் இந்த வாரம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டரான ஏபி டி வில்லியர்ஸ்!

பவர் ப்ளே - 6 | ஏபி டி வில்லியர்ஸ்… பேட்டிங்கில் இருப்பது வன்முறையா, அழகியலா?

தினேஷ் அகிரா எழுதும் சமகால சிறந்த கிரிக்கெட்டர்கள் பற்றிய பவர் ப்ளே தொடரில் இந்த வாரம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டரான ஏபி டி வில்லியர்ஸ்!

Published:Updated:
ஏபி டி வில்லியர்ஸ்
முன்குறிப்பு: டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவருடைய ஐபிஎல் கரியர் மட்டும் இந்தக் கட்டுரையில் அலசப்படுகிறது.

ஏபி டி வில்லியர்ஸின் பேட்டிங், வன்முறையும் அழகியலும் ஒன்று சேரும் ஒரு அதிசய ரசவாதம். ஏபிடியின் ஒவ்வொரு ஷாட்டும் இடியாக வந்திறங்கினாலும் அதில் கொஞ்சம் நளினமும் மிளிர்வதைப் பார்க்கமுடியும். ரசிகர்களை மெய்மறக்கச் செய்வது அவர் அடிக்கும் இமாலய சிக்சர்கள் மட்டுமல்ல. இந்த அதிசய ரசவாதமும்தான். ஏபிடியை பேட்டிங் சொர்க்கபுரியான சின்னசாமி ஸ்டேடியத்தில் பார்ப்பது என்பது ஓர் அற்புத கண்காட்சி. இந்த முறை அதற்கான கொடுப்பினை இல்லாதது நமக்கெல்லாம் ஒரு துரதிர்ஷ்டம்தான்.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப், பவுன்சர் பந்தை பெளலரின் தலைக்கு மேல் சாத்தும் டென்னிஸ் ராக்கெட் டாப் ஸ்பின் ஷாட், கவர் திசையில் அடிக்கும் நறுக்குத் தெரித்தார் போன்ற டிரைவ்கள்... ஆஹா அத்தனையும் கண்கொள்ளா காட்சிகள். பந்தை எதிர்கொள்ளும் முன்பே அதன் போக்கைக் கணித்துவிடும் திறனே, ஏபிடியை ஒரு ஏலியன் பேட்ஸ்மேனாக உருமாற்றியது. கிட்டத்தட்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒரு மந்திரவாதியை போல.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

2000-க்குப் பிறகான பேட்டிங் யுகத்தில் ஏபிடியை ஒரு நவரச நாயகன் என்றே சொல்ல வேண்டும். அவரால் 31 பந்துகளில் அதிவேக சதத்தையும் அடிக்க முடியும். 6 மணி நேரம் தாக்குப்பிடித்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்கவும் முடியும். டெஸ்ட் போட்டிக்கு ஒருமுகம் ; ஒருநாள் போட்டிக்கு ஒருமுகம். அதுவே டி20 என்று வந்துவிட்டால் ஆறுமுகம். ஒவ்வொரு வீரருக்கும் ஃபேவரிட்டான ஃபார்மட் என ஒன்றிருக்கும். அதில் தான் அவர்களுடைய முழு வீச்சையும் பார்க்க முடியும். லாராவுக்கு டெஸ்ட், சச்சினுக்கு ஒருநாள் போட்டிகள். அதுபோல ஏபிடிக்கு டி20. அவரைப் போல டி20 கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய வேறு ஒரு பேட்ஸ்மேன் இருக்க முடியாது.

அடிப்படையில் ஏபிடி ஒரு ஜீனியஸ். அதிலும் டி20 என்று வந்துவிட்டால் அவர் ஒரு சூப்பர் ஜீனியஸ். மற்ற பேட்ஸ்மேன்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காததை செய்து காட்டும் ஒரு மாயமான். ஏபிடியின் மேதமைக்கு ஈடுகொடுக்க டைகர் வுட்ஸ், மெஸ்ஸி போன்ற ஒரு சிலரே இந்த பூமியில் உள்ளனர். மற்ற பேட்ஸ்மேன் 20 பந்துகளில் 25 ரன்கள் அடிப்பதற்கும் ஏபிடி அதை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எடுத்த ரன்கள், எடுத்துக் கொண்ட நேரம் ஒன்றுதான். ஆனால், ஏதோவொன்று ஏபிடியை தனித்துக் காட்டுகிறது. இதை எப்படி விளக்கிச் சொல்வது என்று புரியவில்லை. விளக்கிச்சொல்ல முடியாத ஒன்றை செய்து காட்டுபவன் தானே ஜீனியஸ்!

டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் தன்னுடைய இருத்தலுக்காக எதையாவது ஒன்றை விட்டுக் கொடுத்தாக வேண்டும். கிறிஸ் கெயிலுக்கு பவர் ப்ளே, கோலிக்கு ஸ்ட்ரைக் ரேட், பொல்லார்டுக்கு கன்சிஸ்டன்ஸி. ஆனால் ஏபிடிக்கு அப்படி எந்த ஒரு விட்டுக் கொடுத்தலும் தேவைப்படுவதில்லை. உண்மையில் அவருக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில்தான் விட்டுக் கொடுத்து ஆட வேண்டிய நிர்பந்தம் இருந்தது.

டி20-ல் பிட்ச் கண்டிஷனை கணிப்பதற்கு அவருக்கு இரண்டு பந்துகள் மட்டுமே போதுமானது. சுமாரான பிட்ச் ஒன்றில் RCB ஆடும்போது இதனைத் தெளிவாக பார்க்க முடியும். கோலி உட்பட எல்லாரும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது ஏபிடி மட்டும் வானத்தில் இருந்து இறங்கி வந்து லேண்ட் ஆனது போல பட்டாசாக வெடிப்பார். அவருக்குள்ள கிரவுண்ட் சென்ஸ் அதனை சாத்தியப்படுத்துகிறது. இந்த கிரவுண்ட் சென்ஸ் குறித்து பிற்பகுதியில் பார்க்கலாம். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏபிடிக்கான ஸ்பாட் என்பது மிடில் ஆர்டர். டி20 ஆட்டத்தில் ரன் ரேட்டை வெகுவாக மட்டுப்படுத்தும் phase இது. இந்த ஆர்டரில் மற்ற பேட்ஸ்மேன்களின் சராசரி ஸ்ட்ரைக் ரேட் 110. ஆனால் ஏபிடிக்கு 130.

ஏபி டி வில்லியர்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ்

இதன் காரணமாக அவர் விரைவாக ஆட்டம் இழந்தாலும் அவருடைய பேட்டிங் அணிக்கு நெகட்டிவ் இம்பேக்ட் ஏற்படுத்துவதில்லை. முதல் 20 பந்துகளில் 30 ரன்கள். அடுத்த 20 பந்துகளில் 40 ரன்கள். அதற்கும் அதிகமாக ஒரு 10 பந்துகள் கிடைத்தால் எதிரணி காலி. இதுதான் ஏபிடியின் டி20 அப்ரோச். இதனால்தான் அவருடைய ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 150-க்கு மேல் இருக்கிறது.

டி20 கிரிக்கெட்டில் ஏபிடியின் ஆதிக்கத்துக்கு அவருடைய பாசிட்டிவ் மைண்ட் செட்டும் ஒரு காரணம். அணி எந்த நிலையில் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொள்வதில்லை. டி20-ன் தாரக மந்திரம் எதுவென்பது ஏபிடிக்கு நன்றாகத் தெரியும் : counter attaking. 2016 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக அவராடிய பேயாட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பேயாட்டம் என்றவுடன் தாறுமாறான பேட்டிங் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அது ஒரு அழகான இன்னிங்ஸ்.

அரையிறுதி ஆட்டத்தில் 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ் அணி. நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும் RCB அன்றைக்கும் சொல்லி வைத்தது போல சரியாக சொதப்பியது. முதல் ஐந்து ஓவர்களிலேயே கோலி, கெயில் உள்ளிட்ட முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்து அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க மறுமுனையில் பிட்ச் கண்டிஷனை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தார் ஏபிடி. சரியாக 10 பந்துகள். அதன் பின்னர் சரவெடியை ஆரம்பித்தவர் 46 பந்துகளில் 78 ரன்களைக் குவித்தார். 78-ல் 50 ரன்கள் பவுண்டரிகள்!

ஏபி டிவில்லியர்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ்

ஏபிடி பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்த ஒரு weakness -ம் இல்லை. இதனால் டி20 கிரிக்கெட்டில் மேட்ச் அப் என்பது ஏபிடியிடம் எடுபடுவதில்லை. லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னருக்கு எதிராக அவருக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற தெளிவு ஏபிடிக்கு உண்டு. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 155. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக 135. யார்க்கர் பந்துகளுக்கு எதிராக 139. குறை வேகப் பந்துகளுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 189. ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின், சைனா மேன், லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட், ரைட் ஆர்ம் ஃபாஸ்ட் என அனைத்து விதமான பந்து வீச்சுக்கும் எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 130. 'உன்னை என்ன தாண்டா பண்றது' என பெளலர்கள் கதறவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி எல்லா விதமான பந்துகளிலும் ரன் குவிக்க முடியும் என்பதால் சேசிங்கின் போது ஏபிடியால் பதற்றம் இல்லாமல் ஆட.முடிகிறது. ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் தான் ஏபிடி நன்றாக ஆடுவார் என சொல்வதற்கும் இல்லை. உலகின் முக்கியமான டி20 தொடர்கள் எல்லாவற்றிலும் 30க்கும் மேற்பட்ட சராசரியும் 130-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கானது என்ற பார்வை மிகவும் மேலோட்டமானது. உண்மையில் டி20-யில்தான் பேட்ஸ்மேனுக்கு ரிஸ்க் அதிகம். பந்தை கணித்து ஆடுவது மட்டுமல்லாமல், கணித்ததை பவுண்டரிக்கும் அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இது மாதிரியான ஒரு ஃபார்மட்டில் எப்படி ஏபிடி கன்சிஸ்டன்சியை இழக்காமல் அதிரடியாக விளையாடுகிறார்? ரொம்ப சிம்பிள். அவர் எதையும் யோசிப்பதே கிடையாது. பந்தை சந்திப்பதற்கு முன்பாக எல்லா வாய்ப்புகளையும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்க்கிறார். பிறகு எல்லாவற்றையும் அப்படியே மறந்தும் விடுகிறார். முழுப் பொறுப்பையும் தன்னுடைய உள்ளுணர்விடம் விட்டுவிட்டு அதன் போக்கில் பேட்டை வீசுகிறார். புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மெஷின் போல. ஆன்மீக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஜென் துறவியை போல.

ஏபி டி வில்லியர்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ்

ஏபிடிக்கு எல்லா ஃபார்மட்களிலும் இதுதான் டெம்ப்ளேட். ஃபார்மட் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து தேவைக்கேற்றபடி அவருடைய உள்ளுணர்வு பொறுப்பைக் கூட்டியோ குறைத்தோ கொள்கிறது. இந்த அடிப்படை ஸ்ட்ராங்காக இருப்பதால் தான் ஏபிடியின் ஆட்டம் தொடர்ந்து சீராகவே இருக்கிறது. கிளாசிக்கான கவர் டிரைவோ அல்லது இன்னோவேட்டிவான ரிவர்ஸ் ஸ்கூப்போ அவருக்கு அடிப்படை ஒன்றுதான்.

Ramp ஷாட், ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வஸ்துக்களை ஏபிடி மற்றும் அவருடைய சமகாலத்தவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 80 வருடங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரி கான்சன்டைன் ஸ்கூப் ஷாட்டை கண்டுபிடித்தார். 70-களில் கார்டன் கிரீனிட்ஜும் 90-களில் முஸ்டாக் முகமதுவும் ரிவர்ஸ் ஸ்வீப்பை பிரபலப்படுத்தினர். 2000-த்தில் ஜான்டி ரோட்ஸ் ஸ்விட்ச் ஹிட்டைக் கண்டுபிடித்தார். இவர்களின் தொடர்ச்சியாகத் தான் ஏபிடியின் 360° பேட்டிங்கை பார்க்க வேண்டும். ஆனால் ஏபிடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதுபோன்ற ஷாட்களை ஆடும் போதும் அவர் தன்னுடைய நளினத்தை இழப்பதில்லை.

உதாரணமாக அவருடைய ரிவர்ஸ் ramp ஷாட்டை எடுத்துக்கொள்வோம். பந்தை சந்திக்கும் கடைசி நொடிக்கு முன்பாக கைகளை ஸ்விட்ச் செய்து ramp செய்வார். ஒரு லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் போல. ஒரு சிறிய மணிக்கட்டு விலக்கம் தான். பந்து தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறக்கும். கொஞ்சம் கூட வன்முறை என்பதே கிடையாது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று அவர் கற்பனையாக தன்னுடைய ஸ்டேன்ஸ்- ஐ சுற்றி ஒரு சதுரத்தை வரைந்து கொள்கிறார். உயிரே போனாலும் அந்தக் கோட்டை அவர் தாண்டுவது கிடையாது. முன்பின்னாக, இடவலமாக நகர்ந்து பந்து வீச்சாளருக்கு போக்கு காட்டுவது எல்லாமே இந்தக் கோட்டுக்குள்தான். இன்னொரு காரணம் அவருக்கு இருக்கும் கிரவுண்ட் சென்ஸ். டென்னிஸ், ரக்பி, கால்பந்து என பல்வேறு கிரவுண்ட் விளையாட்டுகளில் ஏபிடி கில்லி. சச்சினுக்கு எப்படி ball சென்ஸ் அதிகமோ அதுபோல ஏபிடிக்கு கிரவுண்ட் சென்ஸ் அதிகம்.

ஏபிடியின் பேட்டிங் தொழில்நுட்பத்தில் ஜாக் காலிஸின் தாக்கத்தை பார்க்க முடியும். காலிஸ் போலவே ஏபிடியின் Backlift - கொஞ்சம் உயரம் குறைவானது. அதேநேரம் குளுஸ்னரின் பேஸ்பால் அப்ரோச்சையும் அவர் தன்னுடைய பேட்டிங்கில் பூசி மெழுகியுள்ளார். இப்படி இரண்டு நேரெதிர் போக்குகளை ஒன்று சேர்த்த ரசவாதம் தான் ஏபிடியை இந்த நூற்றாண்டின் நவீன பேட்ஸ்மேனாக உருமாற்றியது.
ஏபி டிவில்லியர்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ்

ஒரு பேட்ஸ்மேன் ஜீனியஸ் ஆக உயர்ந்தானா இல்லையா என்பதை அளவீடு செய்வதற்கான சூத்திரம் ஒன்று உள்ளது. அது தன்னுடைய தோற்றப் போலிகளை தன்னுடைய காலத்திலேயே அவனால் உருவாக்க முடிந்ததா இல்லையா என்பதைப் பொறுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வில்லியம்சனை ஏபிடியின் தோற்றப் போலி எனச் சொல்லலாம். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மட்டும்!

குறைந்த ஓவர் போட்டிகளில் பட்லரை சொல்ல முடியும். ஆனால் இருவருடைய ஆட்டமும் ஒரு எல்லைக்குள் நின்றுவிடும். வில்லியம்சனால் 360° பேட்டிங் செய்ய முடியாது. பட்லரால் டெஸ்டில் கிளாசிக்கலாக பேட்டிங் செய்ய முடியாது.

ஏபிடியைப் போல இரண்டு மாறுபட்ட புள்ளிகளையும் இணைக்கும் ரசவாதம் எல்லாருக்கும் கைகூடிவருவதில்லை. ஆம், ஆப்ரஹாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ் ஒரு ரசவாதிதான்!