Published:Updated:

பவர் ப்ளே - 5 | கிங் ஆஃப் கவர் டிரைவ் பாபர் அசாம்தானே… ஏன் அவருக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை?

பாபர் அசாம் - பவர் ப்ளே - 5

தினேஷ் அகிரா எழுதும் சமகால சிறந்த கிரிக்கெட்டர்கள் பற்றிய பவர் ப்ளே தொடரில் இந்த வாரம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம்!

பவர் ப்ளே - 5 | கிங் ஆஃப் கவர் டிரைவ் பாபர் அசாம்தானே… ஏன் அவருக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை?

தினேஷ் அகிரா எழுதும் சமகால சிறந்த கிரிக்கெட்டர்கள் பற்றிய பவர் ப்ளே தொடரில் இந்த வாரம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம்!

Published:Updated:
பாபர் அசாம் - பவர் ப்ளே - 5

அடுத்த விராட் கோலி, கிங் ஆஃப் கவர் டிரைவ், உலகின் சிறந்த டி20 ஆங்கர், ஆல் ஃபார்மேட் பேட்டிங் மேஸ்ட்ரோ, Fab 4-க்குள் நுழையும் புதுவரவு. இப்படி பாபர் அசாமுக்கு நாம் சூட்டும் நாமகரணங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. உலக கிரிக்கெட்டில் பாபரின் முக்கியத்துவத்தை உணர்த்ததுவதற்கு இந்த நாமகரணங்கள் மட்டும் போதுமானவையா? மைதானத்தில் பாபர், பாபர் என உற்சாகக் கூச்சலிடும் பாகிஸ்தான் ரசிகர்களின் பெருமிதத்திற்கு முன்னால் இந்த நாமகரணங்கள் எல்லாம் ஈடாகுமா?

உண்மையில் வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு பாபர் அசாம் எனும் பெயர் ஏற்படுத்தும் அதிர்வு என்பது மிகவும் மேலோட்டமானது: ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால் பாகிஸ்தான் ரசிகனைப் பொறுத்தவரை அதுவொரு நீண்ட காலக் காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த கௌரவம். தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒரு பேட்டிங் ஹீரோ கிடைத்துவிட்டார் என்கிற ஒரு தம்பட்டம். பாபர் அசாமைப் புரிந்துகொள்ள நாம் பாகிஸ்தானையும் அதன் பேட்டிங் பாரம்பரியத்தையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு நேர் எதிரான பாரம்பரியம் கொண்ட நாடு பாகிஸ்தான். இந்தியாவுக்கு பேட்டிங் என்றால் பாகிஸ்தானுக்கு வேகப்பந்து வீச்சு. என்ன காரணமோ தெரியவில்லை பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களைப் போலவே ஆக்ரோஷமாக இருக்கிறார்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளரை நாட்டின் பிரதமராகவே ஆக்கி அழகு பார்க்கும் தேசம் அது. பாகிஸ்தானில் ஒருவர் பேட்ஸ்மேனாக இருப்பதன் கஷ்டத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதற்காக பேட்டிங் ஹீரோக்கள் யாரும் அங்கே பிறக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பேட்டிங்கில் அழகியல் அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள். ஒன்று அவர்கள் Un orthodox கிரிகெட்டர்களாக இருப்பார்கள் அல்லது பவர் ஹிட்டர்களாக இருப்பார்கள்.

பாபர் அசாம்
பாபர் அசாம்

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக அதிக ரன்கள் குவித்த முதல் மூன்று வீரர்களில் ஒருவர் கூட பேட்டிங் ஆர்டிஸ்ட் கிடையாது. ஜாவேத் மியான்தத்தின் ஆட்டம் பார்த்தவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால், அவர் ஒரு கடுமையான போராளி. டி20 கிரிக்கெட்டுக்கு சவால் விடக் கூடிய மரபுக்கு மீறிய ஷாட்டுகளை அன்றைக்கே ஆடிக் காட்டியவர். இன்சமாம் உல் ஹக் நளினமாக ஆடக் கூடியவர் என்றாலும் தன்னுடைய யானை பலத்திற்காகத்தான் இன்றைக்கும் அவர் நினைவு கூறப்படுகிறார். கடைசி பத்தாண்டுகளில் பாகிஸ்தான் பேட்டிங்கை கட்டிக்காத்த யூனிஸ் கானும் கூட ஒரு மரபான பேட்ஸ்மேன் கிடையாது.

பெயர் சொல்லக் கூடிய நளினமான பேட்ஸ்மேன்கள் சிலரும் பாகிஸ்தானுக்காக ஆடியுள்ளனர். ஆனால் மியான்தத் பாணி வீரர்களின் உழைப்புக்கு முன்னால் இவர்களின் நளினம் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆசியாவின் பிராட்மேன் என வர்ணிக்கப்பட்ட ஜஹீர் அப்பாஸ் அவர்களில் முக்கியமானவர். பந்தை பிரமாதமாக டைம் செய்யக் கூடியவரான அவருக்கு வேகப்பந்து வீச்சை எதிர் கொள்வதில் சிக்கல் இருந்தது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த பேட்டிங் ஆர்டிஸ்டான முகமது யூசுப் சுயநலமாக ஆடுகிறார் என விமர்சிக்கப்பட்டவர். சயீத் அன்வர் ஒரு பிரமாதமான ஸ்டைலிஸ்ட். இருந்தும் கூட உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைக்கவில்லை. சமீப காலத்தில் உமர் அக்மல், அகமது ஷேசாத் போன்ற ஏமாற்றங்களை வேறு பாகிஸ்தான் கிரிக்கெட் சந்திக்க நேர்ந்தது. சச்சினைப் போல ஒரு நட்சத்திர பேட்ஸ்மேன் உருவாகாமல் போனதற்கு பாகிஸ்தான் அணியின் தவறான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம். அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேனை எப்போது தூக்குகிறார்கள், ஏன் தூக்குகிறார்கள் என்றே கணிக்க முடியாது. சமீபத்தில் 10 வருட வனவாசத்தை அனுபவத்து மீண்டு வந்த ஃபவாத் ஆலம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

யார் அணிக்கு வெற்றி பெற்றுத் தருகிறார்களோ அவர்களைத்தான் ஒரு ரசிகன் ஹீரோவாக முன்னிறுத்துகிறான். இந்தியா கவாஸ்கரை முன்னிறுத்திய போது பாகிஸ்தான் இம்ரானை முன்னிறுத்தியது. இந்தியா சச்சினுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டபோது பாகிஸ்தான் வாசிம், வக்கார், அக்தர் ஆகியோர் பக்கம் நகர்ந்தது. ஆனால், அவர்களுக்கு ஒரு பேட்டிங் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. பாகிஸ்தான் ரசிகனுக்கு ஒரு பேட்டிங் சூப்பர் ஸ்டார் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? அவர் மியான்தத் போல அணிக்காக உயிரைக் கொடுத்து ஆட வேண்டும். அதேநேரம் முகமது யூசுப் போல வசீகரமான ஆட்டக்காரராகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக மைதானத்தில் பெயர் சொல்லி ஆர்ப்பரிக்க கிரிக்கெட் உலகின் மதிப்பை பெற்ற ஒருவர் வேண்டும். இதற்காகவே பிறந்தவர் போல பாகிஸ்தான் அணிக்கு கிளம்பி வந்தவர்தான் பாபர் அசாம்!

பாபர் அசாம்
பாபர் அசாம்

பாபரின் கவர் டிரைவில் ஜஹீர் அப்பாஸின் வசீகரத்தைப் பார்க்கலாம். ஆனால் அதற்காக அவர் தன்னுடைய விடாப்பிடியான உறுதியை விட்டுக் கொடுப்பதில்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க நினைக்கும் அவருடைய மனஉறுதியில் மியான்தத்தை பார்க்கலாம். ஆனால் அதற்காக அவர் தன்னுடைய மணிக்கட்டு ஃபிளிக்குகளை காவு கொடுப்பதில்லை. சயித் அன்வரைப் போல பாபரும் ஒரு ஜீனியஸ் தான்; ஆனால் அவர் தன்னுடைய விக்கெட்டை வைத்து பகடை ஆட்டம் எல்லாம் ஆடுவதில்லை. பாபர் அசாமை பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தானை பாபரும் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இதற்கும் அவர் தன்னுடைய ஆரம்ப நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாகவெல்லாம் சாதிக்கவில்லை. ஆனால் அவருக்கு மிக்கி ஆர்தர் என்ற ஒரு அற்புதமான பயிற்சியாளர் வாய்த்தார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நம்பர் ஒன் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த அவர், முதல் பார்வையிலேயே பாபரின் மேதமையை கண்டு கொண்டார். எதையும் சரியாகச் செய்து பழக்கப்பட்ட ஆர்தருக்கு பாபரின் உழைப்புடன் சேர்ந்த நளினம் பிடித்துப் போய்விட்டது. அக்மல் குடும்பத்தின் ஓரங்கமான பாபர் எப்படி இத்தனை அர்ப்பணிப்பாக இருக்கிறார் என்பது இன்றுவரைக்கும் புரியாத மற்றொரு புதிர். ஆட்டத்தின் முடிவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தொடர்ந்து பாபருக்கு வாய்ப்புகளை கொடுத்தார் ஆர்தர். லாகூரின் டேப் பால் கிரிக்கெட்டில் அடிப்படைகளை கற்றவர் என்பதால் பந்தின் பெளன்ஸ் மீது ஏறி சவாரி செய்யும் வித்தை தெரிந்தவர் பாபர். இது எல்லா விதமான ஆடுகளங்களுக்குமான பேட்ஸ்மேனாக அவரை உருமாற்றியது.

சிறந்த விஷயங்களைப் பார்த்தவுடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலே பாபரின் சிறப்பம்சம் என சொல்லலாம். விராட் கோலி போல அவரால் கவர் டிரைவ் செய்ய முடியும். வில்லியம்சன் போல உடலுக்கு நெருக்கமாக வைத்து பந்தை டைம் செய்ய முடியும். டி வில்லியர்ஸ் போல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க முடியும். அவருடைய ஸ்கொயர் கட்டுகள் ரூட்டுக்கு சவால் விடக் கூடியவை. பாபர் ஒரு நவீன பேட்ஸ்மேன் என்றாலும் அவருடைய அடிப்படைகள் பாகிஸ்தானில் வேர் கொண்டுள்ளன. ஃபிரன்ட் ஃபுட்டில் ஆடும்போது அவருடைய பேட் ஒரு மருத்துவரின் கத்தி போல ரொம்பவும் கறாரானது. அதுவே பேக் ஃபுட்டுக்கு செல்லும் போது அரசர் கால போர்வாளாக அது மாறிவிடும் தன்மை கொண்டது. அவருடைய சேர்ந்த பேட்டிங் ஸ்டேன்ஸ் நவீனமும் பழமையும் ஒன்று சேர்ந்தது.

வேகப்பந்து வீச்சை சந்திக்கும்போது நவீன பாபர் ; சுழற்பந்து வீச்சை சந்திக்கும் போது பாகிஸ்தானின் ஒரிஜினல் பாபர். சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவருடைய கால் நகர்த்தல் மற்றும் பிரமாண்டமான சிக்சர்கள் இன்சமாமை நினைவுப்படுத்தக் கூடியவை.

இந்த நவீனமும் பழமையும் ஒன்று சேர்ந்த ஓர் அற்புதத்தை உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நிகழ்த்திக் காட்டியிருப்பார் பாபர். பிர்மிங்ஹாமின் மிகவும் மெதுவான ஆடுகளத்தில் வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நிர்ணயிக்கிறது நியூசிலாந்து. போல்ட், ஃபெர்குசனின் சீம் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஸமானும் இமாம் உல் ஹக்கும் விரைவில் ஆட்டமிழக்க களத்தில் காலடி எடுத்து வைக்கிறார் பாபர். அந்த இன்னிங்ஸ் ஒரு முழுமையான பாபர் இன்னிங்ஸ். எதிரணி வீரர்கள், சக வீரர்கள் எல்லாம் தடுமாறிய ஆடுகளத்தில் ஒன்றுமே நடக்காதது போல சரளமாக ஆடி ரன் குவித்தார் அவர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் அவருக்கு எந்த ஒரு பந்தையும் தவறாக வீசவில்லை. அன்றைக்கு பாபர் பவுண்டரிக்கு அனுப்பிய எல்லாமே விக்கெட் எடுத்துக் கொடுக்கக் கூடிய பந்துகள். போல்ட் பந்துகளை கவர் டிரைவ், ஸ்கொயர் டிரைவ் என நவீன பாபர் பார்த்துக் கொள்ள, ஃபெர்குசனின் புயல் வேகத்தையும் சான்ட்னரின் சுழலையும் பழைய பாபர் ஒரு கை பார்த்தார்.

பாபர் அசாம்
பாபர் அசாம்

2019-ல் செஞ்சூரியன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்னிங்ஸ் பாபரின் மன உறுதியை வெளிச்சமிட்டு காட்டக் கூடியது. ஒருபக்கம் பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க மறுபக்கம் பாபர் தன்னுடைய மாயாஜாலத்தை நிகழ்த்தினார். 79 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் பாபர் மொத்தமாக 71 ரன்கள் குவித்தார். இதில் பத்து பவுண்டரிகள் ஸ்டெய்ன் பந்தில் அடிக்கப்பட்டவை. இல்லை ஸ்டெய்னிடம் இருந்து பிடுங்கப்பட்டவை. அந்த இன்னிங்ஸில் பாபருக்கு ஸ்டெய்ன் வீசிய மொத்த பந்துகள் 31. பத்து பவுண்டரிகளை விளாசுவதற்கு பாபர் எடுத்துக் கொண்ட பந்துகளின் இடைவெளி வெறுமனே 24 பந்துகள். ஸ்டெய்ன் ஒருவேளை அன்றைக்கு மோசமாக பந்து வீசினாரா என்றால் அதுவும் கிடையாது. உடம்பில் கடைசி சக்தியும் தீரும் வரை உக்கிரமாக வீசினார். சந்திக்கின்ற எல்லா பந்துக்கும் ஒரு விடை எழுதி வைத்திருந்த பாபர் கவர் திசையில் ரன் மழையாகப் பொழிந்தார். இது ஸ்டெய்னின் ஈகோவை கிளப்பிவிட பாபரை நோக்கி இன்னும் வேகமாக பௌன்சர்கள் வீசினார். ஆனால், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவற்றை ஹூக் ஷாட்டுகளாக மாற்றிய பாபரின் மேதமையை பார்த்த ஸ்டெயின் புன்சிரிப்பை பதிலாக பறக்கவிட்டார். ஸ்டெய்ன் ஒருவரைப் பார்த்து சிரிக்கிறார் என்றால் "தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். நீ என்னை வென்றுவிட்டாய்" என்று அர்த்தம்.

விராட் கோலி உடனான ஒப்பீடு என்பது பாபரின் ஆரம்ப நாட்களிலேயே தொடங்கிவிட்டது. பேட்டிங் ஸ்டைலில் வேறுபட்டாலும் ஆட்டத்தை அணுகும் விதத்தில் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. மூன்று விதமான போட்டிகளிலும் இருவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் ஒரே மாதிரியானது: டெஸ்ட்டில் 50 -60, ஒருநாள் போட்டிகளில் 90 - 100, டி20 போட்டிகளில் 130 -140. ஒருநாள், டி20 போட்டிகளின் சராசரியிலும் இருவருடைய எண்களும் ஒரே மாதியாகவே உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பாபர் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறார். ஆனால் பாபருக்கு இன்னும் வயதிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் இருவரும் வேறுபடும் இடம் ஒன்றுண்டு. பாபர் நினைத்தால் இப்போதிருப்பதை விட இன்னும் வேகமாக ரன் குவிக்க முடியும். அதற்கான அடிப்படைகள் அவருடைய பேட்டிங் DNA-வில் உண்டு. அவருடைய பேட்டிங் பள்ளி ஒருவிதத்தில் கோலியும் ரோஹித்தும் ஒன்றாக இணையும் இடம்.

விராட் கோலியை போலவே இவருக்கும் பிடித்தமான ஷாட் கவர் டிரைவ்தான். ஒரு பேட்ஸ்மேன் தனக்கு பிடித்தமான ஷாட்டை எப்படி ஆடுகிறார் என்பதை வைத்து அவருடைய குணநலனை கணித்து விடலாம் என்பார்கள். விராட் கோலிக்கு கவர் டிரைவ் என்பது எதிரணிக்கு அவர் அனுப்பும் எச்சரிக்கை சமிக்ஞை. அதில் அபாயத்துடன் சேர்ந்து தன் முனைப்பும் தெரியும். வில்லியம்சனுக்கு கவர் டிரைவ் என்பது தனக்குத்தானே அவர் கொடுத்துக் கொள்ளும் நம்பிக்கை வார்த்தைகள். அதில் சனிக்கிழமையும் பள்ளிக்கு டக் இன் செய்து கொண்டுவரும் நல்ல மாணவனின் ஒழுங்கு வெளிப்படும். பாபருக்கு கவர் டிரைவ் என்பது இதையெல்லாம் தாண்டிய ஒன்று. பாகிஸ்தானின் வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில்தான் இருக்கிறேன் என்கிற ஒரு பெருமிதம். ஒரு கம்பீரம். ஒரு சுய கர்வம் !

பாபர் அசாம்
பாபர் அசாம்

டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடம், ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடம், டி20-ல் இரண்டாம் இடம். ஆனாலும் பாபருக்கு Fab 4 என்ற மதிப்பு மிகுந்த மெய்நிகர் வரிசையில் தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டு வருகிறது. பாபரின் ஆட்டத்தில் நளினம் உண்டு. விஷய ஞானமும் உண்டு. தரவரிசையில் இடமும் உண்டு. பின்பு ஏன் Fab 4-ல் இடம் மறுக்கப்படுகிறது? பாகிஸ்தான் அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை என்பது ஒரு வெளிப்படையான காரணம். மற்றொரு நுட்பமான காரணம், நமக்கு பாபரைப் பற்றி எதுவுமே தெரியாது. இது வெறுமனே அவர் எங்குப் பிறந்தார் எப்படி வளர்ந்தார் என்பது பற்றிய சங்கதி அல்ல. ஆட்டத்தை தாண்டி அவர் எப்படிப்பட்ட நபர், அவருடைய குணநலன்கள் என்ன என்பதெல்லாம் பற்றியது. ஒருவரைப் பற்றி தெரியும் போது நாம் இன்னும் அவருக்கு நெருக்கமானவராக மாறுகிறோம்.

விராட் கோலியை தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரியும். வில்லியம்சன் நம்மில் ஒருவராக மாறி பல வருடங்கள் கடந்துவிட்டன. நமக்கு ரூட்டின் குறும்புகள் தெரியும். ஸ்மித்தின் கோட்டித்தனமான பேட்டிங்கின் பின்னணி தெரியும். ஆனால் பாபர் அசாம் யார் என்பதில் நமக்கு ஒரு தெளிவில்லை. ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஆடியிருந்தால் உலகத்தின் பார்வையில் பாபர் இன்னும் தெளிவாக விழுந்திருப்பாரோ? ஒருவேளை ஊடகங்களுக்கு பேசும் போது அவர் உருதுவை தவிர்த்து ஆங்கிலத்தில் பேசினால் இன்னும் அவரை நாம் நெருக்கமாக உணர்த்திருப்போமா? ஆனால் இவையெல்லாம் பாகிஸ்தான் ரசிகனுக்கு ஒரு தடையே அல்ல. காலம் காலமாக இம்ரான், வாசிம், வக்கார், அக்தர் என வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே ஆராதனை செய்து சோர்ந்து போன அவனுக்கு முதன்முறையாக ஒரு பேட்டிங் சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார். அவன் தங்களுக்கான நாயகனின் வரலாற்றை பாபர் Awesome - ஆக எழுதிக் கொண்டிருக்கிறான்!