சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வுசெய்தது. எப்போதும் போல ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் பேசத் தொடங்கினார் கேப்டன் தோனி.

"இன்று மழை வர வாய்ப்பிருப்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் ஆடுவதையே விரும்புகிறோம். இதுவரை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். அனைத்து வீரர்களுமே முக்கிய பங்களிப்பை அவ்வப்போது அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சில முன்னேற்றங்கள் இருந்திருக்கின்றன. கடந்த போட்டிகளில் சின்ன சின்ன சொதப்பல் இருந்திருக்கின்றன. இப்போது இரண்டாவது பாதியில் இருக்கிறோம். இன்னும் சிறப்பாக விளையாடி போட்டிகளை வீரர்கள் முடித்துவைக்கவேண்டும்" என்ற தோனி, இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.
'கேப்டன் கூல்' என அழைக்கப்படும் தோனி களத்தில் வீரர்களிடம் கோபப்படும் வீடியோக்கள் சமீபத்தில் வைரலாவதை பார்த்திருப்போம். அதைப்பற்றியும் பேசியிருந்தார் தோனி...

"ரசிகர்கள் கூட்டத்தால் மைதானங்கள் நிரம்பி வழியும்போது, வீரர்களின் கவனத்தைப் பெற்று அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அது சற்றே எரிச்சலடைய செய்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் இன்னும் முழு கவனத்துடன் இருக்கவேண்டும்" என்றவர் கடந்த போட்டியில் ஆடிய அதே அணிதான் இன்றும் களமிறங்கும் என்பதையும் உறுதிசெய்தார்.