ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. 405 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 80 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டிருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் சுறுசுறுப்பாகப் பங்கேற்றிருந்தது. சென்னை அணி இந்த ஏலத்திற்குள் நுழையும்போது அவர்களிடம் 20.25 கோடி ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி சென்னை அணி 7 வீரர்களை ஏலத்தில் வாங்கியிருக்கிறது. சென்னை அணி வாங்கியிருக்கும் அந்த வீரர்களின் பட்டியல் இங்கே..
பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி, கைல் ஜேமிசன் - 1 கோடி

ப்ராவோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பந்துவீச்சு பயிற்சியாளராக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தை நிரப்ப ஒரு தரமான ஆல்ரவுண்டர் சென்னை அணிக்குத் தேவைப்பட்டிருந்தது. ஏலத்தில் சென்னை அணி டிக் அடிக்க நினைத்த முதல் பாக்ஸூம் இதுதான். அதனால்தான் சாம் கரணுக்கும் கடுமையாகப் போட்டிப் போட்டிருந்தனர். ஆனால், சாம் கரண் கையை மீறிப்போனார். பென் ஸ்டோக்ஸூக்கும் கடைசி வரை வேடிக்கை பார்த்த சென்னை அணி 15 கோடிக்கு மேல் சென்றவுடன் நேராகக் களத்தில் குதித்து அவரை அள்ளிவிட்டது.
ராபின் உத்தப்பா இடத்திற்கு ஒரு வீரரைக் கொண்டு வர எண்ணிதான் மயங்க் அகர்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை அணியின் மேஜை ஜரூராக இயங்கத் தொடங்கியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கிடைக்கவில்லை. அதனால்தான் யாரும் எடுக்கத் துணியாத ரஹானேவை அடிப்படை விலையிலேயே சென்னை அணி வாங்கி போட்டிருக்கிறது. இதுபோக உள்ளூர் அணிகளுக்கு ஆடும் சில வீரர்களையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
- நிஷாந்த் சிந்து - 60 லட்சம்
- பகத் வர்மா - 20 லட்சம்
- அஜய் மண்டல் - 20 லட்சம்
- ஷைக் ரஷீத் - 20 லட்சம்
ஏலத்தின் முடிவில் சென்னை அணியிடம் 1.5 கோடி ரூபாய் மீதம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.