Published:Updated:

`இதைக் கொண்டு கடந்த காலத்தை மாற்ற முடியாதே..!’ - ஐ.சி.சி புதிய விதிகள் குறித்து நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகள் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையே கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

England
England

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி மகுடம் சூடியது. கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களுக்கு உலகக்கோப்பை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அந்த ஏக்கத்தை தீர்த்துக்கொண்டது. நடுவரின் தவறான தீர்ப்பு, ஐசிசியின் முரணான விதிமுறைகளால் இந்த வெற்றி இங்கிலாந்து வசம் சென்றது. இதில் இங்கிலாந்து அணியின் தவறு என்று எதுவும் இல்லை. இங்கிலாந்து இந்த வெற்றிக்குத் தகுதியான அணியாகத்தான் இருந்தது. இருப்பினும் எதிரில் களத்தில் இருந்த நியூசிலாந்தும் இங்கிலாந்துக்கு எந்த விதத்திலும் சளைத்ததாக இல்லை. பென் ஸ்டோக்ஸின் போராட்டமே இங்கிலாந்து கைகளுக்கு கோப்பை செல்வதற்கு காரணமாக இருந்தது என ரசிகர்கள் கொண்டாடினார். அதேவேளையில் இங்கிலாந்தின் வெற்றியைத் தடுப்பதற்கான வீயூகத்தை வகுத்த கேன் வில்லியம்ஸனும் கொண்டாடப்பட்டார்.

ENG v NZ
ENG v NZ

இந்தப்போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 242 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 242 ரன்களை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து ஐசிசியின் விதிமுறையின் படி சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதிலும் இரண்டு அணிகளும் 15 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பு அடைந்தது. சில உள்ளூர் தொடர்களிலே போட்டியின் முடிவை தெரிந்துகொள்ள இரண்டு சூப்பர் ஓவர் சென்றுள்ளது. இரண்டாவது சூப்பர் ஓவர் வைக்கப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியாளரை அறிவித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன. இதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதிமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

``பவுண்டரிகள் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா..?” - `ஐசிசி’ முன் வைக்கப்படும் கோரிக்கைகள் ! #ICCRules

துபாயில் நேற்றுமுன்தினம் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், ``சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் இனிமேல் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையைக் கொண்டு மட்டுமே முடிவுகள் அறியப்படும். பவுண்டரிகள் அடிப்படையிலான விதிமுறைகள் நீக்கப்படுகின்றன. லீக் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால் போட்டி சமனில் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ளப்படும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். அதாவது எந்த அணி அதிகமான ரன்களை எடுத்து வெற்றி பெறுகிறதோ அதுவரை சூப்பர் ஓவர் முறைதான் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐசிசியின் இந்த அறிவிப்பு ``மிகவும் தாமதமான முடிவு” என முன்னாள் வீரர் கிரேக் மெக்மிலன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஐசிசியின் மற்ற விதிகளை எப்போது திருத்தப்போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். நியூசிலாந்து வீரர் நீஷம் தனது ட்விட்டர் பதிவில், ``உங்கள் அடுத்த திட்டம் என்ன சிறந்த பைனாகுலர் வாங்கி டைட்டானிக் கப்பலில் ஐஸ் இருப்பதை கண்டுபிடிப்பது தானே” எனப் பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் பேசுகையில், ``எதிர்காலத்தில் உலகக்கோப்பை போட்டிகள் சமனில் முடியும் போது களத்தில் முடிவெடுக்கலாம். கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இந்த விவகாரத்தில் ஐசிசி ஒரு நல்ல தீர்வை கொண்டுவந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.