ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் அத்தொடருக்கு பிறகு டி20 சேலஞ்ச் என்ற பெயரில் பெண்களுக்கான தொடரை நடத்துவது வழக்கம். 2018-ல் தொடக்கப்பட்ட இத்தொடர் வெறும் மூன்று அணிகளுடன் ஆண்டுதோறும் கடமைக்கென நடத்தப்பட்டுவருகிறது. ஆனால் இவ்வருடம் ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் டி20 சேலஞ்ச் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை பி.சி.சி.ஐ வெளியிடவில்லை.
நம் நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் இப்படி இருக்க தனது 7-வது WBBL எடிஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். கடந்த அக்டோபர் 14-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் என்றுமில்லாத அளவிற்கு எட்டு இந்தியர்கள் ஆடினார். சீனியர் முதல் ஜூனியர் வரை வெவ்வேறு அணிகளுக்கு ஆடிய அவர்களின் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் இதோ:
ஹர்மன்ப்ரீத் கௌர்
பிக் பேஷின் இந்த எடிஷனுக்கான ‘பிளேயர் ஆப் தி டோர்னமெண்ட்’ விருதை வென்றவர் வேறு யாரும் இல்லை, இந்திய டி 20 அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர் தான். பெண்களுக்கான பிக் பேஷ் தொடர் ஆடிய முதல் இந்திய வீராங்கனையும் இவரே.

நீண்ட நாள்களாக மிக மோசமான ஃபார்மில் இருந்த ஹர்மன்ப்ரீத் தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் இவ்விருதின் மூலம் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். மெல்போர்ன் ரெனக்கேட்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 14 போட்டிகளில் 406 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்தவர்களுக்கான பட்டியலிலும் முதல் இடம் இவருக்கே (18 சிக்ஸர்கள்).
ஸ்ம்ரிதி மந்தனா
இந்தியாவின் ஓப்பனிங் பேட்டரான ஸ்ம்ரிதி பிக் பேஷ் லீகில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இம்மாதம் 17-ம் தேதி ரெனகேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 64 பந்துகளில் 114 ரன்களை விளாசியதன் மூலம் WBBL வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த சாதனையை ஆஷ்லே கார்ட்னருடன் பகிர்ந்துள்ளார் ஸ்ம்ரிதி. 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 377 ரன்களை இத்தொடரில் குவித்துள்ளார்.
ஜெமீமா ரோட்ரிக்ஸ்
தனது கிளாசிக்கல் ஸ்ட்ரோக் மேக்கிங்கிற்காக அனைவராலும் அறியப்படும் ஜெமீமா ரோட்ரிக்ஸ் இவ்வருடம் முதல்முறையாக பிக் பேஷ் தொடரில் விளையாடியுள்ளார். ஹர்மன்ப்ரீத்தின் ரெனகேட்ஸ் அணியில் இடம்பெற்ற இவர் தன் தேசிய அணி கேப்டனுடன் சேர்ந்து பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜெமீமா 13 போட்டிகளில் விளையாடி 333 ரன்கள் குவித்துள்ளார்.

தீப்தி ஷர்மா
இந்தியாவின் முக்கிய ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் தீப்தி ஷர்மா. தன் முதல் பிக் பேஷ் தொடரில் ஸ்ம்ரிதியுடன் தண்டர்ஸ் அணியில் விளையாடினார். பேட்டிங்கில் பெரிய அளவிலான ரன்களை அடிக்கவில்லை (13 ஆட்டங்கள்- 211 ரன்கள்) என்றாலும் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பௌலிங்கில் அசத்தியுள்ளார் தீப்தி.
ஷஃபாலி வர்மா
வெறும் 17 வயதே நிரம்பிய ஷஃபாலி வர்மா பவர்ஃபுல் ஹிட்டிங்கிற்கு பெயர்போனவர். இந்தியாவின் மிக இளைய டி20 வீராங்கனையான இவர் இவ்வருடம் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக தன் முதல் பிக் பேஷ் தொடரில் ஆடினார். மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்தலான டைரக்ட் ஹிட் ஒன்றை அடித்தார் ஷஃபாலி.
பவர்பிளேவில் ஸ்கோர் செய்வதே இவரின் பலம். ஆனால் தொடரின் முதல் சில போட்டிகளில் ரன் அடிக்காமல் சொதப்ப அணியின் ஐந்தாவது பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டார் ஷஃபாலி. அதனால் தன் ஒரிஜினல் கேமை கடைசிவரை அவரால் வெளிப்படுத்தமுடியவில்லை. (13 ஆட்டங்கள் - 191 ரன்கள்)

ராதா யாதவ்
தன் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் அற்புதமான ஃபீல்டிங்காலும் அணிக்கு வலுசேர்ப்பவர் ராதா யாதவ். சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக தன் முதல் பிக் பேஷ் தொடரை ஆடிய இவர் 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பூனம் யாதவ்
இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர்களில் ஒருவரான பூனம் யாதவ் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடினார். 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பூனம்.

ரிச்சா கோஷ்
விக்கெட் கீப்பங் பேட்டரான 18 வயது ரிச்சா கோஷ் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார். 12 போட்டிகளில் ஆடிய இவர் 162 ரன்கள் மட்டுமே அடித்தார்.