Published:Updated:

PBKS v CSK: தொடரும் சென்னையின் தலைவலிகள்... எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா?!

PBKS v CSK | MS Dhoni

கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மேட்ச்சை ஜெயித்து கொடுத்த ஒரே பாவத்துக்காக தோனியையே ஃபோகஸ் செய்துகொண்டிருந்தன கேமராக்கள். 'சும்மா சும்மா கேமராவை அங்குக் கொண்டு செல்ல வேணாம்!' என பினிஷிங் பொறுப்பை இன்று கையில் எடுத்தார் ராயுடு!

Published:Updated:

PBKS v CSK: தொடரும் சென்னையின் தலைவலிகள்... எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா?!

கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மேட்ச்சை ஜெயித்து கொடுத்த ஒரே பாவத்துக்காக தோனியையே ஃபோகஸ் செய்துகொண்டிருந்தன கேமராக்கள். 'சும்மா சும்மா கேமராவை அங்குக் கொண்டு செல்ல வேணாம்!' என பினிஷிங் பொறுப்பை இன்று கையில் எடுத்தார் ராயுடு!

PBKS v CSK | MS Dhoni
தோனியின் அதிரடியால் எப்படியோ இரண்டு புள்ளிகளைத் தன்வசப்படுத்தி பிளே ஆஃப் வாய்ப்பை மொத்தமாக இழக்காமல் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த சி.எஸ்.கேவுக்கு நேற்றைய போட்டி மிக முக்கிய போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்துத் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியானதொரு சம்பவம் நடந்தால் மட்டுமே சி.எஸ்.கே இந்த ஐபிஎல்லில் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை. அதற்கு தொடக்கமாக இந்தப் போட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர் சி.எஸ்.கே ரசிகர்கள்!
PBKS v CSK | Mayank Agarwal and Ravindra Jadeja
PBKS v CSK | Mayank Agarwal and Ravindra Jadeja

வான்கடேவில் கடந்த நான்கு போட்டிகளிலும் முதல் பேட்டிங் பிடித்த அணிகளே வென்றிருக்க, டாஸ் வென்ற ஜடேஜா பௌலிங் தேர்வுசெய்தார். வழக்கம் போல் மாற்றங்கள் இன்றி அதே அணியுடன் களமிறங்கியது சி.எஸ்.கே. பஞ்சாப் கிங்ஸ் அணியோ பல மாற்றங்களுடன் களமிறங்கியது. காரணம், கடந்த போட்டியில் டெல்லியிடம் பஞ்சாப் அடைந்த படுமோசமான தோல்வி. இதன் காரணமாக, சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடியிருந்த பாணுகா ராஜபக்ஷா, ரிஷி தவான், சந்தீப் சர்மா ஆகியோர் அணியில் இடம்பிடித்திருந்தனர். இந்த மாற்றங்களால் ஷாருக் கான், நேதன் எல்லிஸ், வைபவ் அரோராவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. வழக்கமான 'தபாங்' தவான் - மயங்க் அகர்வால் கூட்டணி களமிறங்கியது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கடந்த போட்டியில் கலக்கியிருந்த முகேஷ் சௌத்ரி அதே மேஜிக்கை மீண்டும் முதல் ஓவரில் நிகழ்த்துவார் என நம்பியிருந்தனர் ரசிகர்கள். எதிர்பார்த்தபடி விக்கெட் இல்லையென்றாலும் முதல் ஓவரில் பவுண்டரிகளும் இல்லை. சென்னை அணி எதிர்பார்த்த ஒரு நல்ல தொடக்கம். சொல்லப்போனால் மொத்த பவர்பிளேயுமே அப்படித்தான் பவுண்டரிகள் அதிகம் இல்லாமல் கடந்தது. மகேஷ் தீக்ஷனாவின் ஆறாவது ஓவரில் மயங்க் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்பிளே முடிவில் பஞ்சாப்பின் ஸ்கோர் 37-1. இடது கை ஆட்டக்காரர் தவான் களத்தில் இருப்பதால் லியாம் லிவிங்ஸ்டன் இறங்குவார் என நாம் நினைக்க பாணுகா ராஜபக்ஷா களமிறங்கினார். குறிப்பாக ஒரு பக்க பவுண்டரி தூரம் மிக அதிகமாக இருக்க இடது-வலது காம்பினேஷனில் பேட்டர்களைக் களமிறக்குவதையே அணிகள் விரும்பும்.

இந்த சீசனில் பேட்டிங், பௌலிங்கை விட ஃபீல்டிங்தான் சென்னையின் பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் பேட்டர்களுக்கு அத்தனை வாய்ப்புகளை வாரி வழங்கியது. இருந்தும் ரோஹித் & கோ மண்ணைக் கவ்வியது என்றால் மும்பை இந்தியன்ஸ் நிலை எப்படி இருக்கிறது என நினைத்து பாருங்கள். அனுதாபங்கள் ரோஹித் ப்ரோ!

இந்தப் போட்டியிலும் அப்படி முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டது சி.எஸ்.கே. ஏழாவது ஓவரில் ருதுராஜ் ராஜபக்ஷாவுக்கு வாய்ப்பு ஒன்றை வழங்க, 'தவானும் வயசு பையன்தானே!' என அடுத்த ஓவரே அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் சான்ட்னர். மும்பை இந்தியன்ஸ் போல இந்த வாய்ப்புகளை வீணடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நிலைபெற தொடங்கியது இந்தக் கூட்டணி. பத்து ஓவர் முடிவில் 72 ரன்கள் குவித்தது பஞ்சாப். இதே மைதானத்தில் நேற்று லக்னோ 10 ஓவர்களில் அடித்திருந்த ஸ்கோர் இது. நேற்றைய போட்டியை போலவே 160-170 என்ற ஸ்கோரே வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

PBKS v CSK | Shikhar Dhawan
PBKS v CSK | Shikhar Dhawan

ஆனால், தவானுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. முகேஷ் சௌத்ரி வீசிய 12-வது ஓவரை அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார், தொடர்ந்து மூன்று பவுண்டரிகள். அந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்கப்பட்டன. ராஜபக்ஷாவும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க சடசடவென ஏறியது ஸ்கோர். அரைசதத்தைக் கடந்தார் தவான். அப்போது முக்கியமான 15-வது ஓவரை வீச வந்தார் மஹீஷ் தீக்ஷனா. ரன்கள் அதிகம் போனால் மொத்தமாக பஞ்சாப்பிடம் ஆட்டம் சென்றுவிடக்கூடிய சூழல். ஆனால், அந்த ஓவரில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் ஆறு ரன்கள். இதன் மூலம் சி.எஸ்.கே அணியில் தனக்கான இடத்தை இன்னும் இறுகப்பற்றிக் கொண்டார் தீக்ஷனா. பெரிய சேதாரம் எதுவும் இல்லாமல் அடுத்த ஓவர்களையும் கட்டுப்படுத்தியது முகேஷ் - பிராவோ கூட்டணி. சிக்ஸர்கள் விளாசியே ஆகவேண்டும் என்ற நெருக்கடி தொற்றிக்கொள்ள நடையைக் கட்டினார் ராஜபக்ஷா. அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் ப்ரிட்டோரியஸின் 19-வது ஓவரை வெளுத்து கட்டினார். இன்னும் அதிக பந்துகள் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பாரோ?!

PBKS v CSK | Liam Livingstone
PBKS v CSK | Liam Livingstone

170 ரன்கள் அடிப்பார்கள் என அனைவரும் நினைத்திருக்க 188 என்ற சற்றே கடினமான இலக்கை நிர்ணயித்தது பஞ்சாப். இதில் 88 ரன்கள் ஷிகர் தவான் அடித்தது. உத்தப்பா அல்லது கெய்க்வாட்டிடுமிருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸை எதிர்பார்த்தது சென்னை அணி. ரபாடாவின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் நம்பிக்கையளிக்கும் விதமாக இன்னிங்ஸைத் தொடங்கினார் கெய்க்வாட். ஆனால், அடுத்த ஒவரே சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் திணறிய உத்தப்பா நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். மொயின் அலிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த மிட்செல் சான்ட்னரும் பந்தை பேட்டில் வாங்க பெரும் பாடுபட்டார். ஆறுக்கும் குறைவான ரன்ரேட்டில் பவர்பிளேவைக் கடந்தது சி.எஸ்.கே. ரபாடா, சந்தீப் ஷர்மா, ஆர்ஷ்தீப் சிங், ரிஷி தவான் என அனைவருமே சிறப்பாக தங்களது வேலையைச் செய்துவிட்டுக் கிளம்பினர். தடுமாறிக்கொண்டிருந்த சான்ட்னர் 9(15) விக்கெட்டும் பவர்பிளேவுக்குள் வீழ்ந்தது. பவர்பிளே முடிவில் சென்னையின் ஸ்கோர் 32-2.

அடுத்து வந்த ஷிவம் துபேவும் வெகு நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ரிஷி தவான் வீசிய ஏழாவது ஒவரிலேயே அவுட்டானார். அடுத்து வந்தது ராயுடு. பீல்டிங்கின் போது ஏற்பட்ட காயத்தால் முதல் இன்னிங்ஸ் முழுவதும் பீல்டிங் செய்யவில்லை ராயுடு. அவர் பேட்டிங் பிடிக்க வருவாரா என்பதே சந்தேகமாகத்தான் இருந்தது. இந்தக் கூட்டணி தோல்வி முகத்திலிருந்த சிஎஸ்கேவை கொஞ்ச நேரம் காப்பாற்றியது. பத்து ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 69-3. விக்கெட்களைத் தவிர்த்துப் பார்த்தால் பஞ்சாப்பும் கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால், தவான் ஆடிய ஆட்டத்தை ஆடப்போவது யார், லியாம் லிவிங்ஸ்டன் கேமியோவை ஆடப்போவது யார்?

PBKS v CSK | Mitchell Santner
PBKS v CSK | Mitchell Santner
`அது நான் இல்லை!' என நடையைக் கட்டினார் கெய்க்வாட். 13-வது ஓவரில் ரபாடாவின் வேகத்துக்கு இரையானார் அவர். கேப்டன் ஜடேஜா களமிறங்கினார். மொத்தமாகப் போட்டி கை நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மேட்ச்சை ஜெயித்துகொடுத்த ஒரே பாவத்துக்காக தோனியையே ஃபோகஸ் செய்துகொண்டிருந்தன கேமராக்கள். 'சும்மா சும்மா கேமராவை அங்கு கொண்டு செல்ல வேணாம்!' என பினிஷிங் பொறுப்பை கையில் எடுத்தார் ராயுடு. ஓவருக்கு ஓரிரு பவுண்டரிகள் அடிப்பதை உறுதிசெய்தார். மறுமுனையில் ஜடேஜாவுக்கு எதுவும் சரியாகப் பேட்டில் படவில்லை. அதனால் ஒற்றை மனிதனாகத் Required Runrate எகிறாமல் பார்த்துக்கொண்டார் ராயுடு. கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிபெற 70 ரன்கள் தேவை.

PBKS v CSK | Robin Uthappa
PBKS v CSK | Robin Uthappa

முதலில் அற்புதமாகப் பந்து வீசினாலும் கடைசி ஓவர்களில் எப்போதும் கோட்டை விட்டுவிடுவார் சந்தீப். அது இன்றும் நடந்தது. தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள், ஒரு ஃபோர் என ராயுடு வெளுத்துக்கட்ட 16-வது ஓவரில் 23 ரன்கள் அடிக்கப்பட்டது. மீண்டும் காற்று சென்னை பக்கம் வீச ஆரம்பிக்க, அம்பயர் மணிக்கட்டில் கட்டிய வாட்ச்சை காட்டி டைம்-அவுட் எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக பிக்-அப்பாகி மணிக்கு 200 வேகத்தை எட்டிய பைக்குக்கு ரெட் சிக்னல் போட்டது போல் எல்லாம் தடைபட்டது.

நான்கு ஓவரில் 47 ரன்கள் தேவை. நிச்சயம் அடிக்கக்கூடிய ரன்கள்தான். ராயுடுவும் முரட்டு ஃபார்ம்மில் இருப்பதாகத் தெரிந்தது. அடுத்த ஓவரை வீச வந்தவர் ஆர்ஷ்தீப் சிங். ஆஃப்-சைடில் யார்க்கர்கள் வீசி பந்தை பெரிய பவுண்டரி பக்கம் அடிக்க வைப்பதே திட்டம். இந்தத் திட்டத்தைச் சிறப்பாக அவர் செயல்படுத்த வெறும் 6 ரன்களே அதில் அடிக்கப்பட்டன. கடைசி பந்தில் ஓடிய இரண்டு ரன்களுக்கே பெருமூச்சு விடத்தொடங்கினார் ராயுடு. வெறும் 36 பந்துகள் பிடித்திருந்த அவர், முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங்கும் செய்யவில்லை. அடித்த ரன்களிலும் பெரும் பகுதி பவுண்டரிகலிருந்து வந்தன. அப்படியும் சோர்வாகக் காணப்பட்டார். சற்றே வயதாகிய வீரர்களுடன் ஆடுவதில் இருக்கும் ஒரு சிக்கல் இது. இதன் காரணமாகவே ரபாடா வீசிய அடுத்த ஓவரில் அவுட்டானர் ராயுடு.

13 பந்துகளில் 35 ரன்கள் தேவை. களமிறங்கினார் தோனி. இந்த மேட்ச்சையும் முடித்துக்கொடுத்தாக வேண்டிய இமாலய பணி அவருக்கு! ஆனால், தனி ஆளாக தோனியோ ராயுடுவோ மட்டும் முடிக்கக்கூடிய போட்டி இல்லை இது. ஜடேஜாவிடமிருந்தும் பவுண்டரிகள் தேவைப்பட்டன. அது கடைசி வரை கிடைக்கவில்லை. கடைசி ஓவர்களை ஆர்ஷ்தீப்பும், ரபாடாவும் மிகச்சிறப்பாக வீசியதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இருப்பினும் பேட்டிங்கில் பழைய பார்மில் ஜடேஜா இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. முழு சுமையும் தோனியின் தோள்களிலிருந்தது. கேப்டன்ஸி என்ற சுமையை ஜடேஜாவின் தோள்களில் திடீரென தோனி வைத்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

PBKS v CSK | Ambati Rayudu
PBKS v CSK | Ambati Rayudu

கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை. இருப்பினும் நம்பிக்கை இழக்கவில்லை சென்னை ரசிகர்கள். களத்தில் இருந்தது தோனி. ரிஷி தவான் வீசிய முதல் பந்தை அவர் சிக்ஸருக்கு பறக்கவிட மொத்த மைதானத்தையும் 'தோனி, தோனி!' என்ற ஆரவாரம் ஆட்கொண்டது. அந்த அழுத்தத்திலும் அற்புதமான யார்க்கர் ஒன்றை வீசினார் ரிஷி. டாட் பால். அடுத்து அவர் வீசிய ஸ்லோ பாலில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து அவுட்டானார் தோனி. 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை.

பிளேஆஃப்ஸுக்கு தகுதிபெற அடுத்த ஆறு போட்டிகளையும் வென்றாக வேண்டும் சி.எஸ்.கே. ஆனால், அடைக்கப்பட வேண்டிய ஓட்டைகளோ ஏராளம் இருக்கின்றன. ஜோர்டானுக்கு பதில் பிரிட்டோரியஸ் வந்தாச்சு, மொயினுக்கு பதில் சான்ட்னர் வந்தாச்சு... இருந்தும், டெத் பௌலிங், டாப் ஆர்டர் பேட்டிங், பீல்டிங் என சி.எஸ்.கேவின் தலைவலிகள் தொடர்கின்றன. ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்மும் கவலையளிக்கிறது. எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா என்ன?!