மண்ணுக்குள் எங்கோ தொடங்கிய சின்ன அதிர்வு உலகத்தையே ஆட்டிப் பார்ப்பதைப் போல், அயர்லாந்தில் இருந்து வந்து, உலகையே அயர வைத்துக்கொண்டுள்ளார் பால் ஸ்டிர்லிங். விதையைக் கீறி, பூமியைத் துளைத்து, தனது இருப்பை அறிவிக்க சிறு தளிர் நிகழ்த்தும் போராட்டம் அளப்பறியது. அதிலும் தனது கரிசனத்தைக் கொட்டி வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்களைவிட கவனிப்பார் இன்றி தானாகவே உலகைப் பார்க்கும் காட்டுச் செடிகள் இன்னமும் உறுதியானவை. வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அப்படிப்பட்டவர்கள்தான்.

காஸ்ட்லியான அகாடமியில் பயிற்சியோ, லட்சங்களில் சம்பளமோ வழங்கப்பெறாவிட்டாலும் கிரிக்கெட் மீதான அவர்களது அபரிமிதக் காதல் உந்துவிசையாகி அவர்களை முன்னோக்கி ஓட வைத்துக்கொண்டே இருக்கும். ஆப்கானிஸ்தானின் ரஷித் கானிடம் தொடங்கி சிங்கப்பூரின் டிம் டேவிட் வரை தனது திறமையால் உலகின் கதவை உரக்கத் தட்டித் திறக்க வைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதே இனத்தின் இன்னுமொரு அத்தியாயம்தான் அயர்லாந்து கிரிக்கெட்டின் அடையாளங்களில் ஒருவரான பால் ஸ்டிர்லிங். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அயர்லாந்தின் கிரிக்கெட் பக்கங்களை தன் சரிதையால் நிரப்பிக்கொண்டிருப்பவர். ஓப்பனராகக் களமிறங்கி, பவர்பிளேயின் உண்மையான அர்த்தம் சொல்லும் வகையில் பந்துகளைத் தூரதேசம் அனுப்புபவர். ஃப்ளாட் டிராக்கில் மட்டுமல்ல, பௌலர்களுக்குப் பச்சைக் கொடி காட்டும் புற்கள் காணப்படும் களங்களையும் ஆக்கிரமிப்பவர். நம்பிக்கைக்குரிய ஆஃப் ஸ்பின்னரும்கூட. டி20-ல் ஆதிக்க நாயகனாகச் சாதித்திருக்கிறார் என்றால் ஒருநாள் போட்டிகளில் தனி ராஜாங்கத்தையே நடத்திவருபவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அயர்லாந்துக்காக ஒருநாள் ஃபார்மேட்டில் அதிக ரன்கள், அதிகபட்ச ஸ்கோர், அதிக சதங்கள் மற்றும் அரை சதங்கள், அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என எந்தப் பட்டியலை எடுத்தாலும் அதில் உச்சத்தில் உள்ளது ஸ்டிர்லிங்கின் பெயர்தான். ரன் கணக்கைக் கொண்டு அயர்லாந்தில் வைத்து ஒருநாள் போட்டிகளில் கட்டமைக்கப்பட்ட சிறந்த பார்ட்னர்ஷிப்களை வரிசைப்படுத்தினால் அதில் டாப் 3 இடத்தையுமே ஸ்டிர்லிங் வெவ்வேறு இணையோடு ஆக்ரமிக்கிறார். அயர்லாந்து வீரர் என்பதால் ஒருவேளை இவர் அடித்துத் துவைத்த அணிகள் எல்லாம் மேலே வர முயன்று கொண்டுள்ள அணிகள் மட்டுமே என நினைத்தால், அக்கருத்தை அடித்துத் திருத்திக்கொள்ளுங்கள்; இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து எனப் பெரிய தலைகள்கூட இவரது பேட்டுக்கு பலியாகியுள்ளன.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் அவர்களது ஆட்டத்திறம் நாளடைவில் தேய்பிறை காணும், சாதனைகளின் வட்டம் சுருங்கத் தொடங்கும், கரியரின் இறுதி நாள்களை எட்டுகிறார் என்பதை அதுவே சொல்லாமல் சொல்லும். ஆனால், அந்த விதத்தில்தான் ஸ்டிர்லிங் மாறுபடுகிறார். 2017-க்குப் பிந்தைய ஒருநாள் போட்டிகளை கவனித்தால், அதில் இவரது `சராசரி’ ஏறுமுகம் கண்டுள்ளது. ஒருநாள் ஃபார்மேட்டில், 2008-ல் இருந்து 2019 வரை, 12 ஆண்டுகளில் ஏழு சதங்களை மட்டுமே வெறும் 34.8 ஆவரேஜோடு அடித்தவர், 2019 - 2022 இடைவெளியில் பீஸ்ட் மோடுக்கு உருமாறி, 49.4 ஆவரேஜோடு ஆறு சதங்களை அநாயாசமாக விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளையே டி20 ஆக ஆடத் தொடங்கிய அவரது பாணிதான் இதற்கான காரணம். 5,000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கடந்திருக்கிறார்.
முன்பெல்லாம் தோல்விகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அயர்லாந்து, ஒரு சில ஆண்டுகளாக நின்று சரிசமமாக வாள் வீசுகிறது. கடந்த ஆண்டு, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியதெனில், சமீபத்தில் இந்தியாவுடனான டி20-லும், நியூசிலாந்து உடனான ஒருநாள் போட்டியிலும் இறுதிவரை நின்று ஆட்டம் காட்டியது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸ்டிர்லிங், கேப்டனான ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் டெக்டர் என யாரோ ஒருவர் எதிரணியை துவம்சம் செய்துவருகின்றனர். பெரும்பாலான சமயங்களில் அது ஸ்டிர்லிங்கின் சம்பவமாகவே இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 329 என்ற கடின இலக்கைத் துரத்திய போது கொஞ்சமும் அசராமல் இங்கிலாந்தின் பௌலிங் அட்டாக்குக்கும் தாக்குப்பிடித்து 128 பந்துகளில் 142 ரன்களை விளாசி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்ததைச் சொல்வதா...

நியூசிலாந்துடன் 361 என்னும் இமாலய இலக்கைத் துரத்திய போதும், இம்மியளவும் அஞ்சாமல் டெக்டருடன் கைகோத்து இறுதிவரை போராடி சதமடித்தது மட்டுமன்றி, 103 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து, `அயர்லாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி' என்ற தலைப்புச் செய்திக்காக அத்தனை நாட்டு ரசிகர்களையும் 'உச்' கொட்ட வைத்த, அந்தப் போராட்ட குணத்தைக் கொண்டாடித் தீர்ப்பதா... டி20 நாயகர்கள் ஆன மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே பயத்தின் முகவரியைச் சுட்டிக் காட்டி டி20 போட்டி ஒன்றில் ஷார்ட் பால்களுடன் மகிழ்ந்துலாவி, புல் ஷாட்டில் புகுந்து விளையாடி, கவர் டிரைவ்களில் கதற வைத்து, 47 பந்துகளில் சேர்க்கப்பட்ட அவரது 95 ரன்கள் பற்றிச் சிலாகிப்பதா?! எதைச் சொல்வது, எதை விடுவது?
நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும் கலந்து செய்ததே ஸ்டிர்லிங்கின் ஆட்டமுறை.

கடந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற டி10 லீக்கின் எலிமினேட்டரில், டீம் அபுதாபி சார்பாக பெங்கால் டைகர்ஸுக்கு எதிராக ஆடியபோது, புயல் மனிதர் கெய்லே மறுமுனையில் இருந்து பிரமிக்கும் வகையில் 20 பந்துகளில் 57 ரன்களை விளாசி, அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னேறச் செய்தார் ஸ்டிர்லிங். அந்த ஒரு இன்னிங்ஸ் போதும் ஸ்டிர்லிங்கின் ஒட்டுமொத்த கிரிக்கெட் கரியருக்குமான சாராம்சமாக...
ஆகமொத்தம் எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவரது பெயர் பரிச்சயம்தான், எல்லா நாட்டு லீக்கிலும் ஆடிவிட்டார்தான். இருப்பினும் ஐ.பி.எல் மட்டும் அவருக்கு இன்னமும் வரவேற்புரை வாசிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது பெயர் ஏல மேஜைக்கு வராமல் இல்லை. இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில்கூட 50 இலட்சம் அடிப்படைத் தொகையோடு வந்து சேர்ந்தது. ஆனால், அவரை எடுக்கத்தான் அணிகள் முன்வரவில்லை.
ஏன் இன்னமும் அயர்லாந்து மீதோ, ஸ்டிர்லிங் மற்றும் மற்ற வீரர்கள் மேலோ போதுமான வெளிச்சப்பொட்டுகள் விழவில்லை? விடை மிகச் சுலபமானதுதான்...
UNO பற்றி அடிக்கடி சொல்லப்படும் கருத்து ஒன்றுண்டு; "அவர்களிடம் சமரசத்திற்காக இரு சிறிய நாடுகள் சென்றால், அவை இரண்டுமே காணாமல்போகும். பெரிய மற்றும் சிறிய நாடுகள் சென்றால், சிறிய நாடு காணாமல்போகும்; இரண்டு பெரிய நாடுகள் சென்றால் யுஎன்ஓவே காணாமல் போகும்", என்பார்கள். கிரிக்கெட் வல்லரசுகள், வளர்ந்து வரும் நாடுகளை நடத்தும் விஷயத்திலும், ஐ.சி.சி-யின் அணுகுமுறையும் இப்படித்தான் இருந்துவருகிறது. வருடத்தின் இரண்டரை மாதங்களை இந்தியாவுக்காக தனது வருடக் காலண்டரில் குறித்து வைக்கத் தயாராக இருக்கும் ஐ.சி.சி, 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பைக்கான குவாலிஃபயரை, கடந்த ஆண்டு கொரோனாப் பரவலைக் காரணம் காட்டி நடத்தாமல் கைவிட்டது. அதைத் தள்ளி வைக்கலாம் என்ற கருத்தைக்கூடப் பரிசீலனை செய்யவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து அணியின் வீராங்கனைகள் தங்களுடைய அத்தனை பேரின் கைப்பேசியிலும், அந்த உலகக் கோப்பைப் படத்தை வைத்துக் கூட்டாக அவற்றைக் காட்சிப்படுத்திய புகைப்படக் கோரிக்கை, இப்பொழுதும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
சரி மற்ற நாடுகளின் போக்கு எப்படி எனப் பார்த்தால், பி.சி.சி.ஐ உள்ளிட்ட கிரிக்கெட் போர்டுகளோ, "ஆதரவுக்கரம் நீட்டுகிறோம்" என்ற பெயரில் தங்களது இரண்டாம் நிலை அணியினை அனுப்பி, தங்களது கடமை முடிந்ததாக ஆறுதல்பட்டுக்கொள்கின்றன. தனது நிலம் எப்பொழுதும் வளமாக இருக்க அருகில் உள்ள மற்ற நிலங்களுக்கும் நல்ல விதைகளைப் பரிசளிப்பாராம் ஒரு விவசாயி. இக்கருத்தை ஒட்டி எந்த நாட்டின் கிரிக்கெட் அணியின் பார்வையும் விரிவதில்லை. ஐ.பி.எல் அணிகள் பக்கம் திரும்பினாலோ, எல்லாமே பணம்தான், 'பிராண்ட் வேல்யூ உள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற முடிவுடன் இப்படிப்பட்ட திறன் படைத்த வீரர்களையே மறந்தோ மறுத்தோ விடுகின்றனர்.
ஆனால் இத்தனை உதாசீனங்களையும் அலட்சியங்களையும் தாங்கினாலும், அவற்றையே உரமாக்கி கிரிக்கெட் களத்தில் இன்னமும் வேர் பிடித்து, அகற்ற முடியாததாக ஆர்ப்பரித்து வருகின்றனர் பால் ஸ்டிர்லிங் போன்ற காட்டுச் செடிகள். இவர்களுக்கான ஊட்டத்தை முடிந்த வரை அளிப்பதே ஐ.சி.சி-யின் நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டிய முதல் திட்டம். அப்போதுதான் பத்து நாடுகளில் மட்டுமே பெரிதாக ஆடப்படும் கிரிக்கெட், உலகம் முழுவதும் பரவி வாழ்வாங்கு வாழும்.

எது எப்படியோ, பல பொன்னான வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும், கிடைக்கும் ஒரு சின்ன மேடையில்கூடக் கால்பதித்து நின்று தனது மேல் எல்லா வெளிச்சத்தையும் பாய்ச்சிக்கொள்வதில்தான் ஸ்டிர்லிங் போன்றவர்கள் உலகையே வெல்கிறார்கள். எங்கிருந்து வருகிறோம் என்பதைவிட, எவ்வளவைக் கைப்பற்றுகிறோம் என்பதுதானே முக்கியம்?!
கெவின் ஓ பிரைன் சுமந்திருந்த அயர்லாந்தின் கிரிக்கெட் பாரம்பரியத்தை, தற்போது தனது தோளில் சுமந்துவருகிறார் பால் ஸ்டிர்லிங்.