சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பதிரானா இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் குறித்து போட்டிக்குப் பிறகு விரிவாகப் பேசியிருக்கிறார் தோனி.

"பதிரானா போன்ற வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பௌலர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால்தான். அந்த ஆக்ஷன் மட்டுமல்லாமல் அவர் வீசும் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்தும் அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. இப்படியான ஆக்ஷன் கொண்ட அவர், அதிகம் கிரிக்கெட் ஆடக்கூடாது. குறிப்பாக ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் அவரை ஆட வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இலங்கை நிர்வாகம் பெரிய ஐசிசி தொடர்களுக்காக மட்டும் அவரை பாதுகாக்க வேண்டும். இப்போது அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்போதுமே அவரால் ஏற்படுத்தமுடியும்.
மிகவும் இளமையான வீரர் அவர். கடைசியாகப் பார்க்கும்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்." என்றார் தோனி.

"நீங்களே சொல்லிட்டீங்க... அவங்க கேட்காம இருக்கப்போறாங்களா என்ன?" என ஜாலியாக கமென்ட் அடித்து தோனியை வழியனுப்பி வைத்தார் சஞ்சய் மஞ்சரேக்கர்!