ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இருண்ட பக்கங்களின் ஒன்றாக கருதப்படும் ‘Sand Paper’ சம்பவத்திற்கு பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் ஜஸ்டின் லாங்கர். சோர்ந்து போயிருந்த அணிக்கு அவர் அளித்த புதிய பாய்ச்சலால் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தது, முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியது, மீண்டுமொரு முறை ஆஷஸை வென்று உலகின் No-1 டெஸ்ட் அணியாக முன்னேறியது என புதிய உயரங்களைத் தொட்டது அந்த அணி. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் பயிற்சியாளர் பதவியை ராஜனாமா செய்தார் ஜஸ்டின் லாங்கர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், அணியின் மூத்த வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தனக்கு போதிய ஆதரவு இல்லாததே தன் விலகலுக்கான காரணமாக கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் “ எனது வெளியேற்றம் அணியின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று அனைவரும் நினைப்பதால் இம்முடிவை எடுக்கிறேன். பயிற்சியாளராக மிக தீவிரமாக நான் நடந்துக்கொண்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிக பெரிய வெற்றியுடன் இப்பதவியில் இருந்து விலகுவது குறித்து மகிழ்ச்சியே கொள்கிறேன்” என்று கூறினார்.
இந்த வருடம் ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை அப்பணியில் தொடருமாறு அந்நாட்டு வாரியம் கேட்டுக்கொண்டும் அதை மறுத்துவிட்டார் லாங்கர். “ அணியை புதிய அணுமுறையோடு முன்னகர்த்தி செல்வதையே அனைவரும் விரும்புகிறார்கள். அதை நான் முழுவதுமாக மதிக்கிறேன். சில மூத்த வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நான் இனியும் தொடர்வது விருப்பமில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி உண்மைதான்” என்று கூறியிருந்தார்.

லாங்கர் நடத்தப்பட்ட விதம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸையும் முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக விமர்சித்தனர். இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் அமைதி காத்துவந்த கம்மின்ஸ் தலைமை பயிற்சியாளரின் விலகல் குறித்து தற்போது முதல் முறையை பேசியுள்ளார். “ லாங்கரின் ராஜனாமா குறித்து பலரும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். அணியின் நலன் கருதிதான் அதுகுறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். பயிற்சியாளராக தான் காட்டிய தீவிரம் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார் லாங்கர். அதற்கான எந்த அவசியமும் இல்லை.
அது குறித்து அணியில் உள்ள வீரர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இத்தனை ஆண்டுகள் அணியின் வெற்றிகளுக்கு பெரிய துணையாய் இருந்து வந்த லாங்கருக்கு எனது நன்றிகள். ஆனால் எதிர்காலத்தில் ஒரு அணியாக நம் அணுகுமுறை எவ்வாறு உருமாற போகிறது அதற்கான சிறந்த பயிற்சி முறை என்பதில் தான் கேள்வி எழுகிறது.
இப்போது எங்களின் தேவையாக இருப்பது ஒரு புதிய அணுகுமுறை. அணியின் மற்ற வீரர்கள், உதவியாளர்களுக்கும் இதே கருத்து தான் இருக்கிறது. இந்த மாற்றத்திற்கான முடிவை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தைரியமாக எடுத்துள்ளது. இறுதியாக ஒன்றே ஒன்றுதான். நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். தேசிய அணிக்காக விளையாடுவதே எங்களின் முதல் கடமை. அதை நாங்கள் சரியாக செய்வோம். முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்து எனக்கு அறிவுரை தெரிவித்தனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். என் அணி வீரர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன்” இவ்வாறு கூறினார் பேட் கம்மின்ஸ்.