Published:Updated:

`இப்பவாவது போறீங்களே!' - டீன் ஜோன்ஸின் உருவ கேலியும் பார்த்தீவ் படேலின் பதிலடியும் #Viral

பார்த்தீவ் படேல்
பார்த்தீவ் படேல் ( Twitter )

பார்தீவ்! நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் உடன் இணைந்து தொடக்க வீரராகப் பேட்டிங் விளையாடப்போகிறீர்கள்.

ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆரோன் ஃபிஞ்ச், கேன் ரிச்சர்ட்சன், ஜோசுவா பிலிப் ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களை அதிக தொகைக்கு வாங்கியது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய வீரர் பார்த்தீவ் படேலை வம்பிழுப்பது போன்ற அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.

டீன் ஜோன்ஸ்
டீன் ஜோன்ஸ்
Twitter

டீன் ஜோன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பார்த்தீவ்! நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்து தொடக்க வீரராகப் பேட்டிங் விளையாடப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை இப்போது மிகவும் எளிதாகவிட்டது. அவர் உங்களைவிட உயரமானவர். பெரும்பாலன கிரிக்கெட் வீரர்களும்தான்'' என்று பதிவிட்டிருந்தார்.

``நான் ஆஸ்திரேலிய வீரருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன். ஆரோன் ஃபிஞ்ச் மிகச்சிறந்த வீரர். உங்களைப் போலல்லாமல் ஆஸ்திரேலியாவில் அவர் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். குறைந்தபட்சம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காவது உங்கள் வீட்டுக்குச் செல்கிறீர்களே. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!'' என்று பார்த்தீவ் பட்டேல் பதிலடி கொடுத்திருந்தார்.

பார்தீவின் ட்வீட்டை டீன் ஜோன்ஸ் பகிர்ந்து. ``Love ya bud!! Speak soon!” என்று கூறியிருக்கிறார். பார்த்தீவ் மற்றும் டீன் ஜோன்ஸின் ட்வீட்டுகளைப் பார்த்த நெட்டிசன்கள், ``ஆமா சார்! ஆரோன் ஃபிஞ்ச் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், அவர் பார்த்தீவ் உடன் களமிறங்கப்போகிறார். பார்த்தீவ், சரியாகப் பதிலடி கொடுத்துள்ளீர்கள். இதுபோன்ற கருத்துகளிலிருந்து விலகியிருங்கள் பார்த்தீவ். உருவத்தை வைத்து ஒருவரைக் கேலி செய்வதா? ” போன்ற கருத்துகளால் டீன் ஜோன்ஸுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர்.

விமர்சனங்கள் குறித்து டீன் ஜோன்ஸ், ``நாங்கள் வேடிக்கையாகவே பேசிக்கொள்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து பார்த்தீவ் ஓய்வுபெறும்போது மிகச்சிறந்த வர்ணனையாளராக வருவார் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு