Published:Updated:

கரைசேர்த்த பண்ட்; திருப்பியடிக்கும் தென்னாப்பிரிக்கா - இன்று அசாத்தியங்களை நிகழ்த்துமா கோலியின் படை?

பண்ட்
News
பண்ட் ( BCCI )

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட்டாகவும் ஃபுல்லாகவும் வீசிய பந்துகளை மட்டுமே பண்ட் அட்டாக் செய்ய முயற்சி செய்தார். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து முதிர்ச்சியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் இந்தப் போட்டியில் இந்திய அணி 212 ரன்களை தென்னாப்பிரிக்க அணிக்கு டார்கெட்டாக நிர்ணயித்திருக்கிறது. மூன்றாம் நாளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 101-2 என்ற நிலையில் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னமும் 111 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

மூன்றாம் நாளான நேற்று இந்திய அணியே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்தது. கோலியும் புஜாராவும் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்கோ யான்சன் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே புஜாரா எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஓவர் தி விக்கெட்டில் வந்து முதல் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய யான்சன், இரண்டாவது பந்தை லெக் ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் ஷார்ட்டாக வீசியிருந்தார். இந்த பந்தை புஜாரா அரைகுறை மனதோடு தொட்டு விட லெக் ஸ்லிப்பில் நின்ற கீகன் பீட்டர்சன் பாய்ந்து விழுந்து அபாரமாக கேட்ச் செய்தார். முழுமனதோடு லீவ் செய்திருக்க வேண்டிய பந்தை லெக் ஸ்லிப் இருந்தும் அரைகுறை மனதோடு தட்டிவிட முயன்று புஜாரா மிகப்பெரிய தவற்றைச் செய்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Pujara - Rahane | புஜாரா - ரஹானே
Pujara - Rahane | புஜாரா - ரஹானே

57-3 என்ற நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த சமயத்தில் ரஹானே க்ரீஸிற்குள் வந்தார். அணிக்காக மட்டுமில்லை, தனது எதிர்காலத்திற்காகவும் நல்ல இன்னிங்ஸை ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் ரஹானே இருந்தார். ஆனால், வழக்கம்போல ஏமாற்றமே மிஞ்சியது. வெறுமென ஒரு ரன்னை மட்டுமே எடுத்து ரபாடாவின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ரபாடா தொடர்ந்து டைட்டாகவே வீசிக்கொண்டிருந்தார். ரஹானேவின் விக்கெட்டை பறித்த இந்த ஒரு பந்து கொஞ்சம் ஃபுல்லாக வந்திருந்தபோதும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆகியிருந்தது. பவுன்ஸை கணிக்க முடியாமல் எட்ஜ் ஆகி ரஹானே கேட்ச் ஆகியிருந்தார். போதும் போதுமென ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கியாயிற்று. அடுத்தடுத்த தொடர்களில் ரஹானேவிற்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹனுமா விஹாரி மாதிரியான வீரர்களைப் பயன்படுத்தவே அதிக வாய்ப்பிருக்கிறது. புஜாராவுமே ஓரங்கட்டப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புஜாரா, ரஹானே இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் கோலியுடன் ரிஷப் பண்ட் கூட்டணி சேர்ந்திருந்தார். இந்தச் கூட்டணிதான் இந்திய அணியை ஓரளவுக்கு கரைசேர்த்தது. அதிலும் குறிப்பாக ரிஷப் பண்டே ஸ்கோரை வேகமாக முன் நகர்த்தி சென்றார். கேப்டன் விராட் கோலி கடந்த இன்னிங்ஸில் ஆடிய ஆட்டத்தின் Pro Version ஐ இங்கே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், ரன்கள்தான் வரவே இல்லை. மிகச்சிறப்பாக பந்துகளை லீவ் செய்து அட்டகாசமாக டிஃபண்ட் செய்து நீண்ட நேரமாக க்ரீஸில் நின்றார்.

ஏறக்குறைய அவர் சந்தித்த பந்துகளில் 10% பந்துகளை மட்டும்தான் அட்டாக்கே செய்திருப்பார். மற்ற 90% பந்துகளை லீவ் அல்லது டிஃபண்ட்டே செய்திருந்தார். முதல் இன்னிங்ஸை போலவே 90% கட்டுக்கோப்போடு ஆடியிருந்தார்.
பண்ட் - கோலி
பண்ட் - கோலி
ICC

கோலியிடம் இதுவரை இல்லாத அளவிற்கான பொறுமையை பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் 35 பந்துகளாக ரன்களே அடிக்காமல் கோலி டாட் மட்டுமே ஆடியிருந்தார். 36வது பந்தில்தான் 16 ரன்னிலிருந்து 17 வது ரன்னிற்கு முன் நகர்ந்தார். அவசரப்பட்டு பேட்டை விட்டு அவுட் ஆவதால் இப்படி நிதானமாக ஆடுவது வரவேற்க வேண்டிய விஷயமே. ஆனால், இத்தனை பொறுமையாக ஆடும்போது ஒரு அரைசதமாவது அடித்துவிட்டு செல்வதே அணிக்கு முழு பலனை கொடுக்கும். பொதுவாக புஜாராவிடம் கோலிக்கு இருந்த அதிருப்தியுமே கூட இதுதான். அவ்வளவு நேரமாக நின்றுவிட்டு கடைசியில் எந்த கவர் ட்ரைவ்வில் விக்கெட்டை விடக்கூடாதென்று எண்ணினாரே அதே கவர் ட்ரைவ்வில் விக்கெட்டை விட்டுச் சென்றது ஏமாற்றமளிக்கவே செய்திருந்தது. 143 பந்துகளில் கோலி 29 ரன்களை மட்டுமே எடுத்து இங்கிடியின் பந்தில் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆகியிருந்தார்.

கோலியின் நிதான ஆட்டத்தால் அவருக்குக் கிடைத்த பலன்களை விட ரிஷப் பண்டிற்குக் கிடைத்த பலன்கள் அதிகம். ஒரு முனையில் விராட் கோலி முழுமையாக டிஃபன்ஸ் ஆடி விக்கெட்டை விடாமல் நின்றதால், பண்டிற்கு விக்கெட் அழுத்தம் பெரிதாக உருவாகவில்லை. இதனால் கண்ணை மூடிக் கொண்டு சுற்றாமல், கொஞ்சம் நின்று ஏதுவான பந்துகளை மட்டுமே அட்டாக் செய்து ஆடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட்டாகவும் ஃபுல்லாகவும் வீசிய பந்துகளை மட்டுமே பண்ட் அட்டாக் செய்ய முயற்சி செய்தார். ரொம்பவே ஒயிடாக சென்ற பந்துகளையோ நல்ல லெந்தில் விழுந்த பந்துகளையோ மெனக்கெட்டு அடிக்க முயலவில்லை. அவருக்கேற்ற ஆளாக இடதுகை ஸ்பின்னர் கேசவ் மகராஜ் வந்தவுடன் இறங்கி வந்து சிக்சர்களை பறக்கவிட்டார். கோலி க்ரீஸில் இருக்கும்வரை பெரிதாக ஸ்பைடர்மேன் ஷாட்கள் எதையும் பண்ட் ஆடியிருக்கவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து முதிர்ச்சியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். கோலியும் பண்ட்டும் இணைந்து 94 ரன்களை அடித்திருந்தனர். அதில் பண்ட் மட்டும் 71 ரன்களை அடித்திருந்தார். கோலி அவுட் ஆன பிறகு டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு சதத்தை நிறைவு செய்தார் பண்ட்.

Pant
Pant
ICC
ரிஷப் பண்ட் 100 ரன்களைத் தொட்டவுடன் பும்ராவும் தனது விக்கெட்டை விட இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட்டின் 100 ரன்கள் மட்டுமே இந்தியாவை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலையோடு சேர்த்து தென்னாப்பிரிக்க அணிக்கு 212 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய பௌலர்கள் அசாத்தியங்களை நிகழ்த்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்ற நிலையில் நான்காவது இன்னிங்ஸ் தொடங்கியது. மார்க்ரமும் டீன் எல்கரும் ஓப்பனர்களாக வந்தனர். இந்தியா எதிர்பார்த்த விக்கெட்டான டீன் எல்கரின் விக்கெட் கிடைக்காவிட்டாலும் மார்க்ரமின் விக்கெட் ஷமியின் முதல் ஸ்பெல்லிலேயே கிடைத்தது. குட் லெந்தில் வீசி பந்தை உள்ளே வெளியே என திருப்பினாலும் இடையிடையே ஷாட் ஆட தூண்டும் வகையில் ஃபுல் லெந்த்தில் வீசியும் விக்கெட்டிற்கு முயன்றிருந்தார். இதற்கு பலனும் கிடைத்திருந்தது. ஒரு ஃபுல் லெந்த் பந்திற்கு பேட்டை விட்டு மார்க்ரம் ஸ்லிப்பில் மாட்டிக்கொண்டார்.

Pant
Pant
ICC

இதன்பிறகு, டீன் எல்கருடன் கீகன் பீட்டர்சன் கூட்டணி போட்டார். இருவருமே நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடக்கூடியவர்கள். நேற்றும் அப்படியே ஆடியிருந்தனர். இந்திய பௌலர்கள் இவர்களை பிரிக்க போராடினர். காரசாரமாக பேசி டீன் எல்கரை கடுப்பேற்றும் வேலைகளிலும் கோலி இறங்கியிருந்தார்.

DRS
DRS
Hotstar

ஒரு கட்டத்தில் 21 வது ஓவரில் டீன் எல்கரின் விக்கெட்டும் கிடைத்தது. ஆனால், DRS இல் அது நாட் அவுட் என வந்தது. அஷ்வின் வீசிய அந்த ஓவரில் எல்கர் டிஃபன்ஸ் ஆட முயன்று பேடில் அவரின் முட்டிற்கு கீழே பந்தை வாங்கியிருப்பார். இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயரும் உடனே அவுட் கொடுத்திருப்பார். எல்கருமே இதை அரைகுறை மனதோடுதான் ரிவ்யூ செய்தார். ஆனால், ரிவ்யூவில் ட்விஸ்ட் நடந்தது. பந்தின் Impact எல்கரின் முட்டிற்கு கீழ்தான் இருந்தது. ஆனாலும் பந்து ஸ்டம்பிற்கு மேலே உயரமாகச் செல்வதை போல காட்டப்பட்டது. இதனால் நாட் அவுட்டும் வழங்கப்பட்டது. கள நடுவரான எராஸ்மஸே இந்த முடிவால் ஆச்சர்யமடைந்தார். இந்த முடிவில் இந்திய வீரர்கள் அத்தனை பேருமே அப்செட். இந்திய வீரர்களின் அதிருப்தி குரல்கள் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியிருந்தது. கோலியும் அஷ்வினும் ஸ்டம்ப் மைக்கிலேயே வாக்குவாதத்தை நிகழ்த்தி அதகளப்படுத்தினர்.

Kohli
Kohli
Hotstar
ஒட்டுமொத்த நாடும் நம் 11 பேருக்கு எதிராகச் செயல்படுகிறது.
இந்திய வீரர்கள்

என்ற குற்றச்சாட்டுகளையும் இந்திய வீரர்கள் முன் வைத்தனர். இந்த பஞ்சாயத்து முடிந்தவுடன், பீட்டர்சனும் எல்கரும் வேகவேகமாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 9.4 ஓவர்களில் மட்டும் 43 ரன்களை எடுத்திருந்தனர். இந்தியா எதிர்பார்த்த எல்கரின் விக்கெட் பும்ரா வீசிய கடைசி ஓவரில் கிடைத்தது. லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துக்கு பேட்டை விட்டு ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். எல்கர் 30 ரன்களில் அவுட் ஆன நிலையில் கீகன் பீட்டர்சன் 48 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். தென்னாப்பிரிக்க அணி 101-2 என்ற நிலையில் இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 111 ரன்கள் மட்டுமே தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை. நான்காம் நாளான இன்று ஏறக்குறைய முதல் செஷனுக்குள்ளேயே முடிவு தெரிந்துவிடும். இப்போதைக்கு போட்டி தென்னாப்பிரிக்கா பக்கமே இருக்கிறது.

எதாவது அசாத்தியங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியை வென்று தொடரையும் வெல்ல முடியும். அசாத்தியம் நிகழுமா?