Published:Updated:

போட்டுப் பொளந்த பன்ட்... ஆனால் ஃபாலோ ஆனை நோக்கி இந்தியா... மூன்றாம் நாள் அப்டேட்ஸ்! #INDvENG

பன்ட் #INDvENG

இரண்டு நாட்களாய் இந்திய பெளலர்களை வாட்டி வதைத்த களம், இங்கிலாந்து பௌலர்களுக்காக, சற்றே தனது இயல்பை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது‌. அடுத்த டார்கெட் கோலியே என்பதைப் போல், தனது சுழலால் அச்சுறுத்திக் கொண்டிருந்தார் பெஸ்.

Published:Updated:

போட்டுப் பொளந்த பன்ட்... ஆனால் ஃபாலோ ஆனை நோக்கி இந்தியா... மூன்றாம் நாள் அப்டேட்ஸ்! #INDvENG

இரண்டு நாட்களாய் இந்திய பெளலர்களை வாட்டி வதைத்த களம், இங்கிலாந்து பௌலர்களுக்காக, சற்றே தனது இயல்பை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது‌. அடுத்த டார்கெட் கோலியே என்பதைப் போல், தனது சுழலால் அச்சுறுத்திக் கொண்டிருந்தார் பெஸ்.

பன்ட் #INDvENG
கிரிக்கெட் பிட்ச்சா, சிமென்ட் ரோடா என வியக்க(!!?) வைத்த சேப்பாக்கம் பிட்சில் ஒருவழியாக மூன்றாவது நாளில் முடிவுக்கு வந்தது இங்கிலாந்து இன்னிங்ஸ். அதிர்ச்சியுடன் தொடங்கிய இந்திய இன்னிங்ஸ் பன்ட்டின் அதிரடியால் கொஞ்சம் நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது நாளின் முடிவில் 257 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, ஃபாலோ ஆனைத் தடுக்கப் போராடி வருகிறது இந்தியா.

இன்னிங்ஸ் வெற்றி, அவ்வப்போது கண் முன் தோன்றி மறைய, டிக்ளேர் என்பதே ஆகாத வார்த்தை என்றே இன்றைய ஆட்டத்தைத் தொடங்கியது இங்கிலாந்து. ஆறு செஷன்கள் பந்து வீசி, ஆகச்சிறந்த களைப்போடு காணப்பட்ட இந்திய பௌலர்கள் மீதமிருக்கும் இரண்டு விக்கெட்டுகளை வெளியில் அனுப்பி விட்டுத்தான் மறுவேலை என்ற கங்கணத்துடன் களத்துக்குள் கால் பதித்தனர்.

#INDvENG
#INDvENG

புதுப்பந்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தும், பழைய பந்தோடே தொடர்ந்தது இந்தியா‌. விக்கெட் வீழ்ச்சியின்றி, தொடர்ந்தது இன்றைய முதல் ஐந்து ஓவர்களும். விக்கெட்டுக்காக, 142 கிமீ வேகத்தில், ஓடிவந்து யார்க்கரை இறக்கி மிரட்டினார்‌, பும்ரா. எனினும் விக்கெட்தான் விழவில்லை‌. பந்தை மாற்றினாலாவது ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா என கோலி, புதுப்பந்தை பும்ராவின் கையில் கொடுக்க, வீசப்பட்ட முதல் பந்திலியே, எல்பிடபிள்யூவில் பெஸ் அவுட். அந்த விக்கெட் விழுந்த சூடு தணியும் முன்பே, அஷ்வினின் ஓவரில், லீச்சை வீழ்த்தக் கிடைத்த ஒரு ஸ்டம்ப்பிங் வாய்ப்பை, பன்ட் தவற விட்டார். பேட்ஸ்மேனாய் அதிரடி காட்டும் பன்ட், விக்கெட் கீப்பராய் ரொம்பவே சொதப்புகிறார்.

இறுதியாக, ஃபீல்டர்களை நம்பினால் வேலைக்காகாதென ஆண்டர்சனை போல்டாக்கி, இங்கிலாந்து இன்னிங்ஸை முடித்து, பௌலர்களின் இடைவிடா மாரத்தான் ஓட்டத்துக்கு முடிவுரை எழுதினார் அஷ்வின்‌. 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இங்கிலாந்து.

எதிரில் நிற்கும் இமாலயச் சவாலை, சமாளிக்குமா இந்தியா என்ற கேள்விக்கணையோடே துவங்கியது இந்திய இன்னிங்ஸ்‌, ஓப்பனர்கள் ரோஹித் மற்றும் கில்லுடன். பேட்டிங்கிற்குச் சாதகமான சாராம்சங்கள், சேப்பாக்க மண்ணில் இன்னமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதால், ரோஹித்தின் பேட் சங்கடங்களைத் தீர்க்கப் போகிறதென காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வந்த வேகத்தில் ஆர்ச்சரின் வேகத்தில் ஆட்டமிழந்தார் ரோஹித். சாதிக்கத் தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரெட்பால் கிரிக்கெட்டுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் ரோஹித் ஷர்மா.

#INDvENG
#INDvENG

முதல் விக்கெட்டை துரிதகதியில் இந்தியா இழக்க, அடுத்ததாக உள்ளே வந்தார் புஜாரா. மறுபுறம் கில்லின் ஆட்டமோ, நம்பிக்கை நிறைந்ததாக தொடக்கத்தில் இருந்தது. பலவிதமான ஷாட்களை இலகுவாக ஆடிக் கொண்டிருந்தார். எனினும் ஆர்ச்சரின் துல்லியப் பந்து வீச்சின் முன் அவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. முந்தைய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கில்லை, அதற்கடுத்த பந்திலேயே, ஆண்டர்சனிடம் அற்புதமான கேட்ச் கொடுக்கச் செய்து வெளியேற்றினார் ஆர்ச்சர். தவறான ஷாட்டுக்கு விலையாக, தனது விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார் கில். கோலி உள்ளே வந்தார். அரவுண்ட் தி விக்கெட் பந்து வீசி, மைதானத்தில் விரிசலை இன்னும் அதிகப்படுத்தி, வலதுகை பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து ஸ்பின்னர்கள் திணற வைக்க, வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் ஸ்டோக்ஸ். இரண்டு விக்கெட்டுகளை அவசரத்தில் இழந்து, முதல் செஷனை முற்றிலுமாக இங்கிலாந்தின் பேரில் எழுதித் தந்தது இந்தியா. 59/2 என்ற நிலையில் முடிந்தது முதல் செஷன்‌.

இதற்கடுத்து வரும் பன்ட் மற்றும் சுந்தரால், செஷன் கணக்கில் நிலைத்து நின்று ஆட முடியாதென்பதால், இந்தக் கூட்டணியையும் அடுத்து வரும் ரஹானேவையுமே வெகுவாய் நம்பி இருந்தது இந்தியா. இவர்களது கால்கள் களத்தில் எவ்வளவு ஓவர்கள் தாக்குப்பிடிக்கப் போகிறதென்பதைப் பொறுத்தே, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் எவ்வளவு நேரம் நீடிக்கப் போகிறதென்பது தெரியும் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் கூடியது. விக்கெட் விழக் கூடாதென்பதில் மிகக் கவனமாய் இருந்த கோலி-புஜாரா கூட்டணியால், ரன்களும் ஏறாமல், விக்கெட்டும் விழாமல், அடுத்த சில ஓவர்கள் வறண்டு போய் நகர்ந்தன.

#INDvENG
#INDvENG

இரண்டு நாட்களாய் இந்திய பெளலர்களை வாட்டி வதைத்த களம், இங்கிலாந்து பௌலர்களுக்காக, சற்றே தனது இயல்பை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது‌. அடுத்த டார்கெட் கோலியே என்பதைப் போல், தனது சுழலால் அச்சுறுத்திக் கொண்டிருந்தார் பெஸ். முதலில் ஒருமுறை ஷார்ட் மிட் விக்கெட்டில், பர்ன்ஸை அடைவதற்கு முன்பே தரையைத் தொட்டது பந்து. மறுமுறை கோலியின் பேட்டைத் தொட்டு, ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த போப்பின் கைகளில் தஞ்சம்புக, மூன்றாவது முக்கிய விக்கெட்டான கோலியை இழந்தது இந்தியா. ரூட்டிடமிருந்து கண்ட கேப்டன் இன்னிங்ஸை கோலியிடமும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. இதற்கடுத்து வந்த ரஹானேயோ, "கேப்டன் எவ்வழியோ, துணைக் கேப்டனும் அவ்வழியே" என, ஃபுல் டாஸ் பாலை கணிக்காமல் முன்வந்து ஆடி, ரூட் பிடித்த ஒரு அபாரமான டைவ் கேட்சால் வெளியேறினார்.

கலங்கிய கண்களை குளிரவைக்க வந்தார் பன்ட். ஞாபகப்பெட்டகத்தில் சேமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நினைவுகளைத் திரும்பக் கொண்டு வருவதைப் போல, ஒன்றிணைந்தது புஜாரா-பன்ட் கூட்டணி. ஆஸ்திரேலியா என்றாலென்ன, இங்கிலாந்து என்றாலென்ன என வழக்கம்போல, அதிரடியைக் கையிலெடுத்தது இந்த இந்தியக் காட்டாறு. 4 விக்கெட்டுகள் போய்விட்டது, இந்தியா இனிமேல் தடுப்பாட்டமே ஆடும் என எண்ணிக்கொண்டிருந்த இங்கிலாந்துக்கு இடியை இறக்கினார், ரிஷப் பன்ட்.

#INDvENG
#INDvENG

நான் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டும் அல்ல, ஒருநாள் கிரிக்கெட்டும் அல்ல... டி20 ஆட வந்துருக்கிறேன் என பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறக்கவிடத் தொடங்கினார். காற்றில் பறந்து பந்து பவுண்டரி லைனைத் தாண்டும் போதெல்லாம் ரசிகர்களின் இதயமும் எகிறிக் குதித்தது. பேக் டு பேக் பவுண்டரியை பன்ட்டும், அடுத்ததாகப் புஜாராவும் அடிக்க, மறுபடி ஒரு பேக் டு பேக் சிக்ஸர்களால் அணியை 100ஐ தாண்ட வைத்தார் பன்ட். இதற்கிடையில் பெஸ் புஜாராவுக்கு வீசிய பந்துக்கு, கேட்ச், ரன்அவுட் ஆகிய இரண்டுக்குமான ரிவ்யூ கேட்கப்பட்டு, இரண்டிலும் தப்பினார் புஜாரா.

அடுத்தடுத்தாக அரைச்சதத்தை முதலில் யார் அடைவதென்பதில் நடந்த போட்டாபோட்டியில், 106 பந்துகளில், பவுண்டரியுடன் புஜாரா அதை அடைய, அதே ஓவரில், தனது பாணியில், 40 பந்துகளில் பவுண்டரியுடன் அதைத் தாவித் தொட்டார் பன்ட். தேநீர் இடைவேளையில், 154 ரன்களை எட்டியிருந்தது இந்தியா‌.

எத்தகைய களத்திலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எப்பேர்ப்பட்ட எதிரிக்கு எதிராகவும் எப்போதும் செய்வதை புஜாரா இப்போதும் செய்து கொண்டிருந்தார். இடைவெளிக்குப்பின் தொடர்ந்த ஆட்டத்திலும் மிக நிதானமாக ஒருபுறம் நின்று புஜாரா தோள் கொடுத்துத் தாங்க, மறுபுறம் பன்ட்டால் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர முடிந்தது. ஆண்டர்சனின் பந்து தோட்டாவாய் கிளவுஸில் தாக்கி வலி ஏற்படுத்தினாலும், அசராது தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார் புஜாரா. 100 ரன்களைக் கடந்தது இவர்களது பார்ட்னர்ஷிப். இந்த இருவரின் கடைசி மூன்று பார்ட்னர்ஷிப்கள் 53, 148, 61, இன்றோ, 100-க் கடந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது இவர்களது இணையற்ற பங்களிப்பு.

இறுதியில், பெஸ்ஸின் ஷார்ட் பாலில், புஜாரா மிட் விக்கெட் திசையில் அடிக்க முற்பட அது ஸ்லிப்பில் நின்ற ஃபில்டர் தோளில் பட்டு எகிறிச் சென்று, பர்ன்ஸிடம் கேட்ச் ஆனது. 73 ரன்களில் புஜாரா வெளியேற, இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சுந்தர் உள்ளே வந்தார்.
Pujara #INDvENG
Pujara #INDvENG

ஸ்டம்புக்கு முன்போ பின்போ, தனது இருப்பை வெவ்வேறு வகையில் அறிவித்துக் கொண்டே இருக்கும் பன்ட், வீழ்ந்த ஒரு விக்கெட்டால் நான் சோர்ந்து போய்விடவில்லை என்பதைப் போல், லீச் ஓவரில் ஒரு பவுண்டரியையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார். இந்தப் போட்டியில், லீச்சின் நான்கு பந்துகளை சிக்ஸராக மாற்றி இருந்தார் பன்ட். சுந்தரும் தன் பங்குக்கு சில பவுண்டரிகளை விளாசி, நம்பிக்கையை விதைக்க, உற்சாக மிகுதியில் சிட்னியில் இறங்கி அடித்து அவுட் ஆனதை போல மீண்டும் அதேபோல் ஒரு ஷாட்டை ஆட முயன்று பெஸ்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார் பன்ட். 9 ரன்களில், சதத்தைப் பறிகொடுத்ததோடு அணியையும் அல்லலில் விட்டுச் செல்லுகின்றோமென்ற வெறுப்பைக் காட்டிக் கொண்டே வெளியேறினார் பன்ட். 6 விக்கெட்டுகளை இழந்து அல்லாடத் தொடங்கியது இந்தியா. அச்சுப்பிசகாமல் இங்கிலாந்து போட்டு வைத்திருந்த பாதையிலேயே பயணித்தது போட்டி.

அஷ்வின் உள்ளேவர, கை கோத்தனர் சென்னையின் செல்லப் பிள்ளைகள். 225 ரன்களை மட்டுமே அணி எட்டி இருந்த நிலையில், டெய்ல் எண்டர்களாய் ஃபாலோ ஆனைத் தடுக்க போராடத் தொடங்கியது இந்தத் கூட்டணி. இதனை முறித்து விட்டால் கிட்டத்தட்ட முடிந்தது இந்தியாவின் கதை என்பதால், சுந்தருக்கு, லீச்சின் பந்தில் இருமுறை ரிவ்யூக்குப் போனது இங்கிலாந்து. ஆனால், முடிவுகள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகின. லீச்சின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று, சுந்தர் தந்த வாய்ப்பையும் ஆர்ச்சர் கோட்டை விட, வேறு எதுவும் விக்கெட் இழப்பின்றி முடிவுக்கு வந்தது மூன்றாவது நாள். ஆனால், இன்னமும் 321 ரன்கள் பின்தங்கி இருக்கிறது இந்தியா.

#INDvENG
#INDvENG

இங்கிலாந்தின் பௌலர்கள், பேட்டிங் செய்த அளவுகூட இந்தியாவின் பிரதான பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடவில்லை. புஜாரா மற்றும் பன்ட்டின் ஆட்டத்தைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால், இந்தியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் நால்வரும் இணைந்து எடுத்தது வெறும் 47 ரன்களை மட்டுமே! புஜாரா மற்றும் பன்ட்டால் இந்த அளவிற்கேனும் தப்பிப் பிழைத்தது இந்தியா.

நாளைய நாள் எதைக் கொண்டு வரப் போகிறது என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

ஃபாலோ ஆன் ஆகுமா இந்தியா அல்லது சென்னையின் செல்லப்பிள்ளைகள் எல்லாவற்றையும் சரி செய்வார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.