Published:Updated:

IND vs SL: பண்ட்டிற்கு 90-கள், ரோஹித்திற்கு புல் ஷாட்… என்ன ஒற்றுமை?

Ind vs SL

ஒரு பேட்டர் சதத்தை நெருங்க நெருங்க இருக்கின்ற அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை கூடுதலாக நெறுக்குவார்கள் கேப்டன்கள். ஆனால் பண்ட் விஷயத்தில் இது நேர் மாறாகக் கடைபிடிக்கப்படும்.

Published:Updated:

IND vs SL: பண்ட்டிற்கு 90-கள், ரோஹித்திற்கு புல் ஷாட்… என்ன ஒற்றுமை?

ஒரு பேட்டர் சதத்தை நெருங்க நெருங்க இருக்கின்ற அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை கூடுதலாக நெறுக்குவார்கள் கேப்டன்கள். ஆனால் பண்ட் விஷயத்தில் இது நேர் மாறாகக் கடைபிடிக்கப்படும்.

Ind vs SL

அணியின் ஸ்கோர் 170/2, எம்புல்டேனியா வீசிய அற்புத பந்தில் தன் ஸ்டம்புகளை பறிகொடுக்கிறார் கோலி. அந்த 71-வது சதத்தினை தன் 100-வது டெஸ்ட் போட்டியில் எப்படியேனும் தொட்டுவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க 45 ரன்களில் பெவிலியன் திரும்புகிறார் அவர். அடுத்த மூன்றே ஓவர்களில் நன்றாக செட்டிலாகி அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டிருந்த விஹாரியும் அவுட்டாக 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் என்றாகிறது ஸ்கோர்.

Virat-Vihari
Virat-Vihari

ரோஹித் - அகர்வாலின் அதிரடி தொடக்கம், கோலி - விஹாரியின் 90 ரன் பார்ட்னர்ஷிப் என நேற்றைய நாளின் முதல் செஷன் முழுவதும் இந்திய பேட்டர்களின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை விழவும் களத்தில் இரண்டு புதிய பேட்டர்களோடு சமநிலைக்கு திரும்புகிறது ஆட்டம்.

ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு தற்போது ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் ஜோடியின் மேல் விழுகிறது. முக்கியமாக விக்கெட் வீழ்ச்சியை நிறுத்த வேண்டும். ஆனால் பண்ட், என்றைக்குமான தன் ஆட்டத்தில் துளியும் மாறுதல் இல்லாமல் இன்னிங்ஸை தொடங்குகிறார். தன் ஏழாவது பந்திலேயே எம்புல்டேனியா பந்தில் மிகப்பெரிய சிக்ஸர் ஒன்றை லாங்-ஆனில் க்ளியர் செய்தார். ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை அந்த ஜோடி. 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்சயா பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் lbw ஆக புதிய பேட்டராக களமிறங்கினார் ஜடேஜா.

Pant
Pant

ஷ்ரேயாஸின் விக்கெட்டிற்கு பிறகு தன் அரைசதம் வரை அமைதிகாத்த பண்ட், அதன் பிறகு இலங்கை பௌலர்களை நாலாபுறமும் சிதறடித்தார். அரைசதம் அடிக்க 74 பந்துகள் எடுத்துக்கொள்ளும் அவர் அடுத்த 46 ரன்களை அடிக்க அவருக்குத் தேவைப்பட்ட பந்துகள் வெறும் 23. எம்புல்டேனியா வீசிய 76-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பும் பண்ட் மூன்றாவது மற்றும் கடைசி பந்துகளில் பவுண்டரி அடித்து அந்த ஒரு ஓவரில் மட்டும் 22 விளாசுகிறார். அதற்கடுத்த ஓவரிலும் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்து 300-ஐ தாண்டியது.

தன் 50-களில் இருந்து 90-களுக்கு ஐந்தே ஓவர்களில் கடந்துவிட்டார் பன்ட். இலங்கை அணிக்கும் அதே நேரத்தில்தான் நியூ-பால் கிடைக்கிறது. ஒரு பேட்டர் சதத்தை நெருங்க நெருங்க இருக்கின்ற அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை கூடுதலாக நெறுக்குவார்கள் கேப்டன்கள். ஆனால் பண்ட் விஷயத்தில் இது நேர் மாறாகக் கடைபிடிக்கப்படும். அப்படி நேற்றும் பண்ட்டிற்கு டிபென்சிவ்வாகவே ஃபீல்ட் அமைத்து நியூ-பாலை லக்மலிடம் கொடுத்தார் கேப்டன் கருணரத்னே.

அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஓவர் தி விக்கெட்டில் இருந்து லக்மல் வீசிய பந்து பண்ட்டின் பேட்டை ஏமாற்றி ஆப்-ஸ்டம்பைத் தட்டி விட்டு சென்றது. மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய பண்ட் 90-களில் மட்டும் ஐந்தாவது முறையாக தன் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். முன்னதாக டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்த இந்திய கேப்டன் ரோஹித்தும் தனக்கு விரிக்கப்பட்ட வலையில் புல் ஷாட் ஆடியே வீழ்ந்தார். ஷார்ட் பாலாக வீசப்பட்ட பந்துகள் நேற்று குறைவான பவுன்சிலேயே பேட்டரை நோக்கி வந்தன.

Rohit Sharma
Rohit Sharma

அந்த லெந்தில் வரும் பந்தை காணும் ரோஹித்தின் கைகள் இயல்பிலேயே புல் ஷாட்டிற்கு சென்று விடுகின்றன. அப்படி குமரா வீசிய 10-வது ஓவரின் 2 மற்றும் 3வது பந்துகளில் புல் ஷாட்டில் ஃபோர் அடித்தார் ரோஹித். நான்காவது பந்தை ஃபுல்லாக வீசி ஐந்தாவது பந்தை மீண்டும் ஷார்ட்டாக வீசினார் குமாரா. ஆனால் இம்முறை பாடி லெந்தில். அதை மீண்டும் புல் ஷாட்டாக ரோஹித் ஆட டீப் ஃபைன் லெக்கில் நின்றிருந்த லக்மலின் கைகளுக்கு நேரே சென்றது.

பண்ட்டுக்கு அவரின் பயமறியாத குணமே எதிரியாகி, அவரின் சதத்தைத் தடுக்க, ரோஹித் தன் ஸ்பெஷாலிட்டியான புல் ஷாட்டிலேயே வீழ்ந்திருக்கிறார்.

இன்று என்ன நடக்கும்? பார்ப்போம்!