Published:Updated:

ENG v IND: நாயகன் மீண்டும் வரான் - பண்ட் மேஜிக், ஜடேஜா நிதானம்! தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்?

ENG v IND - ரிஷப் பண்ட்

ஒவ்வொரு கணத்திற்கு ஏற்ப மிக சரியாய் ரியாக்ட் செய்வதே டெஸ்ட் களத்திற்கான வெற்றி மந்திரம், ஆனால் அப்போதைய நேரத்திற்கு துளியும் தேவை இல்லாத ஒன்றை மிக சரியாய் செய்வதுதான் பண்ட் வாழும் உலகத்தின் டெஸ்ட் களம்.

ENG v IND: நாயகன் மீண்டும் வரான் - பண்ட் மேஜிக், ஜடேஜா நிதானம்! தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்?

ஒவ்வொரு கணத்திற்கு ஏற்ப மிக சரியாய் ரியாக்ட் செய்வதே டெஸ்ட் களத்திற்கான வெற்றி மந்திரம், ஆனால் அப்போதைய நேரத்திற்கு துளியும் தேவை இல்லாத ஒன்றை மிக சரியாய் செய்வதுதான் பண்ட் வாழும் உலகத்தின் டெஸ்ட் களம்.

Published:Updated:
ENG v IND - ரிஷப் பண்ட்

ரெட் பால் போட்டியின் பேட்டிங் எண்டில் ரிஷப் பண்ட் என்னும் அசாத்தியம் நிற்கும் போது மட்டும் ரசிகர்கள், அணி வீரர்கள் என அனைவரின் மனதிலும் ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டிருக்கும்.

“அது நடந்துவிடக்கூடாது, ஆனால் அது நடந்துவிடவும் வேண்டும்”.

இந்த வாக்கியம் பண்ட் குறித்தான எதிரணியின் எண்ண ஓட்டத்திற்கு கூட பொருந்திப்போகும். காரணம் ஒவ்வொரு கணத்திற்கு ஏற்ப மிகச் சரியாய் ரியாக்ட் செய்வதே டெஸ்ட் களத்திற்கான வெற்றி மந்திரம். ஆனால் அப்போதைய நேரத்திற்கு துளியும் தேவை இல்லாத ஒன்றை மிக சரியாய் செய்வதுதான் பண்ட் வாழும் உலகத்தின் டெஸ்ட் களம்.

“தேவையில்லாத ஷாட்டுகளால் பண்ட்டின் விக்கெட் வீழ்ந்துவிடக்கூடாது, ஆனால் ரிஸ்க்காக பார்க்கப்படும் அவரின் இயல்பான ஆட்டத்தின் மூலம் நிகழும் மேஜிக் மட்டும் நடந்துவிடவேண்டும்” என அவர் பக்கம் உள்ளவர்களின் யோசனை இருக்க, தேவையில்லாமல் ஆடும் பண்ட்டின் ஒற்றை ஷாட்டால் தங்களுக்குத் தேவையானது நடந்துவிடும் என்பது எதிராளியின் கணக்கு. ஆனால் பண்ட்டின் தோரணையோ எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் ‘நான் நடத்திக் காட்டுகிறேன்’ என்பது போல இருக்கும். பண்ட்டின் இந்தக் குணத்தைப் பறைசாற்றும் மற்றொரு நாள் நேற்றைய தினம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரவீந்திர ஜடேஜா - ரிஷப் பண்ட்
ரவீந்திர ஜடேஜா - ரிஷப் பண்ட்

தேநீர் இடைவேளை முடிந்து களத்தை நோக்கி நடைபோட்டு கொண்டிருந்தனர் இந்திய இங்கிலாந்து வீரர்கள். ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள்ளாகவே அணியின் பாதி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பியிருக்க எதிரணி பந்துவீச்சைத் திறம்பட சமாளித்து 76 ரன் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்திருந்தது பண்ட்-ஜடேஜா ஜோடி. 39 ஓவர்கள் மீதமிருந்த அக்கடைசி செஷன் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. காரணம் களத்தில் நின்றிருந்த இருவரில் ஒருவர் விரைவாக வீழ்ந்தால் கூட முதல் நாள் முடிவதற்குள் பேட்டிங்கைத் தொடங்கியிருக்கும் இங்கிலாந்து அணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செஷனின் முதல் பந்தை வீச ஓடி வருகிறார் மேட்டி பாட்ஸ். டாட் பால். இரண்டாவது பந்தின் ரன்-அப் தொடங்குகிறது. மிக சுமாரான ஃபுல்லர் லெந்தில் விழும் அப்பந்தை ட்ரைவ்வில் பவுண்டரி அடிக்கிறார் பண்ட். அடுத்த பந்து டாட். நான்காவது பந்தை இம்முறை ஓவர் தி விக்கெட்டில் இருந்து வீசுகிறார் பாட்ஸ். ஷார்ட் ஆப் லெந்தில் பிட்சாகி வந்த பந்து பண்ட்டிற்கு ஷாட் ஆடுவதற்கான எந்த சிறு இடைவெளியும் கொடுத்திருக்கவில்லை. ஆனால் சற்று பின்னகர்ந்து பாய்ண்ட் திசை நோக்கி பந்தை பன்ச் செய்வார் பண்ட். எந்த சிறு தவறும் இல்லாமல் வீசப்பட்ட அப்பந்து பண்ட்டின் அற்புத டைமிங்கால் பவுண்டரி கயிற்றை முத்தமிட பாய்ந்தோடும்.

ஆண்டர்சன் பந்தில் ரிவர்ஸ் ராம்ப் அடித்து அதற்கடுத்த பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிற்கு முயன்றது, லீச்சின் பந்தை டவுன் தி கிரீஸில் விளாசி முடித்து பிட்சில் தடுமாறிப் படுத்தது என வழக்கமாய் பண்ட் செய்யும் எந்தச் சிறு நிகழ்வும் மிஸ் ஆகவில்லை.

மேலே விவரித்த அந்த பன்ச் ஷாட்டின் டைமிங், பண்ட் விளாசிய 146 ரன்களுக்கான ஒற்றை பதம்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

ஒரு கட்டத்தில் 98/5 என்றிருந்தது இந்திய அணியின் ஸ்கோர். 5-வது விக்கெட்டாக வீழ்ந்து பெவிலியனை நோக்கி ஷ்ரேயாஸ் ஐயர் நடைபோட்டு கொண்டிருக்க, அப்போதைய நிலைக்கு இந்திய அணி 200 ரன்களைத் தாண்டுவதே கடினம் என இந்திய அணி ரசிகர்களே கூட நினைத்திருக்கக் கூடும். காரணம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தாலும் முந்தைய போட்டிக்கும் நடப்புப் போட்டிக்குமான கால வித்தியாசம் இரு அணிகளுக்குள்ளும் எக்கச்சக்க மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது. தலைமை முதல் பயிற்சிப் பட்டறை வரை இரு அணிகளுக்குமான இம்மாற்றங்களைப் பட்டியலிட்டு கொண்டே போனாலும் கடைசி டெஸ்டின் தொடக்கம் இந்திய அணியின் அத்தனை சாதகமாக அமையவில்லை. கோவிட்டால் பாதிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் இல்லாதது ஒரு புறம் இருந்தாலும் நியூஸிலாந்தை அதிரடியாக வீழ்த்தி உச்சகட்ட ஃபார்மில் இருந்தது இங்கிலாந்து அணி. இந்திய வீரர்களோ ஏப்ரலில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டிற்குப் பிறகு தற்போதுதான் ரெட் பால் பக்கத்திற்குத் திரும்பி இருந்தார்கள்.

ஒப்பனர்களாகக் களமிறங்கி ஓரளவுக்கு செட்டில் ஆகியும் இருந்த கில், புஜாரா என இருவரையும் ஸ்லிப்பில் கேட்சாக்கி தன் வேலையை தொடங்யிருந்தார் ஜிம்மி ஆண்டர்சன். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹனுமா விஹாரியும் இளம் பந்துவீச்சாளர் மேட்டி பாட்ஸிடம் வெளியேற, அடுத்த சில ஓவர்களில் வெல் லெஃடிற்கு முயன்று தேவையில்லாமல் இன்சைட் எட்ஜில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் விராட் கோலி. அடுத்த வந்த ஷ்ரேயாஸ் ஐயரையும் ஜிம்மி வெளியேற்ற, 10 ஓவர் இடைவெளிக்குள் நாலு விக்கெட்கள் வீழ்ந்து 46/1 ஆக இருந்த ஸ்கோர் 98/5 என்றானது. ஆடுகளத்தின் தன்மை, மேகமூட்டத்துடன் காணப்பட்ட சீரற்ற வானிலை என அனைத்தும் பௌலிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில்தான் இவ்வனைத்தையும் உடைத்து 6-வது விக்கெட்டிற்கு 222 ரன்கள் குவித்தது பண்ட்-ஜடேஜா ஜோடி. பண்ட் காட்டிய அதிரடி ஜடேஜாவை சற்றும் சலனப்படுத்தாமல் அவரை மேலும் மெருகேற்றவே செய்தது.

டாஸை வென்று மிக அருமையாய் தொடங்கிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை மொத்தமாக குலைத்தது இந்த ஜோடி. ஓவருக்கு இரு நோ-பால்களை வீசும் அளவுக்கு இருந்தது கேப்டன் ஸ்டோக்ஸின் ரிதம். மழை காரணமாக 10 ஓவர்கள் வீசப்படாத நிலையிலும் 338 ரன்கள் எடுத்து முதல்நாளை முடித்தது இந்திய அணி. 83 ரன்களுடன் களத்தில் நிற்கும் ஜடேஜாவின் துணையுடன் இதை முடிந்தளவு உயர்த்த இன்று தீவிர முனைப்பை காட்டுமா இந்தியா?