கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

கப்பலைக் கவிழ்த்த கொட்டாவி!

பாகிஸ்தான் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாகிஸ்தான் டீம்

பழைய மாடல் ஓப்பன் ஜீப்பில் பயணப்பட்டிருக்கிறீர்களா? சிலசமயம் லேசாக அழுத்தினாலே பானா காத்தாடி போல சர்ரென பறக்கும்.

திரே லாரி வந்தாலும் முட்டித் தூக்கிக் கடாசிவிடும் வேகம். சிலசமயம் ஆக்ஸிலேட்டரில் நான்கு பேர் ஏறி நின்று மிதித்தாலும் பிக்கப்பே இருக்காது. தட்டுத் தடுமாறி குலுங்கிக் கரைசேரும். பாகிஸ்தான் டீமும் அப்படித்தான். ஃபார்முக்கு வந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும் தட்டித் தூக்கியெறிந்துவிடுவார்கள். அதேசமயம் சுணங்கிவிட்டால் துக்கடா அணிகள் கூட அவர்கள் முதுகில் ஏறி விளையாடும். முந்தைய உலகக்கோப்பைகளைப் போலவே இந்தத் தொடரிலும் இதுதான் நிலைமை. பாகிஸ்தான் அணியின் பிரதான பலமே அதன் பவுலிங் யூனிட்தான்! வாசிம் அக்ரம், அக்தர், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் என ஜாம்பவான்கள் பவுலிங்கில் எதிரணியைக் காலி செய்ய.. இன்சமாம், யூனிஸ் கான், சயீத் அன்வர் போன்ற பேட்ஸ்மேன்கள் மிச்சத்தைப் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், இந்த முறை அந்த அணியின் பவுலிங் அட்டாக் ரொம்ப சுமாராகவே இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டாக ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஹசன் அலி, நினைத்து நினைத்து ஃபார்முக்கு வரும் முகமது ஆமிர், என்ன ரகமென்றே கண்டுபிடிக்க முடியாத வஹாப் ரியாஸ்... இவர்களுக்கிடையே ஃபார்மில் இருக்கும் ஒரே பவுலர் ஷாஹின் அஃப்ரிடி - இதுதான் அந்த அணியின் பவுலிங் அட்டாக். ஆனால் டீம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் மனது வைத்துவிட்டால் கோப்பையைத் தொட்டுவிடுவார்கள் என்பதால் தெம்பாக இருந்தார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள்.

முதல் மேட்ச் வெஸ்ட் இண்டீஸோடு. இந்திய அணியைப் போலவே பாகிஸ்தான் பேட்டிங்கும் இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம் ஆகிய முதல் மூன்று வீரர்களை நம்பியே இருந்தது. இவர்கள் சுமாரான வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து அணியை கரை சேர்த்துவிடுவார்கள் என நம்பினார்கள் எல்லாரும். ஆனால் இங்கேதான் ட்விஸ்ட். படபடவென பேட்ஸ்மேன்களைச் சுருட்டி வீசினார்கள் ஜேசன் ஹோல்டரும் ஒஷேன் தாமஸும். 105 ரன்களுக்கு ஆல் அவுட். பாகிஸ்தானின் மோசமான உலகக்கோப்பை ஸ்கோர்களுள் இது ஒன்று. `இந்த டார்கெட்டை டிஃபெண்ட் பண்ணணும்னா வாசிம் அக்ரமை டீம்ல எடுத்தாத்தான் உண்டு' என வெளிப்படையாகவே கமென்ட்கள் பறந்தன. அவர்தான் இல்லையே. சுலபமாக சேஸ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

முதல் மேட்ச்சில் வாங்கிய இந்த முரட்டு அடி அரையிறுதி வாய்ப்பு வரை ஆப்பு வைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இரண்டாவது மேட்ச் லோக்கல் டானான இங்கிலாந்தோடு! டாப் 3யோடு ஹஃபீஸும் கைகோர்க்க 348 ரன்கள் குவித்தது பாகிஸ்தான். இந்த மேட்ச்சை பெரிய ரன் வித்தியாசத்தில் ஜெயித்தால் முதல் மேட்ச்சில் காலியான ரன்ரேட்டை மீட்டெடுத்துவிடலாம். ஆனால் வஹாப் ரியாஸ் வள்ளலாக மாற வெளுத்தார்கள் ரூட்டும் பட்லரும். கிட்டத்தட்ட வெற்றிக்குப் பக்கத்தில் வந்து இங்கிலாந்து தோற்க, பாகிஸ்தான் ரன்ரேட்டில் பெரிய மாற்றமில்லை. இலங்கை அணியை அசால்ட்டாக வீழ்த்தி இரண்டு புள்ளிகளைப் பெற்றுவிடலாம் என பாகிஸ்தான் நினைக்க, மழை புகுந்து ஆட்டையைக் கலைத்தது. பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோக முதல் போட்டியின் மோசமான தோல்வியும் இந்த போட்டி வாஷ் அவுட் ஆனதும்தான் காரணம். ஆஸ்திரேலிய அணியோடு மோதிய போட்டியில் பெளலர்கள் டீசன்ட்டாக தங்கள் வேலையைச் செய்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அநியாயத்திற்கு சொதப்பினார்கள். தன் கடைசித் தொடரில் ஆடிய ஷோயப் மாலிக்கிற்கு வாழ்க்கைக்கும் மறக்க முடியாத கசப்பான அனுபவங்கள் இவை!

கப்பலைக் கவிழ்த்த கொட்டாவி!

பெளலிங் வீக்னெஸ், மிடில் ஆர்டர் சொதப்பல் போன்றவற்றோடு இந்தியாவுடனான போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னஸ் லெவலும் பல்லிளித்தது. முக்கியமான கட்டத்தில் களத்தில் நின்று கொட்டாவி விட்டார் கேப்டன் சஃர்ப்ராஸ் கான். பேட்டிங்கில் 40 ஸ்ட்ரைக் ரேட். கொஞ்சம்கூட முனைப்பு காட்டாத அவர்களின் ஆட்டிட்யூட் பாரபட்சம் பார்க்காமல் எல்லாரையும் கடுப்பேற்றியது. பாகிஸ்தான் கிரிக்கெட்டை மொத்தமாக சீரமைக்கவேண்டியதிருக்கிறது என்பதை அந்நாட்டு பிரதமர் உள்பட எல்லாரும் உணர்ந்த தருணமது.

தொடரின் முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி பாகிஸ்தானுக்கு தம்ஸ் அப் காட்டியது. தென்னாப்பிரிக்காவோடு 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது என வீறுகொண்டெழுந்தது. ஆனால் it was too late! அடுத்தடுத்து வெற்றிகள் பெற்றாலும் பிற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்க வேண்டியதிருந்தது. தட்டுத்தடுமாறி ஆஃப்கானிஸ்தானோடு ஜெயித்த ஆசுவாசம் மறைவதற்குள் பங்களாதேஷை 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற இடி வந்து இறங்கியது. மூட்டையைக் கட்டினார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.

உலகக்கோப்பை வரலாற்றில் இவ்வளவு மோசமான ஃபிட்னஸ் கொண்ட பாகிஸ்தான் அணியும், இவ்வளவு கொடூரமாக ஃபீல்டிங் செய்யக்கூடிய பாகிஸ்தான் அணியும் இதற்குமுன் இருந்ததே இல்லை. விரல்களுக்கிடையில் தண்ணீர் ஒழுகுவதைப் போல ஒழுகிக்கொண்டேச் சென்றன பந்துகள்!

முன்பிருந்தே பாகிஸ்தான் அணி மேனேஜ்மென்ட் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. முக்கியமான தொடர்களின்போது வளர்ந்துவரும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வயதான வீரர்களை நம்பி களமிறங்குவதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இந்தத் தொடரின்போதும் ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் போன்ற பிளேயர்களின் இடங்கள் கேள்விக்குள்ளாயின. முன்புபோல விக்கெட்கள் விழுவதில்லை ஹஃபீஸுக்கு! இங்கிலாந்தில் அவரின் பேட்டிங் ஆவரேஜோ 28தான்! மாலிக்கின் ஆவரேஜ் அதற்கும் மோசம். 13.63தான்!

பாகிஸ்தானின் சொதப்பலுக்கு ஒரு பெரிய மனிதரும் காரணம்.அவர்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கான். இக்கட்டான நிலையில் டீமைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு கேப்டனுக்கே! ஆனால், பாகிஸ்தான் தள்ளாடிய நேரங்களில் எல்லாம் கையைக் கட்டிக்கொண்டு ஒரு பேட்ஸ்மேனாக வேடிக்கை பார்த்தார் இவர். பேட்டிங் ஆர்டரிலும் இஷ்டப்படி இறங்கினார். இதனாலேயே 8 போட்டிகளில் இவருக்கு வெறும் 143 ரன்கள்தான் கிடைத்தது. பொதுவாக கிரிக்கெட்டில் கேப்டனின் எனர்ஜிதான் பிற வீரர்களுக்கு டானிக். கேன் வில்லியம்சன், மோர்கன், கோலி என இதற்குப் பல நல்ல எடுத்துக்காட்டுகள் உண்டு. மோசமான எடுத்துக்காட்டாக சாய்ஸே இல்லாமல் இருந்தது சர்ஃப்ராஸ்கான்தான்! சுறுசுறு ஃபீல்டிங் செட்டப் இல்லை, வீரர்கள் மீதான கமாண்ட் இல்லை, வெற்றிக்கான குறைந்தபட்ச முனைப்புகூட இல்லை. இவரின் எனர்ஜி டீமை தொற்றிக்கொள்ள கல்யாண வீட்டில் பந்தி முடிந்து சோம்பல் முறிப்பவர்கள் போலவே இருந்தார்கள் அத்தனை பேரும்.

கப்பலைக் கவிழ்த்த கொட்டாவி!

தொடரின் முதல் பாதியில் ஃபார்மில் இல்லாத ஹசன் அலியை ஆடவிட்டு சூப்பர் ஃபார்மில் இருந்த ஷாஹினை பெஞ்ச்சில் உட்கார வைத்தார் சர்ஃபராஸ். பிற்பாதியில் அணிக்குள் வந்த ஷாஹின் 5 போட்டிகளில் வீழ்த்தியது 16 விக்கெட்கள். நான்கு போட்டிகளில் ஹசன் அலி வீழ்த்தியது 2 விக்கெட்கள்தான்.

ஷோயப் மாலிக்கின் ட்ராக் ரெக்கார்ட் தெரிந்தும் அவருக்கு முதல் பாதியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். விளைவு, மிடில் ஆர்டரில் நங்கூரம் போல நச்சென நிற்கும் ஹாரிஸ் சொஹைல் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான போட்டிகளில் வாய்ப்பை இழந்தார். அந்த இரண்டு ஆட்டங்களிலும் மாலிக் டக் அவுட்! இந்தத் தவறுகளையெல்லாம் உணர்ந்து சர்ஃப்ராஸ்கான் தன்னைத் திருத்திக்கொண்டபோது ஏற்கனவே கப்பல் முக்கால்வாசி மூழ்கிப்போயிருந்தது.

இறுதிப்போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட நியூசிலாந்து அதே நூலிழை வித்தியாசத்தில்தான் பாகிஸ்தானை ஓரங்கட்டி அரையிறுதிக்குச் சென்றது. எனவே, இந்தத் தொடரிலிருந்து எடுத்துப்போக பாசிட்டிவ் விஷயங்களும் பாகிஸ்தானுக்கு நிறையவே இருக்கின்றன. பாபர் ஆசம்தான் பாகிஸ்தானின் பேட்டிங் எதிர்காலமாக இருப்பார் என ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் ஹாரிஸ் சொஹைல் உலகின் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வளர்வார். இதே ஃபார்மை தொடரும்பட்சத்தில் பார்க்க பாலிவுட் ஹீரோ போல இருக்கும் ஷாஹின் அஃப்ரிடி பாகிஸ்தானின் பெளலிங் ஆயுதம்!

பாகிஸ்தானில் நடக்கும் உள்ளூர்ப் போட்டிகளின் ஃபார்மெட் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில்லாத்தன்மைதான் இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்கு தடையாக இருக்கிறது என பல மூத்த வீரர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இந்த உலகக்கோப்பைத் தோல்விக்குப் பின் உள்ளூர்ப் போட்டிகளின் ஃபார்மெட்டை முற்றிலுமாக மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அந்த அணியின் எதிர்காலம் இந்த மாற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது.