பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். இது சாத்தியமா? ஏனெனில், கடைசியாக அந்த அணி விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஓல்டு டிராபோர்டில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி, உளவியல் ரீதியாக அந்த பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கம் போல தோல்விக்குப் பின், முன்னாள் வீரர்கள் தற்போதைய அணியை கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை சர்ஃபராஸ் அகமதுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

``தொலைக்காட்சிகளில் தோன்றும் அவர்கள் (முன்னாள் வீரர்கள்), தங்களை கடவுள்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களை வீரர்களாகவே கருதவில்லை. அப்படியிருக்கையில், நாங்கள் ஏதாவது சொன்னால், அது பெரிய குற்றமாக பார்க்கப்படும்; பெரிய பிரச்னையாகும். நான் எதுவும் சொல்லப்போவதில்லை. இது எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம். இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தபின், இரண்டு நாள்கள் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டோம். கடந்த மூன்று நாள்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம். இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிபெறுவோம்’’சர்ஃபராஸ் அகமது
ஐந்து போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிற பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கு முதலில் அவர்கள் பேட்டிங் டிபார்ட்மென்ட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாபர் ஆசம் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறுகின்றனர். மற்ற அணிகளில் சீனியர் வீரர்கள் பொறுப்புணர்ந்து ஆடிக்கொண்டிருக்க, 37 வயதாகும் சோயிப் மாலிக் வாய்ப்பை வீணடிக்கிறார். அவருக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, ஹசன் அலிக்குப் பதிலாக முகமது ஹஸ்னைன் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கலாம்.
தென்னாப்பிரிக்காவின் ரெக்கார்டும் மெச்சும்படி இல்லை. போட்டிகளுக்கு நடுவே போதிய இடைவெளி இல்லாதது, முக்கிய வீரர்களின் காயம் என சகல விதத்திலும் அந்த அணிக்கு நெருக்கடி. தென்னாப்பிரிக்க அணிதான் பெஸ்ட் பெளலிங் அட்டாக்கைப் பெற்றிருக்கிறது என, உலகக் கோப்பைக்கு முன் ஒரு பார்வை இருந்தது. அதில் யார் கண் பட்டதோ… எங்கிடி காயம், ஸ்டெய்ன் விலகல் என படாதபாடுபட்டது தென்னாப்பிரிக்கா.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு, குவின்டன் டி காக், ஆம்லா, டு ப்ளெஸ்ஸி என சீனியர் பிளேயர்கள் பொறுப்புணர்ந்து ஆட வேண்டியது அவசியம். டி காக் இந்த உலகக் கோப்பையில் இன்னும் தனக்குரிய இயல்பில் ஒரு இன்னிங்ஸ் கூட ஆடவில்லை. ஆம்லா நியூஸிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்தார். ஆனால், ஆரம்பத்தில் அவர் ரன் எடுக்க ரொம்பவே சிரமப்படுகிறார். இது பின்னர் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மற்ற பெரிய அணிகளில் கேப்டன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடி அணியைக் கரை சேர்க்கின்றனர். டு ப்ளெஸ்ஸி இன்னும் அப்படியொரு இன்னிங்ஸ் ஆடவில்லை. அந்த அணியில் டசன் மட்டுமே ஒரே ஆறுதல்.
ஃபகர் ஜமான், பாபர் ஆசம் இருவரும் வேகப்பந்துவீச்சை எளிதில் சமாளிப்பர் என்பதால், தென்னாப்பிரிக்கா இம்ரான் தாஹிர் மூல் அவர்களுக்கு செக் வைக்கலாம். பாகிஸ்தான் தரப்பில், முகமது அமீர் தவிர்த்து மற்ற பெளலர்கள் சரியான லென்த்தில் பந்துவீசத் தவறுகின்றனர். அமீர் கூட, முதலிரண்டு ஸ்பெல்லில் விக்கெட் எடுக்க சிரமப்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக எல்லா டிபார்ட்மென்ட்டிலும் பாகிஸ்தான் சொதப்பியது. அதைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சர்ஃப்ராஸ் அண்ட் கோ.
சர்வதேசப் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை மோதிய 78 போட்டிகளில் 50-27 என தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. உலகக் கோப்பையிலும் ப்ரோட்டீயாஸ் கை ஓங்கியிருக்கிறது. வெற்றி விகிதம் 3-1. ஆனாலும், கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டி நடக்கவுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் முதன்முறையாக மோதவுள்ளன.
பிளேயிங் லெவன்
பாகிஸ்தான் (உத்தேசம்): இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது, ஹரிஸ் சோஹைல், சதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷகீன் அஃப்ரிடி.
தென்னாப்பிரிக்கா (உத்தேசம்): டி காக், ஹசிம் ஆம்லா, டு ப்ளெஸ்ஸிஸ், மார்க்ரம், ரேஸி வேன் டெர் டசன், மில்லர், கிறிஸ் மோரிஸ், பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், லுங்கி எங்கிடி.