Published:Updated:

இனி பாகிஸ்தானுக்கு இல்லை மௌக்கா மௌக்கா... 11 தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றி

Mohammad Amir ( AP )

ஒருவேளை, மோர்கனுக்குப் பிறகு பட்லரை இறக்கியிருந்தால், நிச்சயம் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஒன்று, சரஃபராஸின் திட்டம் மாறியிருக்கும். இல்லை, ரன்ரேட் குறையாமல் இருந்திருக்கும்.

Published:Updated:

இனி பாகிஸ்தானுக்கு இல்லை மௌக்கா மௌக்கா... 11 தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றி

ஒருவேளை, மோர்கனுக்குப் பிறகு பட்லரை இறக்கியிருந்தால், நிச்சயம் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஒன்று, சரஃபராஸின் திட்டம் மாறியிருக்கும். இல்லை, ரன்ரேட் குறையாமல் இருந்திருக்கும்.

Mohammad Amir ( AP )

நேற்று நடந்தது உலகக் கோப்பையின் மற்றுமொரு போட்டி எனக் கடந்து செல்லமுடியவில்லை. பாகிஸ்தான் வென்றதும், உலகெங்கும் இருந்து வாழ்த்துகள் கொட்டுகின்றன. லக்ஷ்மண், கெய்ல், அஃப்ரிதி, மைக்கேல் வான், ரஸல் அர்னால்டு, கிப்ஸ் எனப் பலரும் பாராட்டுகிறார்கள். அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. 11 போட்டிகளில் வரிசையாகத் தோற்று இருக்கிறது பாகிஸ்தான்.

Pakistan Fan
Pakistan Fan
AP

பாகிஸ்தானின் இரண்டாம் தாய் வீடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள். 5-0 என வாஷ் அவுட் செய்கிறது ஆஸ்திரேலியா. இங்கிலாந்தில் கடந்த மாதம், அதாவது உலகக் கோப்பை நடக்கும் அதே மாதத்தில் பாகிஸ்தானுக்கு மண்ணின் மைந்தர்களுடன் 5 ஒரு நாள் போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைக்கிறது. நாம் இங்கு ஐ.பி.எல்லில் மாநில சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் போது, இப்படியொரு வாய்ப்பு வருகிறது பாகிஸ்தானுக்கு. அதிலும் நான்கில் தோற்கிறது பாகிஸ்தான் (ஒரு போட்டிக்கு முடிவு இல்லை )

இந்த ஆண்டில் (உலகக் கோப்பைக்கு முன்) பாகிஸ்தான் விளையாடிய 15 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. `ஏசியன் டீம்ஸ்ல நாம எப்படியோ, வேர்ல்ட் டீம்ஸ்ல் அவுக ’ என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப வெஸ்ட் இண்டீஸின் நிலைமை இன்னும் மோசம்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் சிறப்பான சம்பவம் செய்து எட்டு ஆண்டுகளாகிவிட்டது. இறுதியாக நியூசிலாந்தை 4-1 என 2012–ல் வென்றது. அதன்பிறகு வயதான சிங்கத்தின் அருகில் வந்து மாட்டும் அப்பாவி மிருகங்களைக் கொன்று உயிரைத் தக்கவைப்பது போல், அயர்லாந்தையும், வங்கதேசத்தையும் வென்றது வெஸ்ட் இண்டீஸ். அதுவும் 2014–ல் நின்றுவிட்டது. அதன்பின் ஐந்து ஆண்டுகளாக ஒரு ஒருநாள் தொடரில்கூட வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை.

இப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸுடன் உலகக்கோப்பையின் முதல் போட்டி. வரலாற்றை மாற்ற வேண்டிய உன்னத தருணத்தில் நாட்டிங்ஹாமில் 21.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 105 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.

நம்பர் ஒன் ஒரு நாள் அணியை பாகிஸ்தான் வென்று இருக்கிறது
சமி

உலகம் மீண்டும் பாகிஸ்தானை `மௌக்கா மௌக்கா’ என்றது. 13.4 ஓவர்களில் இதை சேஸ் செய்து பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டை ஐந்தாக்கி அழகு பார்த்தது வெஸ்ட் இண்டீஸ்.

இந்த உலகக் கோப்பையில் `நாங்கள் அண்டர்டாக்ஸ் இல்லை’ என தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியிலேயே தெளிவாக சொல்லிவிட்டது வங்தேசம்.

11 தோல்விகளுக்குப் பிறகு, பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பெற்று இருப்பது ஒரு சிறப்பான வெற்றி
லக்ஷ்மண்

பாகிஸ்தானுக்கு நேற்று இரண்டாவது போட்டி. நாட்டிங்ஹாமில், 105 ரன்களுக்கு ஆல் அவுட்டான அதே மைதானத்தில். ரன்களை வாரிக் கொடுக்கும் மைதானம் எனச் சூளுரைக்கிறார்கள் பிட்ச் ரிப்போர்ட்டில். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபூமி, பௌலர்கள் பாவம், டாஸ் வென்றால் பேட்டிங் என்கிறார்கள் அக்ரமும், சங்காவும்.

மோர்கனும் , சர்பராஸுன் டாஸூக்கு ஆயத்தமாகிறார்கள். பௌலிங் என்கிறார் மோர்கன். `நானும் பௌலிங்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என நினைத்தேன் என்கிறார் சர்பராஸ். உண்மையில் நாட்டிங்ஹாமில் இருக்கும் டிரென்ட் ப்ரிட்ஜ் ஆடுகளத்தில் 320 ரன்கள் எடுத்தால்கூட போதுமானதாக இருக்காது. வரலாறு அதைத்தான் சொல்கிறது.

அதுவும் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு முன், 320 எல்லாம், ' இந்த வெயிட்டருக்கு டிப்ஸ் போடுவது மாதிரி' என வடிவேலு சொல்லும் வகையில்தான் வரும். 12 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பை சோயப் மாலிக்குக்கு வழங்கினார் சர்பராஸ்.

கடந்த 4 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இங்கிலாந்து சேஸிங்கில் தோற்றது இல்லை என்கிற வரலாறு வேறு பாகிஸ்தானுக்கு கண் முன் வந்திருக்கலாம்.

மே மாதம் நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 340 எடுக்க, இங்கிலாந்து அதை சேஸ் செய்தது.
2018ல் இங்கிலாந்தின் 268 ரன்களை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா 2016. பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அடித்த ஸ்கோர் 444/3
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 481 ரன்கள் என்கிற இமாலய சாதனை படைத்ததும், இதே மைதானத்தில்தான்.
2016. பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அடித்த ஸ்கோர் 444/3

இப்படியிருக்க ஆட்டம் ஆரம்பித்தது. ஆர்ச்சரின் பந்துவீச்சைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் (1.4) ஃபகர் ஜமானுக்கு அவர் வீசிய பந்து அப்படித்தான் இருந்தது. ஆர்ச்சரின் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே. அதன்பிறகு ஆட்டம் முழுக்க ஜமான், இமாம் உல் ஹக் கைகளில் இருந்தன. 15–வது ஓவரில்தான் முதல் விக்கெட் விழுந்தது. முதல் 8 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், அடுத்த 8 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மறுபடியும் `மௌக்கா மௌக்கா’வோ என ஜெர்க் ஆனார்கள் பச்சை நிற சகோதரர்கள்.

ஆனால், நிலைமை மாறியது. ஓவருக்குத் தேவையான ரன்கள் வந்துகொண்டே இருந்தது. அடில் ரஷீதின் 5 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது பாபர் அசாம், ஹஃபீஸ் ஜோடி. டாப் ஐந்து பேட்ஸ்மேன்களின் நிலையான ஆட்டம், அணியை 300 ரன்களைக் கடக்க உதவியது. இது விக்கெட்டுக்கான பிட்ச் இல்லை என்பதால், எதுவும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை. (வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷார்ட் பால் டெக்னிக் இனி, பாகிஸ்தானிடம் பலிக்காது என நம்பலாம் )

விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும் ரன்கள் வந்துகொண்டிருந்தது. ஆனால், ரன்கள் பாகிஸ்தானின் பேட்டிங் திறமையால் அல்ல, இங்கிலாந்தின் மோசமான ஃபீல்டிங்கால் வந்தது என்பதுதான் பெருஞ்சோகம். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கேப்டன் மோர்கன் ஒரு பௌண்டரியைத் தவறவிட்டார்.

அடில் ரஷீதுக்கோ, ஆர்ச்சருக்கோ விக்கெட்டுகள் ஏதுமில்லை. கிறிஸ் வோக்ஸ் மூன்று விக்கெட்டுகள் , நான்கு கேட்ச் என ஏழு டிஸ்மிஸல்களை தன் வசமாக்கிக்கொண்டார். இங்கிலாந்து இந்தப் போட்டியில் 13 மிஸ்ஃபீல்டு செய்திருக்கிறது. 17 ரன்களை அதீதமாகக் கொடுத்திருக்கிறது. இறுதியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதில் என்ன வியப்பு இருக்கிறது.

348 ரன்களை சேஸ் செய்தால் வெற்றி. ஆனால், உலகக்கோப்பையில் நாம் தரும் ஒவ்வொரு அதிக ரன்னும், இரண்டாம் இன்னிங்ஸில் தலையைச் சுற்ற வைக்கும். இந்தத் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட். 75 பந்துகளில் தன் சதத்தைப் பதிவு செய்தார் ஜோஸ் பட்லர். உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்தாவது அதிவேக சதம் இது.

butler
butler
AP

ஒன்பதாவது ஓவரின் இறுதியில், பேர்ஸ்டோவின் விக்கெட்டுக்குப் பின்னர் களமிறங்குகிறார் மோர்கன். இடது கை வீரரான மோர்கனுக்கு எதிராக சர்பராஸ் களமிறக்கிய பௌலர்கள் எல்லாமே ஆச்சர்யப்படுத்தின.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து செய்த மிகப்பெரிய தவறு, மோர்கன் அவுட்டான பின் ஸ்டோக்ஸை இறக்கியது. 15-வது ஓவரில் மோர்கன் அவுட்டான போதுதான் இங்கிலாந்தின் ரன்ரேட் ஆறுக்கும் கீழ் குறைந்தது. 3 விக்கெட்டுகளை இழந்து, ரன்ரேட்டும் குறையும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகரிக்கும். பாகிஸ்தான் மிகவும் ரிலாக்ஸாக இருந்திருக்கும். அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு எப்படியாவது நெருக்கடி கொடுத்திருக்கவேண்டும். அவர்களின் திட்டத்தைச் செயல்படுத்த முடியாதபடி செய்திருக்கவேண்டும். ஆனால், இங்கிலாந்து நேர்மாறாகச் செய்தது.

Ben Stokes, Morgan
Ben Stokes, Morgan
AP

அப்போதுதான் முகமது ஹஃபீஸ் பந்துவீசத் தொடங்கியிருந்தார். அணியின் 5-வது பௌலர் அவர்தான். அவரைத்தான் இங்கிலாந்து அட்டாக் செய்திருக்கவேண்டும். ஆனால், அங்குதான் போட்டியை இழக்கத் தொடங்கினார்கள். இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது ஆஃப் ஸ்பின்னருக்கு பந்துவீசுவது எளிதாக இருக்கும். ஒரு பக்கம் ஹஃபீஸ் எளிதாகப் பந்துவீசிக்கொண்டிருக்க, மறுபக்கம் மாலிக்கையும் பயன்படுத்தத் தொடங்கினார் சர்ஃபராஸ். ரன்ரேட் குறைந்துகொண்டே இருந்தது. ஐந்தாவது பௌலரின் 10 ஓவர்களை எளிதாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஒருவேளை, மோர்கனுக்குப் பிறகு பட்லரை இறக்கியிருந்தால், நிச்சயம் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஒன்று, சரஃபராஸின் திட்டம் மாறியிருக்கும். இல்லை, ரன்ரேட் குறையாமல் இருந்திருக்கும். ஆனால், இங்கிலாந்து அது இரண்டையும் செயல்படுத்தத் தவறிவிட்டது.

எப்பேர்ப்பட்ட பேட்டிங் லைன் அப்பாக இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் கடைசி பத்து ஓவர்களில் 91 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும் என்பது சற்று கடினம்தான். களத்தில் இருப்பது பட்லரும் , மொயின் அலியும். 59 பந்துகளில் 82 ரன்கள் என ஏற்கெனவே அதிரடி மோடில் இருந்தார் பட்லர். ஆனால் , பாகிஸ்தானின் டெத் ஓவர் பௌலிங் இங்கிலாந்தை சோதிக்க ஆரம்பித்தது. அடுத்த மூன்று ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே இங்கிலாந்தால் எடுக்க முடிந்தது. தேவைப்படும் ரன் ரேட் பத்தைத் தாண்டியது.

Hafeez
Hafeez
AP

45–வது ஓவரில் ஆமீர் வீசிய ஆஃப் கட்டர், அவுட்சைட் ஆஃப் பக்கம் திரும்ப, அதை அடித்து ஆட முற்பட்டார் பட்லர். ஷார்ட் தேர்டில் நிற்கும் வஹாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பட்லர். சதம் அடித்த பட்லர், இந்த பந்தை விட்டிருந்தால்கூட, நேற்று முடிவு மாறி இருக்கும். ஹஸன் அலி வீசிய அடுத்த ஓவரில் பௌண்டரிகள் எதுவும் இல்லை. மொயில் அலி, கிறிஸ் வோக்ஸ் இருவராலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாக, பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஏனெனில் அடுத்து நடந்தவை எல்லாம் வெறும் சம்பிரதாயங்கள்.

இங்கிலாந்தின் சேஸிங்கில் இதற்கு முன்பு ஐந்து சதம் அடித்திருக்கிறார் ஜோ ரூட். எல்லாமும் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்று தந்திருக்கின்றன. சதம் அடிக்காத பாகிஸ்தான், இரண்டு சதம் அடித்த இங்கிலாந்தை அதன் மண்ணில், கடந்த மாதம் 4-0 என தோற்ற அதே மண்ணில் வெற்று பெற்றிருக்கிறது. `இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அது அதிர்ச்சி தோல்வியாக இருக்காது!’ என பாகிஸ்தான் பெளலிங் பயிற்சியாளர் அசார் மகமது சொன்னது பலித்திருக்கிறது. உலகக் கோப்பை சூடு பிடித்திருக்கிறது.

Hafeez
Hafeez
AP

84 ரன்கள் எடுத்த 38 வயதான மொஹமது ஹஃபீஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

`சிறு உந்துதல் கிடைத்தால் போதும், எல்லாம் சரியாகி விடும்’ என்றார் ஹஸன் அலி. பாகிஸ்தானுக்கு இதைவிடப் பெரிய உந்துதல் கிடைக்காது என்பது நிச்சயம். இங்கிலாந்து பெரிதாக தவறு எல்லாம் ஒன்றும் செய்யவில்லை. ஃபீல்டிங் மட்டும்தான் ஒரே பிரச்னை. ஆனால், அவர்கள் ஆறுதல் அடைய ஒரு ஸ்டேட்ஸ் இருக்கிறது.

2007 முதல் சதம் ரிக்கி பாண்டிங்
2011 முதல் சதம் சேவாக்
2015 முதல் சதம் ஆரோன் ஃபின்ச்
2019 முதல் சதம் ஜோ ரூட்

கடந்த மூன்று உலகக் கோப்பைகளில் முதல் சதத்தை அடித்த வீரரின் அணிதான் கோப்பை வென்று இருக்கிறதாம். கிரிக்கெட்டை உருவாக்கிய அணிக்கு இந்த ஸ்டேட்ஸ் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுக்கலாம். மேலும், இருக்கவே இருக்கிறது Home ground advantage!