Published:Updated:

`பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டுமென்றே தோற்றதா இந்தியா?’ -பென் ஸ்டோக்ஸ் சுயசரிதையால் எழுந்த சர்ச்சை

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து

`இந்தியா அந்தப் போட்டியில் வேண்டுமென்றேதான் தோற்றது. இதை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன்’ - என்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் அனைத்து அணிகளுக்கும் ஸ்பெஷல்தான். நாம் விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையை வெல்வதே அனைத்து அணிகளின் பெரும் கனவாக இருக்கும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ரொம்பவே ஸ்பெஷல். கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் நம்பர் 4 பொஸிஷன் சற்று சிக்கலைக் கொடுத்தாலும் எல்லா துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

கோலி
கோலி

அதேநேரத்தில் சொந்த மண்ணில் எதிரணிகளை துவம்சம் செய்துகொண்டு இருந்தது உள்ளூர் அணியான இங்கிலாந்து. இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவின் சதமும் விராத் கோலியின் அரைச்சதமும் நம்பிக்கையளித்தன. இவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பின்னால் வருபவர்கள் அதிரடியான ஆட்டத்தைக் காட்டுவார்கள் என்றே இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வெற்றிக்குப் போதுமான அதிரடி கிடைக்கவில்லை.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் கடைசி 10 ஓவர்களில் தோனியும் களத்தில் இருந்தார்.

இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட சுயசரிதை புத்தகம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். காரணம், அதில் ஸ்டோக்ஸ், இந்தியாவுடனான் உலகக் கோப்பை தொடர் குறித்து, ``ரோகித் - கோலியின் பார்ட்னர்ஷிப் வழக்கமான அதிரடியைக் காட்டவில்லை. அவர்களது ஆட்டம் மர்மமாக இருந்தது.

தோனி
தோனி

11 ஓவரில் 112 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் தோனி களம் இறங்கினார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றே நினைத்தோம். ஆனால் சிக்ஸ்க்குப் பதிலாக அவர் சிங்கிள் எடுக்கவே ஆர்வம் காட்டினார். அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் அவர்கள் தடுப்பு ஆட்டம் ஆடியது ஆச்சர்யமாக இருந்தது. தோனியின் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நோக்கம் குறைவாக இருந்தது அல்லது இல்லை என்று சொல்லலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். என்றாலும் இந்தியா எதற்காக அப்படி விளையாடியது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர், `பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடாது என்பதற்காக இந்தியா வேண்டுமென்றே தோல்வியைத் தழுவியது' என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் பேசிய முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், பென் ஸ்டோக்ஸ் கருத்து தொடர்பாகப் பேசினார்.

அவர் ``நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியைப் பார்த்தோம். அந்த உணர்வு எங்களுக்கும் இருந்தது. இந்த விவகாரத்தில் ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும். மற்றோர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தோற்பது தவறு’’ என்றார்.

ரசாக்
ரசாக்
Twitter

அப்போது குறிக்கிட்ட செய்தியாளர், `நாக் -அவுட் சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறுவதை தவிர்ப்பதற்காக இந்தியா வேண்டுமென்றே தோல்வியடைந்தது என்கிறீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ரசாக், `அதில் சந்தேகமே இல்லை. இந்தியா அந்தப் போட்டியில் வேண்டுமென்றே தான் தோற்றது. இதை நான் அப்போதில் இருந்தே சொல்லி வருகிறேன். அனைத்து கிரிக்கெட்டர்களும் அதனை உணர்ந்திருப்பார்கள். சிக்ஸும் பவுண்டரியும் அடிக்கும் வீரர் ஒருவர் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். இதற்கு வேறு என்ன காரணம்?’ என்றார்.

`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..!' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக்கோப்பை  
 அனுபவம்

இதேபோன்று, பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டக் அகமது, ``அந்தப் போட்டியின்போது நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்தப் போட்டியில் இந்தியா தோற்ற பிறகு கெயில், ஹோல்டர் மற்றும் ரஸல் ஆகியோர் என்னிடம், `பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதை இந்தியா விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்தனர். அவர்களுக்கும் அதே உணர்வு இருந்திருக்கிறது” என்றார்.

பென் ஸ்டோக்ஸ் தொடங்கி வைத்த விவகாரம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு