Published:Updated:

யூகிக்க முடியாத அணி Vs தோற்காத அணி... வெல்வது யார்?! #NZvsPAK

Williamson, Boult, Henry ( AP )

இந்த உலகக் கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கணித்துக் கொண்டிருக்க, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டம் காட்டுகிறது.

Published:Updated:

யூகிக்க முடியாத அணி Vs தோற்காத அணி... வெல்வது யார்?! #NZvsPAK

இந்த உலகக் கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கணித்துக் கொண்டிருக்க, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டம் காட்டுகிறது.

Williamson, Boult, Henry ( AP )

யூகிக்க முடியாத அணிக்கும், வெல்ல முடியாத அணிக்கும் இன்று மோதல். நியூஸிலாந்து இன்னும் அரையிறுதியை உறுதி செய்யவில்லை. பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு நழுவிவிடவும் இல்லை. இங்கிலாந்தை வென்று அட்டவணையைக் கொத்து பரோட்டோ போட்டுவிட்டது ஆஸ்திரேலியா. எனவே, இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். அந்த வரிசையில் இன்று நிற்பது சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான்.

நியூஸிலாந்து, பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டி. நியூஸிலாந்து ஐந்து வெற்றிகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2 வெற்றி, 3 தோல்வி, 5 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். இதுவரை நியூஸிலாந்து அணி பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தைக் கூட செய்யவில்லை. பாகிஸ்தானில் கடந்த போட்டியில் சோயிப் மாலிக்கை உட்கார வைத்துவிட்டு, ஹாரிஸ் சோஹைலை களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 89 ரன்கள் அடித்து மிடில் ஆர்டரில் பலம் சேர்த்திருக்கிறார் ஹாரிஸ். அவருடன் ஹஃபீஸ் கைகொடுக்கம் பட்சத்தில், பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டர் வலுப்பெறும்.

Harris sohail
Harris sohail

நியூஸிலாந்தின் பலமே மிடில் ஆர்டர்தான். கேன் வில்லியம்சனின் ஆட்டம் நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல், இரண்டு சதம், ஒரு அரைசதம் உள்பட 373 ரன்கள் அடித்திருக்கிறார் வில்லியம்சன். அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் ராஸ் டெய்லர். வில்லியம்சனுக்கு எதிராக வியூகம் அமைக்காத பட்சத்தில், பாகிஸ்தான் பாடு திண்டாட்டம்தான்.

#NZvsPAK
#NZvsPAK

ஏனெனில், நியூஸிலாந்து ஓப்பனர்கள் பயங்கர சொதப்பல். இலங்கைக்கு எதிராக மட்டுமே முதல் விக்கெட்டுக்கு மார்டின் கப்டில் – காலின் மன்றோ ஜோடி 133 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு, நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். இந்த உலகக் கோப்பையில் மறு ஜென்மம் எடுத்திருக்கும் முகமது அமீரின் முதல் ஸ்பெலில்லில் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

Lockie Ferguson
Lockie Ferguson

இந்த உலகக் கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கணித்துக் கொண்டிருக்க, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டம் காட்டுகிறது. டிரென்ட் போல்ட் புது பந்தில் மிரட்டுகிறார் எனில், மிடில் ஓவர்களில் ஆட்டத்துக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தி வருகிறார் லாக்கி பெர்குசன். இவர்கள் வேகத்துக்கும் ஸ்விங்குக்கும் தப்பிப் பிழைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மட்டும் கடைசி நேரத்தில், மேட் ஹென்றி பந்தில் பிரித்து மேய்ந்துவிட்டார் பிராத்வெய்ட். ஒருவேளை, அவருக்குப் பதிலாக டிம் செளதி இன்று களமிறக்கப்படலாம். அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

பாகிஸ்தான் பேட்டிங், பெளலிங் என இரண்டு துறைகளில் இருக்கும் பிரச்னைகளைச் சரிக்கட்டிவிடலாம். ஆனால், ஃபீல்டிங்... இது அவர்களுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை. இந்த உலகக் கோப்பையில் இதுவரை 14 கேட்ச்களை மிஸ் செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் ஆறு கேட்ச்கள் டிராப். இந்த விஷயத்தில் நியூஸிலாந்தும், பாகிஸ்தானுடன் போட்டிபோடுகிறது. போட்டிக்கு இரண்டு கேட்சகள் வீதம் ஆறு போட்டிகளில் 12 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளது. குறிப்பாக, பெளண்டரி லைனில் நிற்கும் வேகப்பந்துவீச்சாளர்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், டிரென்ட்போல்ட். அவர் பிராத்வெய்ட் கேட்ச்சை பிடித்தது மட்டும்தான் பெரிதாகப் பேசப்படுகிறது. மிஸ் செய்தது அதிகம்.

NZvsPAK
NZvsPAK
``இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. பெரிய அணியை வீழ்த்த வேண்டுமெனில் அதிக கேட்ச்களை மிஸ் செய்யக் கூடாது. நாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பயிற்சி, பயிற்சி, பயிற்சி... இரண்டு நாள்கள் தொடர்ந்து கடின பயிற்சியின் மூலம் மட்டுமே அதை மேம்படுத்த முடியும்!’’
பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்

இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 106 சர்வதேசப் போட்டிகளில் 54–48 என பாகிஸ்தான் கை ஓங்கியிருக்கிறது. உலகக் கோப்பையிலும் 6–2 என முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான். போட்டி நடக்கும் பிர்மிங்ஹாமில் இன்று பிற்பகலில் மழை வர வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை

பாகிஸ்தான்

vs வெஸ்ட் இண்டீஸ்... 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து – 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை – மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியாவிடம் தோல்வி – 41 ரன் வித்தியாசம்

vs இந்தியாவிடம் தோல்வி – 89 ரன்கள் வித்தியாசம் (DLS)

vs தென்னாப்பிரிக்கா – 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

நியூஸிலாந்து

vs இலங்கை – 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்தேசம் – 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் – விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா – மழையால் போட்டி ரத்து

vs தென்னாப்பிரிக்கா – 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் – 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி